களிமண் காலம்!
வரலாற்று காலத்துக்கு முன், ஆதி மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் மழையினால் நிலத்தில் ஏற்பட்ட சேற்றில்


வரலாற்று காலத்துக்கு முன், ஆதி மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் மழையினால் நிலத்தில் ஏற்பட்ட சேற்றில் (சகதி) மனிதன் நடந்து சென்றதால் அவனது கால்கள் பதிந்து குழி போன்ற தோற்றம் உருவாகியது. அக் குழியில் நீர் தேங்கியது. சூரியனின் வெப்பத்தாலும் காற்றாலும் நீர் வற்றி குழிந்த சேறு கடினத் தன்மையடைந்தது. ஓரிரு நாள்கள் கழிந்த பிறகு அப்பகுதியாகச் சென்ற ஆதி மனிதன் அதைப் பார்த்து வியந்து அதை அப்படியே வெட்டி பெயர்த்தெடுத்தான். தான் தங்கியிருந்த பகுதியில் காய், கனி, கிழங்கு போன்றவற்றுடன் அதையும் அழகுக்காக வைத்திருந்தான். அப்போது திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. தீயில் சிக்கினால் கருகிவிடுவோம் ஆபத்து என்பதைத் தெரிந்து வைத்திருந்த அவன் அங்கிருந்து ஓடினான்.
தீ அடங்கிய பிறகு தான் தங்கியிருந்த இடத்தைப் பார்க்கச் சென்றான். அங்கே தான் வைத்திருந்த காய், கனி, கிழங்கு ஆகியவை வெவ்வேறு பக்குவத்தில் வெந்தும் கரிந்தும் கிடந்ததைப் பார்த்தான். அவற்றை எடுத்து ருசித்தபோது கிழங்கும் காயும் சுட்டதால் தனிச்சுவையுடன் இருந்ததைப்பார்த்து மகிழ்ந்தான். அப்படியே சேற்று மண்ணையும் பார்த்தபோது அது மேலும் இறுகி கடினமான ஓடு போல மாறியிருந்ததைக் கண்டு இரட்டிப்பு வியப்பை எய்தினான். தீயானது சில பொருள்களை இளக்கியும், சில பொருள்களைக் கெட்டிப்படுத்தியும் உருமாற்றுகிறது என்பதை அறிந்துகொண்டான்.
களிமண் பொருள்கள் தோன்றிய காலம்:
களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்கள் எக்காலத்திலிருந்து தோன்றியிருக்கக் கூடும்? ஆதிகால மனிதன் வாழ்ந்த காலத்திலா? கற்கால மனிதன் வாழ்ந்த காலத்திலா? அல்லது செப்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்று வரலாற்று அறிஞர்கள் வகுத்த காலத்திலா? இதை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் மூலம் அறியலாம்.
ஆரம்ப காலங்களில் ஆதி மனிதர்கள் வாழ்ந்துமுடிந்த பகுதிகளில் அகழாய்வு செய்து கிடைக்கப்பெற்ற பொருள்களை வைத்து, வரலாற்று அறிஞர்களால் நிர்ணயிக்கப்பட்ட காலங்களைக் கீழ்க்கண்டவாறு அறியலாம்:
1. பழங்கற்காலம் - கி.மு. 50,000 - 10,000
2. இடைக்கற்காலம் - கி.மு. 10,000 -8,000
3. புதிய கற்காலம் - கி.மு. 8,000 - 4,000
4. செம்பு அல்லது செப்புக் காலம்
கி.மு. 7,500
5. வெண்கலக் காலம் - கி.மு. 4,000
6. இரும்புக் காலம் - கி.மு. 3,000
இவைபோல பட்டியலிடப்படாத ஒரு காலமும் இருந்திருக்கிறது. அதுதான் களிமண் காலம்.
களிமண் பொருள்கள் தோன்றிய காலத்தின் சான்றுகள்:
1. கி.மு. 29,000 - 25,000 காலகட்டத்தில் களிமண்ணால் செய்து பின் சுடப்பட்ட பெண் உருவச் சிலை, செக் குடியரசு நாட்டில், பர்னோவில் உள்ள மொரவியன் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கனபரிமாண உருவச்சிலையை "பெண் கடவுள்' என்று அழைக்கின்றனர். இதனை "வென்யு ஆஃப் டோல்னி வெஸ்டோனிஸ்' என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.
2. சீனாவின் ஜியாங்ஸி பிரதேசத்தில் ஜியான்ரெண்டாங் குகைகளிலிருந்து கி.மு. 20,000 ஆண்டுகளுக்கு முன் உள்ள ஆரம்பகால மண் பாத்திரப் பொருள்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவையிரண்டும் உடைந்த நிலையில்தான் கிடைத்தன. உணவு சமைக்க இவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.
இத்தகைய மண் பாத்திரங்கள் விவசாயம் தோன்றுவதற்கு முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
3. சீனத்தின் உசான்யன் குகையில் மிகப் பழமையான மண் பாத்திரத்தின் துண்டுகள் கிடைக்கப்பெற்றன. இதன் காலம் கி.மு. 18,000 ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.
4. ரஷ்யாவின் தூரக்கிழக்குப் பகுதியான சைபீரியாவின் அமூர் (அமிர்த தாரை - தேனாறு) ஆற்றுப் படுகையில் மண் பாத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் காலம் கி.மு. 14,000 - 13,600 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சோவியத் யூனியன் என்று அழைக்கப்பட்ட பிளவுபடாத ரஷ்ய நாட்டில் அமு டார்யா,சீர் டார்யா என்று இரு ஆறுகள் ஓடின. அவற்றின் மூலப் பெயர் சம்ஸ்கிருதம் என்றும் அவை முறையே அமிர்த தாரை (தேனாறு), ஷீர தாரை (பாலாறு) என்றும் இந்தியவியலாளர்கள் கூறுகின்றனர்.
5. ஜப்பானின் மிகத் தொன்மையான ஜோமோன் பண்பாட்டுக் காலத்தில் மண் பாத்திரங்கள் செய்யப்பட்டுள்ளன. மண் பாத்திரங்களைச் சுற்றி, மர நார்களைக் கயிறுபோலச் சுற்றி உருவாக்கியுள்ளனர். இதன் காலம் சுமார் கி.மு. 14,000 ஆண்டுகளாகும்.
6. இந்தியப் பகுதிகளில் கி.மு. 9,000 - 8,000 ஆண்டு காலங்களில் புதிய கற்காலத்துக்கு முன்னரே சோபானி முண்டா என்ற பழங்குடிப் பகுதிகளில் மண் பாத்திரங்களைப் பயன்படுத்தியதற்கு பழமையான ஆதாரங்கள் உள்ளன.
7. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே மண்பாத்திரத் தாழிகள் பயன்படுத்தி வந்துள்ளதாக அ. ராகவன், "ஆதிச்சநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட சான்றுகளிலிருந்து களிமண்ணால் செய்த பொருள்களின் காலம்
கி.மு. 29,000-ஆம் ஆண்டுகளிலிருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
சீனத்தின் ஜியான்ரெண்டாங் குகையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மண்பாத்திரச் சான்றுப்படி, மண் பாத்திரங்களைச் செய்து சமைத்துப் பார்த்த பின்பு, உணவுப் பயிர்களைப் பயிரிடும் சிந்தனை தோன்றி வேளாண்மைக் காலம் தொடங்கியிருக்கலாம் என்று கருத இடம் உண்டு.
மண் பாத்திரங்களைச் செய்யும் தொழில் தொடங்கிய பிறகு விவசாயிகளாகவும் ஆதி மக்கள் மாறினர் என்று ஸ்டீவ் பார்கர், பிரைன் வில்லியம்ஸ் ஆகியோர் தொகுத்து, மைல்ஸ் கெல்லி என்ற பதிப்பாளர் மூலம் 2004-ஆம் ஆண்டு வெளியிட்ட வினா - விடை நூற்களஞ்சியம் தெரிவிக்கிறது.
ஆரம்ப காலங்களில் மண் பாத்திரங்கள் வெறும் கைகளால், வேறு கருவிகள் உதவியின்றித்தான் செய்யப்பட்டன. பின்னர் மண் பாத்திரத்தின் வட்டவடிவ அடித்தட்டின் மூலம் "சக்கரம்' தோன்றி, சக்கரத்தின் உதவியுடன் செய்துள்ளனர். வட்ட வடிவ அடித்தளத்தின் மேல் பகுதியில் கயிறு போன்ற உருளை வடிவத்தைச் சுற்றிச்சுற்றி உயரமாக செய்துள்ளனர். ஓரளவு உயரத்துக்குப் பின் அதனைச்சீரான வடிவத்துக்குக் கொண்டுவர தண்ணீர்கொண்டு தேய்த்துதேய்த்து ஒழுங்குபடுத்தி, தொட்டி கிண்ணம், சட்டி போன்ற வடிவத்தை கைகளினால் உருவாக்கியுள்ளனர்.
இதன் பின்புதான் தட்டை வடிவத்தைச் சக்கரமாகப் பயன்படுத்தி அதன் மேல் மண் பாத்திரத்தினை உருவாக்கியிருக்க வேண்டும்.
மண்பாண்டக் கலைஞர்களின் (குயவர்களின்) சக்கரம்:
ஆரம்பத்தில் தொன்மைக்கால மனிதன் களிமண்ணை உருளை போல் செய்து அதனை அழுத்தி, அடித்து தட்டையாகச் செய்தபோது அதுவட்ட வடிவமாக ஆனது. இதன் வெளிப்புறம் ஒழுங்கற்ற வட்ட வடிவமாக இருக்கும்.
வெளிப்புற ஒழுங்கற்ற வடிவத்தினை சரி செய்வதற்கு மண் வட்டத்தைச் சமதளத்தில் செங்குத்தாக வைத்து உருளச் செய்து சரி செய்திருக்க வேண்டும். வட்டவடிவம் செங்குத்து கோணத்தில் உருளும் தன்மையையும் கிடைமட்டக் கோணத்தில் சுற்றும் தன்மையையும் பெற்றிருப்பதைக் கண்டறிந்தான்.
இச் சமயத்தில்தான் சக்கரம் என்ற ஒரு சிந்தனை மனிதனுக்கு முதன் முதலில் வந்திருக்க வேண்டும். இதன் மூலம் சுற்றும் தன்மையில் களிமண்ணால் வடிவங்களைப் படைக்கத் தொடங்கினான். எனவே அதனைக் குயவர்களின் சக்கரம் எனக் கூறுகின்றனர்.
மெசபடோமியாவில் மண்பாண்டச்சக்கரம் கி.மு. 5,500 - 4,000 ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
கற்காலம், வேளாண்மைக் காலம், செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என்று காலங்களைப் பகுத்தாய்ந்து ஆராய்ச்சி செய்து மனிதனின் வரலாற்றைப் பதிவு செய்திருப்பதால் வேளாண்மைக் காலத்துக்கும் கற்காலத்துக்கும் இடையில் மண் பாத்திரங்களைச் செய்ய மனிதன் கற்ற "களிமண் காலத்தை'யும் பதிவு செய்வதும், வரலாற்றில் இடம்பெறச் செய்வதும் அவசியமாகும். இது பரிணாம வளர்ச்சிச் சங்கிலியில் முக்கியமான கண்ணியாகும்.
இதைப் பதிவு செய்வதுடன் மண்பாண்டங்கள் கிடைத்த இடங்களிலும் புதிதாக மண் பாண்டங்கள், ஓடுகள் கிடைக்கும் இடங்களிலும் ஆய்வு செய்தால் மனிதகுல வரலாற்றைத் தொடர்ச்சியாக அறியவும் ஆய்வு செய்யவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...