ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 625

பராக்கிரமங்களை உடையவனே! 

News image
Updated On :8 ஆகஸ்ட் 2017, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

சொருப பிரகாச விசுவ ரூப பிரமாக நிச சுக விப்பிரதேச ரச சுப மாயா

 

பிரமாக: முழுமுதற் பொருளாக; நிச சுக: உண்மையான சுகத்தை(த்தரும்); விப்பிர: அந்தண; தேச: தேசு (ஒளி) உடையவனே; ரச சுப: இன்பமும் மங்கலமுமானவனே; மாயா: மாயாத, அந்தமற்ற;

துலிய பிரகாச மத சோலி அற்ற ரசா சவித தொகை விக்ரம மாதர் வயிறு இடை ஊறு

 

துலிய பிரகாச: சுத்த ஒளியே; மத சோலி: மதங்களின் உபத்திரவம்; ரசா: இன்பத்துடன்; சவித தொகை: பலவகையான;

கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை எத்திடு இராக வகை அதின் மீறி

 

பிரமோத: விரும்பத்தக்க; எத்திடு: ஏத்திடும், போற்றிடும்; இராக வகை: பாடல் வகை; மீறி: மேம்பட்டு;

கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு இடர் ஆனவையை ஒழிவேனோ

 

ஆசு: குற்றம்; ஆசில்: குற்றமற்ற;

குரு குக்குட வார கொடி செரு உக்கிர ஆதப அயில் பிடி கைத்தல ஆதி அரி மருகோனே

 

குரு: நிறம் நிறைந்த; குக்குட ஆரக் கொடி: கோழி விளங்கி நிறையும் கொடி; ஆதப: சூரியனின் (ஒளிகொண்ட); அயில்: வேல்; கைத்தல: கையை உடையவனே;

குமர பிரதாப குக சிவ சுப்பிர மா மணிய குணம் முட்டர் அவா அசுரர் குலகாலா

 

பிரதாப: கீர்த்தி மிக்க; முட்டர்: குறைவுடையவர்; அவா: ஆசை; குலகாலா: குலத்துக்கு யமனே;

திரு ஒற்றி உறா மருவு நகர் ஒற்றியூர் வாரி திரை அருகு உற்றிடும் ஆதி சிவன் அருள் பாலா

 

திரு ஒற்றி: இலக்குமி சேர்ந்து; உறா: உற்றிருக்கும்; மருவு; பொருந்திய; வாரி: கடல்; திரை: அலை;

திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே.

 

 

சொருபப் பிரகாச விசுவருப பிரமாக நிச சுக விப்பிர தேச ரச சுப... ஒளிமயமான ரூபத்தைக் கொண்டவனே!  (அசைவன, அசையாதன யாவற்றையும் உள்ளடக்கிய) விசுவரூபனே!  முழுமுதற் பொருளாக நிற்பவனே!  உண்மையான இன்பத்தைத் தருபவனே!  அந்தணர்களுடைய தேஜஸைக் கொண்டவனே!  இன்பமும் மங்கலமம் நிறைந்தவனே!

மாயா துலியப் பிரகாச மத சொலியற்ற ரசா சவித தொகை விக்ரம... அந்தமற்ற சுத்தமான ஒளிவடிவினனே!  மதங்களுடைய உபத்திரவங்களைக் கடந்த இன்பத்தைக் கொண்டவனே!  பலவிதங்களான பராக்கிரமங்களை உடையவனே! 

மாதர் வயிறிடையூறு கருவிற்பிறவாதபடி உருவிற்பிரமோத அடிகளை யெத்திடு... பெண்களுடைய வயிற்றிலே ஊறுவதான கருவில் பிறக்காதபடி உன்னுடைய திருவடிகளைப் போற்றுகின்ற,

இராகவகை யதின்மீறி . கருணைப்பிரகாச உன தருளுற்றிட ஆசில்சிவ கதிபெற்று இடரானவையை யொழிவேனோ .. பாடல்களின் வகைகளில் நான் மேம்பட வேண்டும்; கருணைப் பிரகாசனே!  உன்னுடைய திருவருள் கிட்டியதால் குற்றமற்ற சிவகதியை அடைந்து துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும்.

குரு குக்குட வார கொடி செரு வுக்கிர ஆதப அயில் பிடிகைத்தல ஆதி அரி மருகோனே... நிறத்தால் உயர்ந்த சேவல் விளங்குகின்ற கொடியை உடையவனே!  போரிலே சூரியனைப்போல ஒளிவிடுவதான வேலைப் பிடித்துள்ள கரங்களைக் கொண்டவனே!  ஆதி அரியின் மருமகனே! 

குமரப்பிரதாப குக சிவசுப்பிர மாமணிய குணமுட்டர் அவாவசுரர் குலகாலா... குமரனே!  கீர்த்தி மிக்கவனே!  குகனே!  சிவசுப்பிரமணியனே!  குணக்கேடர்களும் ஆசை மிக்கவர்களுமான அசுரர்களுடைய குலத்துக்கு யமனாக நிற்பவனே! 

திரு ஒற்றி யுறாமருவு நகரொற்றியுர் வாரிதிரை யருகுற்றிடும் ஆதிசிவனருள்பாலா... திருமகள் பொருந்தியிருக்கும் நகரான திருவொற்றியூரிலே, கடல் அலைகளுக்கு அருகிலே இருக்கின்றவனே!  ஆதிசிவன் அருளிய மகவே!

திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்கள் இதயத்திட மேமருவு பெருமாளே... திகழ்கின்ற யோகமும் தவமும் பொருந்திய பெருமைவாய்ந்த தவமுனிவர்களுடைய இதயத்திலே என்றென்றும் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை:

உயர்ந்த நிறத்தைக் கொண்ட கோழி பொருந்தி விளங்குகின்ற கொடியை உடையவனே!  சூரியனைப் போல ஒளிவிடும் வேலை ஏந்திப் போரில் ஈடுபடுகின்ற திருக்கரத்தை உடையவனே!  ஆதி அரியின் மருகனே!  குமரனே!  கீர்த்தி நிறைந்தவனே!  குகனே!  சிவசுப்பிரமா மணியே! குணக்கேடர்களான அரக்கர்களின் குலத்துக்குக் காலனே! திருமகள் பொருந்திய நகரமான திருவொற்றியூரிலே கடல் அலைகளுக்கு அருகில் இருப்பவனே!  ஆதிசிவனுடைய மகனே!

ஒளிவீசும் சொரூபத்தைக் கொண்டவனே!  (சர, அசரங்கள் யாவையும் உள்ளடக்கிய) விசுவரூபனே!  முழுமுதற் பொருளே!  உண்மையான இன்பத்தைதைத் தருபவனே!  அந்தணர்களுடைய தேஜஸைக் கொண்டவனே!  இன்பமும் மங்கலமும் நிறைந்தவனே!  அந்தமில்லாத சுத்த ஒளியே!  மதங்களின் உபத்திரவங்களைக் கடந்த இன்பங்களைத் தருவதான பராக்கிரமங்களை உடையவனே!  மாதர்களின் வயிற்றிலே கருவாக உதித்து உருவம் கொள்ளாதபடி; விரும்பத்தக்க உனது திருவடிகளை நான் போற்றிப் பாடுகின்ற அனைத்து விதங்களிலும் நான் மேம்படவேண்டும்; உன்னுடைய திருவருள் கிட்டி அதனாலே நான் குற்றமற்ற சிவகதியை அடைந்து துன்பங்களிலிருந்து விடுபடவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.