நீங்கள் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கோ அல்லது இனத்திற்கோ அவமானம் இழைத்துவிட்டதாகக் கருதப்படும் நபர்களின் உயிரை மாய்க்கும் கொடூரமான செயலே "கெளரவக் கொலை' என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் தீர்மானிக்கும் திருமண ஏற்பாடுகளை மறுப்பதாலோ அல்லது தனது வாழ்க்கைத் துணையை தானே தேடிக் கொள்ளும் நிலை ஏற்படும்போதோ பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொலைபாதகச் செயலே இந்த வார்த்தையால் அழைக்கப்படுகிறது. கொடுமைப்படுத்தும் ஆண்களிடமிருந்து விலகி மணமுறிவுக்கு உரிமை கோரும்போதும் அல்லது திருமண உறவை மீறிய தகாத உறவுகளில் ஈடுபடுவதாக சந்தேகம் எழும்போதும் இவ்வகைக் கொலைகள் நடைபெறுவதாக அறிகிறோம்.
கெளரவம் தொடர்பான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஓர் அமைப்பு உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சராசரியாக ஐந்தாயிரம் கெளரவக் கொலைகள் நிகழ்வதாகத் தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகளின் கணிப்பும் இதே எண்ணிக்கையை உறுதி செய்கிறது. பெரும்பாலான குற்றங்கள் தெற்காசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்வதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள பல மகளிர் அமைப்புகள், உலகெங்கிலும் இருபதாயிரம் பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் கெளரவம் என்ற பெயரால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கின்றன. வேறு சில ஆய்வு முடிவுகள், வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளிலும் இவ்வகைக் குற்றங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கின்றன. கெளரவக் கொலைகள் குறித்த ஆய்வில் முக்கியமான சிக்கல் என்னவென்றால் ஆதாரங்களும் தரவுகளும் சரிவரக் கிடைப்பதில்லை என்பதுதான்.
கெளரவக் கொலைகள் எனும் துர்மரணங்களால் ஆண்டொன்றுக்கு ஆயிரம் பேர் இந்தியாவில் மரிக்கிறார்கள் எனும் தகவலைக் கேள்விப்படும்போது எந்தவிதத்திலும் இது நமது நாட்டிற்கு கெளரவம் தரும் செய்தியாக இல்லை. குடும்பங்களின் ஒப்புதல் பெறாமலும் சாதி, மத எல்லைகளை மீறியும் திருமணங்கள் நிகழும்போது கெளரவக் கொலைகள் நிகழ்கின்றன. திருமணம் குறித்த முடிவுகளில் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் ஒத்துப்போகாத போதுதான் இவ்வகைக் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இந்தியாவில் வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் போன்ற இடங்களில் கெளரவக் கொலைகள் அதிகமாக நிகழ்கின்றன.
பெற்றோர்களின் சிலவகை நியாயங்களை நாம் மறுப்பதற்கில்லை. சீராட்டி, பாராட்டி, தோளிலும், மார்பிலும் சுமந்து சுமைகளையெல்லாம், சுகமாய் அனுபவித்த பெற்றோருக்கு 20 வருடங்களில் தாங்கள் வகுத்த எல்லைகளைக் குழந்தைகள் மீறுவது என்பது சோகமாய் தாக்கும் சம்பவமாக அமையும் என்பதை நாம் மறுக்க முடியுமா?
எத்தனையோ குடும்பங்களில் பெண் தனது துணையை தானே தேடிக் கொள்ளப் போகிறாள் என்பதை அறிய நேரிடும்போது பெற்றோர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவரவர் மனநிலை, மனமுதிர்ச்சி, உலக அனுபவங்கள் ஆகியவற்றைப் பொறுத்தது.
மகளுக்கு அமையப்போகும் வாழ்க்கைத் துணைவன் நல்லவனா இல்லையா என்பதைக் காட்டிலும் உற்றார், உறவினர், அண்டை, அயலார் எப்படி தங்களைப் பார்ப்பார்கள் என்பதில்தான் பெற்றோரின் கவனம் செல்கிறது. மூத்தவள் இப்படிச் செய்தால் இளையவள் கதி என்னவாகும் என்கிற நினைப்புகளெல்லாம் பொறுப்புணர்ச்சி மிக்க பெற்றோரை நிலைகுலையச் செய்கிறது என்பதெல்லாம் சமூக யதார்த்தங்களை சீர்தூக்கிப் பார்ப்போர் பார்வையில் பெற்றோர் பக்க நியாயங்களாகவேபடுகின்றன.
கல்வி நிலையங்களுக்கு கல்விபயிலச் செல்லும் இளைஞர்களும் யுவதிகளும் கல்விக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் எதிர்பார்ப்பும் மிகச்சரியானதே. மணவாழ்க்கை வேண்டுமென்கிற பருவத்திற்கும், வேண்டாம் என்கிற பொருளாதாரத்திற்கும் இடையில் சிக்கித்தவிக்கும் இளம் தலைமுறைக்கு வாழ்க்கை குறித்த பார்வை சரியில்லாமல் போனால், அவசரத்தில் முடிவெடுத்து வாழ்வை அவலத்தில் முடித்துக் கொள்ளும் நிலை வரும். இதை யார்தான் வரவேற்பார்கள்? இவையெல்லாம் பெரும்பாலான பெற்றோர்கள், ஆசிரியர்களின் நிலைப்பாடாக இருந்தாலும், வேறு சில சிந்தனைகளையும் நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
என்றைக்கு மேலைநாட்டுக் கல்வியை ஏற்றுக் கொண்டோமோ அன்றைக்கே அதன் விளைவாக ஏற்படும் வாழ்வியல் மாற்றங்களையும் நாம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். கல்வி நவீனமயமாதலுக்கான கருவி என்பர் சமூகவியலார். மேலைநாட்டுக் கல்வியை பயின்றோரெல்லாம் தாங்களே தங்கள் வாழ்க்கைத் துணையை தேடிக் கொண்டாக வேண்டுமென்றோ அல்லது அவ்வகைக் கல்வி இல்வாழ்க்கைத் துணையை தானே தேடும் நிலையை ஏற்படுத்துமென்றோ நாம் கூறவில்லை. ஆனால் ஒன்றை நாம் உணர்ந்தாக வேண்டும்.
65 ஆண்டுகளுக்கு முன் இந்தியா விடுதலையடைந்தபோது எழுத்தறிவு பெற்றோரின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தது. தேசிய அளவில் எழுத்தறிவுபெற்ற பெண்களின் எண்ணிக்கை 8.9 விழுக்காடு எனும் நிலையில் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 1950-51 வாக்கில் ஆரம்பப்பள்ளிகளில் பயின்ற பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 54 லட்சமாக இருந்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2004-05 வாக்கில் இந்த எண்ணிக்கை 6.11 கோடியாக உயர்ந்தது. உயர்கல்வியை நாடிச் சென்ற பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. 1950-51 ஆம் ஆண்டு உயர் கல்வி பயின்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு என்ற அளவில் இருந்தது. 2005-06 வாக்கில் இந்த எண்ணிக்கை 40.5 விழுக்காடாக உயர்ந்தது.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களும் பெண்களும் கல்வி, தொழில், வியாபாரம் போன்ற பல நிலைகளில் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டிய நிலையை புதிய கல்வித் திட்டங்கள் உருவாக்கித் தந்துள்ளன என்பதை நாம் மறுக்க முடியுமா? இதையெல்லாம் அறியாதவர்களா நாம்? இதையெல்லாம் அறிந்து தானே நாம் நமது கிராமங்களிலிருந்தும், சிற்றூர்களிலிருந்தும் நமது குழந்தைகளை நகரங்களிலுள்ள கல்விநிலையங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அதன் பின் நவீனமயமாதலுக்கு உள்ளான நம் குழந்தைகளை நாமே சாடி என்ன பயன்?
வெவ்வேறு காலம் மற்றும் இடம் போன்ற பரிமாணங்களுக்கு பழகிப்போன நம் குழந்தைகளின் சிந்தனை, சொல், செயல் இவையெல்லாம் நம்மையொத்தவையாகவே இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வகை நியாயம் என்பது புரியவில்லை. தம் துணைவர்களைத் தாமே தேடும் நிலை வந்தால் அவர்களின் உயிரைப் போக்கும் அளவுக்குத் துணிந்தால் அதை பண்பாட்டுச் சிதைவின் உச்சம் என்று கூறுவதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
ஒரு மனிதன் உழைப்பதும் ஓடுவதும், சாதிப்பதும், சம்பாதிப்பதும் அவனது குழந்தைகளுக்காகத்தானே? நாம் ஏற்பாடு செய்யும் துணைவர்களை நம் குழந்தைகள் ஏற்றுக் கொண்டால் சரி. பிடிவாதமாக மறுத்தால் அவர்கள் போக்கில் விட்டுவிடலாம். நம் குழந்தைகள் "நம்மால் உலகிற்கு வந்தவர்கள்' என்ற எண்ணத்தைக் காட்டிலும் "நம் மூலம் வந்தவர்கள்' என்ற எண்ணம் மேலோங்கினால் மாற்றம் எனும் மனிதத் தத்துவம் மனதின் வசப்படும்.
கட்டுரையாளர்: மதுரை காமராசர் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் மூத்த பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்

ஓவர்கள் குறைக்கப்படாது: ஆர்சிபி பந்துவீச்சு; அணியில் வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு!

போட்டியால் திணறும் காங்கிரஸ்! கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிப்பு!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

