தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குழந்தைகளை நேசிப்போம்!

குழந்தைகள் உரிமை குறித்த வரைமுறைகளை ஐ.நா. சபை 1989-இல் ஏற்படுத்தியது. அதனை இந்தியா 1992-இல் ஏற்றுக் கொண்டது.

News image
Updated On :27 ஜூலை 2014, 8:55 pm

குழந்தைகள் உரிமை குறித்த வரைமுறைகளை ஐ.நா. சபை 1989-இல் ஏற்படுத்தியது. அதனை இந்தியா 1992-இல் ஏற்றுக் கொண்டது. அதன்படி குழந்தைகளுக்கு வாழ்வுரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பங்கேற்பிற்கான உரிமை ஆகிய நான்கு உரிமைகள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 82, ஏழு வயதிற்குட்பட்ட குழந்தை எதை செய்தாலும், அது குற்றமாகக் கருதப்பட மாட்டாது என்று கூறுகிறது. ஏனெனில், இச்சட்டம் குற்ற மனமில்லாச் செயல் குற்றமாகாது என்னும் விதியின்படி தண்டனைகளை நிர்ணயிக்கிறது. இதன்படி, 7 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு குற்றமனம் இருக்கும் என்று கூற முடியாது. மேலும், 7 வயது முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எதைச் செய்தாலும், அக்குழந்தையின் மனப் பக்குவத்தையும் பொருத்தே அச்செயல் குற்றச் செயலா இல்லையா எனத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறது.

அந்தக் காலத்தில் கூட்டு குடும்ப முறை இருந்தது. அப்போது குழந்தைகள் மீது இவ்வளவு வன்மம் இல்லை. குழந்தைகள் தவறு செய்து பெற்றோர்கள் கண்டித்தாலும், அரவணைக்க தாத்தா, பாட்டிகள் இருந்தனர். இப்போது, அன்பு, பண்பு, பாசத்தை விட பணமே பிரதானமாகி, பெற்றோர் பணம் சம்பாதிக்க அலைவதால் குழந்தைகள் விரும்பும் அன்பு அன்னியமாகி விட்டது. இப்போது, பெற்றோர்களும் பிள்ளைகளும் சுதந்திரமாக இருக்கும் வளர்ப்பு முறையே எங்கும் பின்பற்றப்படுகிறது. இம்முறையில் பெற்றோர் குழந்தைகளிடம் அதிகமான பொறுப்புகளைத் தந்து, அவை நிறைவடையத் தேவையான சுதந்திரத்தையும் கொடுத்து, அவர்களின் திறமைகள் மற்றும் ஆற்றல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வளர்க்கின்றனர். இதில், தங்களுக்கு வழிகாட்ட, அன்பு காட்ட, அனுபவரீதியாக எடுத்துச் சொல்ல தாத்தா, பாட்டி, உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், குழந்தைகள் பெற்றோரைப் புரிந்து கொள்ளாமல், அவர்கள் எதிர்பார்க்கும் ஆற்றலை வெளி கொணர முடியாமல் பெரும் பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். பெற்றோரும் பிள்ளைகள் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்.

மனித உரிமைகளில் அடிப்படை உரிமை அனைவரும் கல்வி அறிவு பெறுவது ஆகும். மக்களிடையே காணப்படும் அறியாமை இருளை அகற்றி அவர்கள் உள்ளத்தில் ஞான தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமான 6-லிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வி அடிப்படை உரிமையாக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. 6-லிருந்து 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அடிப்படை உரிமையாகக் கல்வி அமையும்.

இந்த நிலையில் குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வியைப் பெற வரும் மாணவர்களை ஆசிரியர்கள் பொன்னெனப் போற்றி கல்வி போதிக்க வேண்டும். அப்போதுதான் நவீன இந்தியாவின் வருங்காலச் சிற்பிகளான மாணவர்கள் நம் நாட்டை நல்ல முறையில் வழி நடத்திச் சென்று உலக அரங்கில் மிளிரச் செய்வார்கள்.

"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு' என்ற பொன் மொழிக்கு இலக்கணமாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக மாற்றுவதோடு நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியருக்கு உண்டு. மற்ற பணிகளைப் போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் பொருளாதாரத்திற்கான பணி அல்ல.

ஆசிரியப் பணி என்பது தனது வாழ்வையே ஆதாராமாக்கும் பணி. மாணவர்களின் வாழ்க்கை எனும் தேர் ஓட உதவும் அச்சாணி. நல்ல திறமையான மாணவர்களை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளதை ஆசிரியப் பெருமக்கள் உணர வேண்டும். எனவே, அந்தப் பணிக்கு, சிறந்த, தகுதியான அர்ப்பணிப்பு உணர்வுள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். குழந்தைகளை அன்புப் பாராட்டி, அவர்கள் செய்யும் செயல்களைக் கண்டு மகிழ்ந்து, அங்கீகரித்து, ஆரத் தழுவி, உற்சாகமூட்டி, உத்வேகத்தை கொடுத்து வளர்த்தால்தான் அந்தக் குழந்தை அந்தப் பெற்றோரை, ஆசிரியர்களை தனது சிறந்த வழிகாட்டிகளாகக் கருதி அன்புப் பாராட்டும். அப்போது, குழந்தைகள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் புரிந்து கொண்டு அவர்களை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவமும் உருவாகும்.

எனவே, இந்தகால குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்தும், ஆசிரியப் பெருமக்களிடமிருந்தும் எதிர்பார்ப்பது கண்டிப்பை அல்ல, அன்பையும், ஆதரவையும்தான்.

சில குழந்தைகள் தங்கள் மீது ஏவி விடப்படும் வன்முறைகளை எந்த விதமான எதிர்ப்பும் காட்டாமல் மெளனமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இதுவே, பிள்ளைகள் பின்னாளில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று, கோழைகளாகி மெளனமாக வன்முறைகளை ஏற்றுக்கொள்ள காரணமாகிறது.

குழந்தைகளின் புன்னகையிலேயே நாம் இறைவனை காண்கிறோம். குழந்தைகளை இறைவனாக பார்க்கா விட்டாலும், குற்றவாளிகளாக பார்க்கும் மனோநிலை பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் மாற வேண்டும்.

மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதற்கு முன்பாக ஆசிரியர்களும், பெற்றோரும் உளவியல் ரீதியாக குழந்தைகளின் மனதைப் புரிந்துகொண்டு, அதன் பின்னரே குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க முன்வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.