ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 631

தேவர்களும் தொழுகின்ற தம்பிரானே! 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2017, 7:04 am

பதச் சேதம்

சொற் பொருள்

மதிக்கு நேர் என்னும் வாள் முகம் வான் மகா நதிக்கு மேல் வரு(ம்) சேல் என்னும் நேர் விழி மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி

 

மதிக்கு நேர்: சந்திரனுக்கு இணை; வாள் முகம்: ஒளிபொருந்திய முகம்; வான் மகநதிக்கு: ஆகாய கங்கையில்;

மதித்த பூதரம் ஆம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள் தோறும் மிக வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன்

 

பூதரம்: மலை; மனோலயர்: (அவற்றிலே) மனம் வசப்பட்டவர்; வாய் ஊறல்: வாய் அமுதம்; பண்ட: பண்டமாக, பொருளாக;

பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீரா ஓடே கலை பணைத்த தோள்களோடு ஈராறு தோடுகள் தங்கு காதும்

 

பதித்த நூபுரம்: பதிக்கப்பட்டுள்ள, சூழ்ந்து இருப்பதான; சீரா: சிறிய உடைவாள்;

பணி கலாபமும் வேலோடு சேவலும் வடி கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ

 

பணி: பாம்பு; கலாபம்: தோகை, மயில்; வாகை: வெற்றி; பாழில்: வீணாக;

கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா

 

கதித்து: கொதிப்புடன்; மா: குதிரை; கரி: யானை;

களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மேலே மேவி மூளைகள் கடித்த பூதமோடே பாடி ஆடுதல் கண்ட வீரா

 

களித்த: மகிழ்ச்சி கொண்ட; கூளி: கழுகு;

குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள் குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும்

 

தாறு: குலை (உதா: வாழைத் தாறு, வாழைக்குலை போன்ற); கமுகு: பாக்கு; ஏர்: அழகு; வஞ்சி தோயும்: பூங்கொடிகள் அமிழ்ந்துள்ள;

குளத்தில் ஊறிய தேன் ஊறல் மாதுகள் குடித்து உலாவியே சேலோடு மாணி கொள் குழிக்குள் மேவிய வானோர்களே தொழு(ம்) தம்பிரானே.

 

மாதுகள்: மா-துகள்—மிகுதியான மகரந்தத் தூள்; மாணிகொள் குழிக்குள்: திருமாணிக்குழித் தலத்தில்;

மதிக்கு நேர் என்னும் வாள் முகம் வான் மக(கா) நதிக்கு மேல் வரு(ம்) சேல் என்னும் நேர் விழி...சந்திரனை ஒத்த ஒளிபடைத்த முகத்தையும்; ஆகாய கங்கையில் புரள்கின்ற மீன்களை ஒத்த கண்களையும்;

மணத்த வார் குழல் மா மாதரார் இரு கொங்கை மூழ்கி... மணம் கமழும் நீண்ட கூந்தலையும் உடைய அழகிய பெண்களுடைய மார்பகங்களிலே முழுகி,

மதித்த பூதரம் ஆம் ஆம் மனோலயர் செருக்கி மேல் விழ நாள் தோறுமே... ‘மலை என்று நினைக்கத்தக்கவை இவை’ என்று அவற்றின்மேலே மனம் வசப்பட்டுப்போய் திமிரோடு மேலே விழுந்து ஒவ்வொரு நாளும்,

மிக வடித்த தேன் மொழி வாய் ஊறலே நுகர் பண்ட நாயேன்... நன்றாக வடிக்கப்பட்ட தேனை ஒத்த சொல்லையும்; இதழிலே ஊறுகின்ற அமுதத்தையுமே ஒரு பொருளாகக் கருதி நுகர்பவனான நாயேன்,

பதித்த நூபுர சீர் பாத மா மலர் படைக்குள் மேவிய சீரா ஓடே கலை பணைத்த தோள்களொடு ஈராறு தோடுகள் தங்கு காதும்... சிலம்புகள் சூழ்ந்துள்ள சீரிய பாதங்களான மலர்களையும்; (தாங்கியுள்ள) ஆயுதங்களில் ஒன்றாக விளங்குகின்ற சிறிய உடைவாளையும்; ஒளிபொருந்திய பருத்த தோள்களையும்; பன்னிரு காதணிகள் விளங்குகின்ற திருச்செவிகளையும்;

பணிக் கலாபமும் வேலோடு சேவலும் வடிக் கொள் சூலமும் வாள் வீசு நீள் சிலை படைத்த வாகையும் நாடாது பாழில் மயங்கலாமோ... பாம்பை அடக்குகின்ற மயயிலையும்; வேலையும்; சேவலையும்; சூர்மையான சூலாயுதத்தையும்; ஒளிவீசுகின்ற நீண்ட வில்லையும்; இவையெல்லாவற்றையும் கொண்டு படைத்த வெற்றியையும் மனத்திலே ஊன்றி தியானிக்காமல் வீணான வழிகளிலே நான் மயங்கித் திரியலாமோ?

கதித்து மேல் வரு மா சூரர் சூழ் படை நொறுக்கி மா உயர் தேரோடுமே கரி கலக்கி ஊர் பதி தீ மூளவே விடும் வஞ்ச வேலா... கொதிப்போடு எதிர்த்துவந்த பெரிய சூரர்கள் சூழ்ந்த சைனியங்களைப் பொடியாக்கியும்; குதிரைகளையும் பெரிய தேர்களையும் யானைகளையும் கலக்கியும்; ஊர்களைத் தீக்கு இரையாக்கும்படிச் செலுத்துகின்ற; வஞ்சம் தீர்க்கும் வேலை ஏந்தியவனே!

களித்த பேய் கணம் மா காளி கூளிகள் திரள் பிரேதம் மேலே மேவி மூளைகள் கடித்த பூதமொடே பாடி ஆடுதல் கண்ட வீரா... மகிழ்ச்சியடைந்த பேய்க்கூட்டங்களும் காளியும் பெரிய கழுகுகளும் ஒன்றுசேர்ந்து, திரளாக விழுந்து கிடக்கின்ற பிணங்களின் மேலே விழுந்து மூளைகளைக் கடித்துத் தின்கின்ற பூதங்களோடு பாடி ஆடுவதைப் பார்த்த வீரனே!

குதித்து வானரம் மேல் ஏறு தாறுகள் குலைத்து நீள் கமுகு ஊடாடி வாழை கொள்குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும்... குதித்தெழும்புகின்ற வானரங்கள் பாக்கு மரங்களிலுள்ள குலைகளை அறுத்து அந்த மரங்களின் இடையே ஆட்டம்போடுவதால் (அந்தப் பாக்குக் குலைகள்) வாழைக் குலைககளின் மேலே விழுவதான அழகிய வளத்தைக் கொண்டதும்;

வஞ்சி தோயும் குளத்தில் ஊறிய தேன் ஊறல் மா துகள் குடித்து உலாவியெ சேலோடு... பூங்கொடிகள் தோய்ந்திருப்பதான குளங்களில் ஊறுகின்ற (மலர்களுடைய) தேனையும் நிறைந்த மகரந்தத் தூளையும் பருகிய மீன்கள் உலாவுகின்ற,

மாணி கொள் குழிக்குள் மேவிய வானோர்களே தொழு(ம்) தம்பிரானே.... திருமாணிக்குழியிலே வீற்றிருப்பவனே!  தேவர்களும் தொழுகின்ற தம்பிரானே! 


சுருக்க உரை:

மிகுந்த உள்ளக் கொதிப்போடு எதிர்த்துவந்த சூரர்கள் சூழ்ந்த சேனைகளைப் பொடியாக்கி; குதிரைகளையும் தேர்களையும் யானைகளையும் கலக்கி; ஊர்களைத் தீக்கிரையாக்கும்படியாகச் செலுத்தப்படுகின்ற வஞ்சம் தீர்க்கும் வேலை ஏந்தியவனே!  மகிழ்ச்சியுற்ற பேய்க்கூட்டங்களும் காளியும் பெரிய கழுகுகளும் ஒன்றுதிரண்டு, திரளாக விழுந்துகிடக்கும் பிணங்களின் மேலே விழுந்து மூளைகளைக் கடித்துத் தின்னும் பூதங்களோடு சேர்ந்துகொண்டு ஆடிப் பாடுவதைப் பார்த்த வீரனே! குதித்தெழும்பும் வானரங்கள் பாக்கு மரங்களினிடையே ஆடிக்குதிப்பதால் அந்தப் பாக்கு மரங்களின் குலைகள் வாழைக்குலைகளின் மேலே வந்து விழுகின்ற வளத்தைக் கொண்டதும்; பூங்கொடிகள் தோய்ந்திருக்கும் குளங்களிலே சிந்திக் கிடக்கின்ற தேனையும் மகரந்தத் தூளையும் பருகிய மீன்கள் உலாவுகின்ற திருமாணிக்குழியிலே வீற்றிருப்பவனே!  தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே!

சந்திரனை ஒத்த முகத்தையும்; கங்கையில் திரியும் மீனைப் போன்ற கண்களையும்; நறுமணம் கமழும் கூந்தலையும் உடைய பெண்களுடைய மார்பகத்திலே மூழ்கியும்;  அந்த மார்பகங்களை மலை என்று கருதிப் பெருமிதம் கொண்டும் அவற்றிலே வசப்பட்டு விழுந்தும்; அப் பெண்களுடைய தேன்போன்ற சொற்களையும் இதழில் ஊறும் பானத்தையும் அனுபவிக்கின்ற கீழ்மை உடையவனாகிய அடியேன்,

சிலம்பணிந்த திருப்பாதங்களையும்; பிற ஆயுதங்களோடு ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற சிறிய உடைவாளையும்;  தோடணிந்த பன்னிரு திருச்செவிகளையும்; மயிலையும்; சேவலையும்; நீண்ட வில்லையும்; இவற்றால் ஏற்பட்ட பெரிய வெற்றியையும் கொண்ட உன் கோலத்தை மனத்தில் இருத்தி தியானிக்காமல் வீணான எண்ணங்களில் மயக்கம் கொள்ளலாமோ? (அவ்வாறு மயங்காதபடி காத்தருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.