சமூகத்தில் உயர்ந்து வாழ...

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒவ்வொரு ஊரிலும் கல்வி கற்றவர்கள் என்பது சொற்ப சதவிகிதத்தினரே இருந்தார்கள். பெருவாரியான ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமலேயே வேளாண்மையிலும் கா
சமூகத்தில் உயர்ந்து வாழ...
Published on
Updated on
1 min read

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பாக ஒவ்வொரு ஊரிலும் கல்வி கற்றவர்கள் என்பது சொற்ப சதவிகிதத்தினரே இருந்தார்கள். பெருவாரியான ஏழை மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமலேயே வேளாண்மையிலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபடுத்தி வந்தனர்.

நாட்டில் நடப்பவைகளையும் அரசியல், விஞ்ஞானம், பொது அறிவு, மருத்துவம் என்று எதுவுமே அறியாத நிலையில் இருந்தனர். பின் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி நடைபெற்றபோது கல்வியில் மாறுதல் ஏற்பட்டது.

ஏழை மாணவனைக்கூட அப்போதைய ஆசிரியர்கள் சிறந்த மாணவராக பயிற்றுவித்தார்கள். அப்போதெல்லாம் "நீதி போதனை' என எல்லா வகுப்புகளிலும் நடத்துவார்கள். காலப்போக்கில் அதுவும் காணாமல் போயிற்று.

பெற்றோரை மதிப்பதுபோல் ஆசிரியர்களையும் அந்நாளைய மாணவர்கள் வணங்கியும் மதிப்பும் கொடுத்து வந்தார்கள். மிதிவண்டியிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ செல்லும்போது எதிரே தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் வந்தால், இறங்கி அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு பிறகு சைக்கிளை ஓட்டிச் செல்லும் அந்நாளைய மாணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இதைப்போல் இன்றைய மாணவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. அப்படி எங்கேயாவது இருந்தால் அந்த ஆசிரியர் மிகவும் கொடுத்துவைத்தவர். சமூகத்தில் ஆசிரியர் என்றாலே பெருமையும் மதிப்பும் இருந்தது.

இந்நாளைய ஆசிரியர்களில் சிலர் மட்டுமே, காலம் இவர்களை மாற்றியதா அல்லது இவர்கள் மாறினார்களா என கேள்வி கேட்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் மாணவர்களுக்கு நடத்த வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறும் உலக சரித்திரத்தில் சிறந்து விளங்கிய தலைவர்களின் வரலாறும் தான் பேசும் தமிழ் மொழியின் மூலம் விளக்க வேண்டும்.

அந்நாளில் குடும்பத்தில் தான் படிக்காவிட்டாலும் தன் மகனை சான்றோர் மதிக்க படிக்க வைத்தனர். அவர்களும் தகப்பனார் சொல்வதைக் கேட்டு மிகச் சிறந்த முறையில் ஒழுக்கமாக நடந்து சிறப்பாகப் படித்து சிறந்த கல்வியாளர்களாக மாறினார்கள்.

ஆனால், இன்றைய மாணவர்களில் சிலர் மதுவின் பிடியிலும் புகைப்பிடித்தல், போதைக்கு அடிமையாகுதல், இரவுக் களியாட்டம் என்ற கேளிக்கைகளில் இறங்கி இளமையை வீணாக்குகின்றனர். அரசு தடை செய்தும் கல்லூரியில் சில மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் மீண்டும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகளை உடனே நடத்தத் தொடங்க வேண்டும். இந்த விஷயத்தை அரசு உடனே கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் சிறந்த ஆட்சியாளர்களாகவும் அரசியல் விற்பன்னர்களாகவும் பொறியாளர், மருத்துவர் மற்றும் இன்னபிற துறைகளில் சிறந்து விளங்க இது மிகவும் வழிவகுக்கும்.

கணினியில் எவ்வளவு மாற்றங்களும் புரட்சியும் ஏற்பட்டாலும் மனம் என்னும் தூய்மையில் மாசு ஏற்படா வண்ணம் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் சமூகத்தில் உயர்ந்து வாழ்வார்கள். நாடும் வீடும் உயரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com