ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 341

தோள், கை, கால் போன்ற அங்கங்கள் பொருந்தியுள்ள குடிலான இந்த உடலில்,

Updated On :23 ஆகஸ்ட் 2016, 7:11 am

பதச் சேதம்

சொற் பொருள்

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற தோளு கை கால் உற்ற குடிலூடே

 

அத்தி: அஸ்தி=எலும்பு; அப்பு: நீர்;

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றியே கைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன்

 

வேதித்த: விரோதம் கொண்ட (வேதித்தல்: தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றுவது—ஒரு பொருள்; விரோதம் கொள்வது—இன்னொரு பொருள்); சூலத்தன்: சூலத்தை ஏந்திய யமன்;

கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா

 

கோலத்தை: வடிவத்தை; வேலைக்குள்ளே:கடலுக்குள்ளே; சூர்: சூரபத்மன்; கொத்தோடே: கூட்டத்தோடே, உறவுகளோடே;

கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு நீ கொற்ற அருள் தாராய்

 

கோது: குற்றம்; புத்தி கூர்கை: புத்தி மிகுதல் (அன்புகூர்ந்து, அருள்கூர்ந்து என்பதுபோல்);

ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ஆவிக்கள் மாள்வித்து மடியாதே

 

ஆலத்தை: விஷத்தை;

ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும் ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே

 

ஆலித்து: ஒலித்து (ஆலித்தல்: To make noise; roar—கர்ஜித்தல்); அத்தை: அதை;

சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட தோதக் கண் மானுக்கு மணவாளா

 

சேல்ஒத்த: மீனைப் போன்ற; வேல்ஒத்த: வேலைப் போன்ற; நீலத்து மேலிட்ட: நீலோற்பல—கருங்குவளை—மலரை விஞ்சிய; தோதக் கண்: தோதகக் கண்—தோதகம்: வருத்தம்—காதலாலே வருந்துதல்;

தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் சேவிக்க வாழ்வித்த பெருமாளே.

 

 

தோல் அத்தியால் அப்பினால் ஒப்பிலாது உற்ற ... தோல், எலும்பு, நீர் ஆகியனவற்றால் ஒப்பற்ற முறையில் அமைந்திருக்கின்ற,

தோளு கை கால் உற்ற குடிலூடே ... தோள், கை, கால் போன்ற அங்கங்கள் பொருந்தியுள்ள குடிலான இந்த உடலில்,

சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் ... நான் தளர்சியே இல்லாமல் வாழ்வை அடைந்திருக்கின்ற சமயத்தில்,

பற்றி ஏகைக்கு வேதித்த சூலத்தன் அணுகா முன் ... (என் ஆவியைப்) பற்றிக் கொண்டு போவதற்காக, என்னோடு பகைமை பாராட்டுபவனான யமன் என்னை நெருங்கி வருவதற்கு முன்னால்;

கோலத்தை வேலைக்கு உள்ளே விட்ட சூர் ... தன் வடிவத்தை கடலுக்குள்ளே மாற்றிக்கொண்டு (மாமரமாக நின்ற சூரபத்மன்),

கொத்தோடே பட்டு வீழ்வித்த கொலை வேலா ... தன் கூட்டத்தாரோடு அழிந்துபடும்படிக் கொன்றொழித்த வேலை உடையவனே!

கோது அற்ற பாதத்திலே பத்தி கூர் புத்தி கூர்கைக்கு ... மாசற்றதான உன் திருவடியில் பக்தி நிறைந்த புத்தி வளர்வதற்கு,

நீ கொற்ற அருள் தாராய் ... வெற்றியைத் தருவதான உனது திருவருளைத் தந்தருள வேண்டும்.

ஆலத்தை ஞாலத்து உளோர் திக்கு வானத்தர் ... ஆலகால விஷத்தால், பூமியில் இருப்பவர்களும்; பல திசைகளில் உள்ளோரும்; தேவர்களும்,

ஆவிக்கள் மாள்வித்து மடியாதே ... அவரவருடைய உயிரை இழந்து மாண்டுவிடாதபடி,

ஆலித்து மூலத்தோடே உட் கொள் ஆதிக்கும் ... (பேரோசையோடு) கர்ஜித்து, அந்த விஷத்தை முழுவதுமாக உட்கொண்ட ஆதிநாதனான சிவபிரானுக்கேகூட,

ஆம் வித்தையாம் அத்தை அருள்வோனே ... பொருந்திய உண்மை ஞானமாகிய பிரணவப் பொருளை உபதேசித்தவனே!

சேல் ஒத்த வேல் ஒத்த நீலத்து மேலிட்ட ... மீனையும் வேலையும் ஒத்ததும், நீலோற்பலத்துக்கு—கருங்குவளைக்கு—மேற்பட்டதுமான,

தோதக் கண் மானுக்கு மணவாளா ... கண்களால் உனக்குக் காதல் நோயை ஏற்படுத்திய மானான வள்ளியின் மணாளனே!

தீது அற்ற நீதிக்குள் ஏய் பத்தி கூர் பத்தர் ... தீதற்றவர்களும், நீதியின் மார்க்கத்திலே பொருந்தியவர்களுமான பக்தர்கள்,

சேவிக்க வாழ்வித்த பெருமாளே. ... உன்னை வணங்க, அவர்களை வாழ்வடையும்படிச் செய்த பெருமாளே!

சுருக்க உரை

பூமியிலும் பல திசைகளிலும் விண்ணிலும் உள்ள—மனிதர் முதல் தேவர் வரையிலான—பலரும் தத்தம் உயிரை இழந்துவிடாதபடி, பேராரவரத்தோடு கடலிலிருந்து எழுந்த ஆலகால விஷத்தை முற்றக் குடித்த ஆதிமூர்த்தியான பரமசிவனாருக்கே உண்மைப் பொருளான பிரணவத்தை உபதேசித்தவனே!  மீன் போன்றதும் வேல் போன்றதுமான கண்களால் உனக்குக் காதல் நோயை ஏற்படுத்திய வள்ளிப் பெருமாட்டியின் மணாளனே!  குற்றமற்றர்களும் நீதி நெறியில் பொருந்தியவர்களுமான அடியார்கள் வணங்க, அவர்களை வாழ்வித்தவனே!

தோல், எலும்பு, நீர் ஆகியனவற்றால் அமைந்ததும்; கை, கால், தோள் என்று பல உறுப்புகளை உடையதுமான இந்த உடலைச் சுமக்கும் நான் தளர்ச்சி ஏதுமில்லாமல் வாழ்வுற்றிருக்கிறேன்.  இப்படி வாழ்வுற்றிருக்கும் காலத்தில் என் ஆவியைப் பற்றிக்கொண்டு போவதற்காக என்மீது விரோதம் கொண்டிருப்பவனும்; சூலத்தை ஏந்தியவனுமான யமன் என்னை நெருங்கிவருவதற்கு முன்னால்,

தன் வடிவத்தைக் கடலுக்குள் மாமரமாக மாற்றிக்கொண்ட சூரபத்மனைக் கூட்டத்தாரோடு ஒழித்த கொலைவேலை ஏந்துபவனே!  உன் குற்றமற்ற திருவடிகளிலே பக்திமிக்கதான புத்தி பெருகும்படியாக எனக்கு உன் திருவருளைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.