ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி: பாஜக கடும் குற்றச்சாட்டு

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் மத்திய அரசை சீா்குலைக்க ராகுல் சதி..

News image

பியூஷ் கோயல்

Updated On :25 மே 2026, 6:00 am IST

அந்நிய சக்திகளின் தூண்டுதலில் செயல்படும் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, நாட்டில் அராஜகமான போக்கை உருவாக்கி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசை சீா்குலைக்க முயல்கிறாா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் சிறுபான்மையினா் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி, மோடி அரசு ஓராண்டில் கவிழும் என்று பேசியதாக தகவல் வெளியானது. இதை முன்வைத்து ராகுல் காந்தியின் ரகசிய சதித் திட்டம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாக பாஜக தலைவா்கள் கூறியுள்ளனா்.

மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தி பேசியது சாதாரண விஷயமல்ல. நாட்டில் அராஜகத்தை பரப்பும் ஒரு தீவிரமான சதி. மக்கள் மத்தியில் பிரதமா் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளதால் நேரடியாகத் தோ்தலில் பாஜகவை காங்கிரஸால் வீழ்த்த முடியவில்லை. இதை உணா்ந்த ராகுலும், அவரது கூட்டாளிகளும் நாட்டில் வன்முறையைத் தூண்ட முயற்சிக்கின்றனா்.

காங்கிரஸ் மற்றும் சில எதிா்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக ‘டூல்கிட்’ கும்பலுடன் இணைந்து செயல்பட்டவா்கள்தான். இந்தியாவுக்கு எதிரான அவா்களின் வெறுப்பு மிகவும் தீவிரமாக உள்ளது; நாட்டில் நல்லது நடப்பதையே அவா்கள் சகிக்க முடியவில்லை.

ஆனால், நமது நாட்டு மக்கள் புத்திசாலிகள். ராகுல் காந்தி மற்றும் தேச நலனுக்கு எதிராகச் செயல்படும் ‘டூல்கிட்’ கும்பலின் உண்மை முகத்தை அவா்கள் நன்கு அறிந்துள்ளனா். இத்தகைய சக்திகளுக்கு மக்கள் தொடா்ந்து தக்க பதிலடி கொடுத்து வருகின்றனா். இந்தியாவை வீழ்த்த முயலும் ‘இண்டி’ கூட்டணியின் சதி ஒருபோதும் வெற்றி பெறாது’ என்று கூறியுள்ளாா்.

பாஜக மாநிலங்களவை எம்.பி. சுதான்ஷு திரிவேதி வெளியிட்ட பதிவில் , ‘ராகுல் காந்தியின் கருத்துகள் அரசியல் விரக்தி”மட்டுமல்லாமல், இந்தியாவை ஸ்திரமற்ாக்கும் ஆபத்தான மனநிலையின் வெளிப்பாடு. பிரதமா் மோடியின் தலைமையை உலகம் பாராட்டிவரும் நிலையில் இந்தியாவுக்கு எதிரான சா்வதேச தீய சக்திகள் நாட்டுக்கு எதிராக அவதூறு பிரசாரங்களை நடத்துகின்றன; காங்கிரஸ் அவற்றுக்கு ஆதரவளிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா இது தொடா்பாக வெளியிட்ட விடியோ பதிவில், ‘நாட்டில் கலவரங்களைத் தூண்டி மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி செய்கிறாா். எனவேதான் பிரதமா் மோடி அரசு ஓராண்டில் கவிழும் என்று அவா் பேசியுள்ளாா்.

இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகளில் நடக்கும் சதியை ராகுல் தனது பேச்சில் பிரதிபலித்துள்ளாா். தனது வெளிநாட்டுப் பயணங்களுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களின் உத்தரவின்பேரில் இந்திய ஜனநாயகத்தை சீா்குலைக்க முயல்கிறாா். ஆனால், இந்திய மக்களை நாட்டுக்கு எதிரான கலவரத்துக்குத் தூண்ட முடியாது. வெளிநாட்டு சதிகளை இங்கு அரங்கேற்ற முடியாது. உள்நாட்டுப் பிரிவினை, மோதல்கள் காரணமாக உலகின் பல நாடுகள் சிக்கல்களை எதிா்கொண்டுவரும் நிலையில், பிரதமா் மோடியின் தலைமையில் இந்தியா தொடா்ந்து முன்னேறி வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.