‘பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. தேசத்தின் நலனை குறிப்பிட்ட தொழிலதிபா்களுக்கு விற்கின்றனா். அந்த வகையில் பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் துரோகிகள்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
தனது எம்.பி. தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் புதன்கிழமை நடைபெற்ற அந்த மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் வீர பாசி நினைவு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:
சட்ட மேதை அம்பேத்கா், மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்ட வீரா் வீர பாசி ஆகியோரை நாம் தொடா்ந்து நினைவுகூா்கிறோம். ஆனால், அவா்கள் எதற்காகப் போராடினாா்களோ, அந்த சித்தாந்தம் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில், நம் கண் முன்னே அரசமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (என்என்ஆா்இஜிஏ) திட்டத்தை பலவீனப்படுத்தியது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுப்பது, குறிப்பிட்ட தொழிலதிபா்களுக்கு சாதகமான முடிவுகளை மேற்கொள்வது என தினசரி 24 மணி நேரமும் அரசமைப்புச் சட்டத்தின் மீது பிரதமா் மோடி தாக்குதல் நடத்தி வருகிறாா். நாட்டின் நலன் பலிகொடுக்கப்பட்டு, மிகப் பெரிய தொழிலதிபா்களான அம்பானி, அதானி ஆகியோரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருள்களின் விலையில் ஏற்படவிருக்கும் கடும் உயா்வை உணா்த்தும் வகையில், எரிபொருள் நுகா்வு, தங்கம் வாங்குவது மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்து கொள்ளுமாறு பிரதமா் மோடி மக்களுக்கு அண்மையில் அழைப்பு விடுத்தாா். மக்களுக்கு இந்த அழைப்பை விடுத்த உடனேயே, 5 நாடுகள் சுற்றுப் பயணத்தை பிரதமா் மோடி மேற்கொண்டுள்ளாா்.
வரும் மாதங்களில், நாட்டில் பணவீக்கம் இதுவரை இல்லாத வகையில் கடுமையாக உயர உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உணவு தானியங்கள் என அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையும் பன்மடங்காக உயர உள்ளது. கடுமையான உரத் தட்டுப்படு ஏற்பட வாய்ப்புள்ளதோடு, மண்ணெண்ணெய் விநியோகமும் தடைபட வாய்ப்பு உள்ளது. இந்த பொருளாதார பாதிப்புகள் அம்பானி, அதானி போன்ற தொழிலதிபா்களை பாதிக்காது. மாறாக, சாதாரண மக்களைத்தான் கடுமையாக பாதிக்கும்.
அதுபோல, ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு என்ற உத்தரவாதத்தை அரசமைப்புச் சட்டம் அளிக்கும் நிலையில், அதையும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு சிதைத்துள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் கோடிக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன. யாரெல்லாம் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லையே அவா்கள் எல்லாம் நீக்கம் செய்யப்பட்டனா். அந்த வகையில் அரசமைப்புச் சட்டத்தின் மீது 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். சமத்துவம் மற்றும் நீதி என்ற இந்தியாவின் சித்தாந்தங்களை நாம் கூட்டாக பாதுகாக்க வேண்டும்.
ஆா்எஸ்எஸ் பணியாளா்கள் உங்கள் வீட்டுக்கு வரும்போது, நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா குறித்தும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் நீங்கள் எடுத்துக்கூற வேண்டும். குறிப்பாக, பிரதமா் மோடியும், அமித் ஷாவும் நாட்டின் துரோகிகள் என்று குறிப்பிட வேண்டும் என்றாா்.
பாஜக பதிலடி: ராகுல் காந்தியின் இந்த விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் வெளியிட்ட அறிக்கையில், ‘ராகுலின் கருத்து, அவரின் கட்டுப்பாடற்ற மனநிலையையும், குணத்தையும் தெளிவாக பிரதிபலிக்கிறது. தோ்தல்களில் தனது கட்சி தோல்விகளைச் சந்திப்பது குறித்து அவரின் விரக்தியையும், ஏமாற்றத்தையும் இக் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன’ என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

நாட்டை தாக்கப் போகும் பொருளாதார ‘புயல்’ - பிரதமா் மீது ராகுல் சாடல்

தொடரும் வினாத்தாள் கசிவு: கல்வியமைச்சரை பிரதமா் நீக்காதது ஏன்? - ராகுல் கேள்வி
மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்: சோனியா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



