ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 761

தேவர்களும் வணங்கித் துதிக்கின்ற

News image
Updated On :20 பிப்ரவரி 2018, 6:30 pm

பதச் சேதம்

சொற் பொருள்

வானோர் வழுத்துஉனது பாதார
 பத்மமலர் மீதே பணிக்கும்வகை 
அறியாதே

 

பணிக்கும் வகை: பணிசெய்யும் வகை;

மானார் வலை கண்அதிலே 
தூளிமெத்தையினில் ஊடே 
அணைத்துஉதவும் அதனாலே

 

தூளி: பூந்தாது;

தேனோ கருப்பில் எழுபாகோ 
இதற்குஇணைகள் ஏதோ 
எனகலவி பல கோடி

 

கருப்பில்: கரும்பில் (வலித்தல் விகாரம்); பாகோ: சர்க்கரைப் பாகோ;

தீரா மயக்கினோடுநாகா படத்தில்
 எழு சேறு ஆடல் பெற்றதுயர் 
ஒழியேனோ

 

நாகா படம்: பாம்பின் படம் போன்ற (அல்குலில்);

மேல் நாடு பெற்றுவளர் சூர 
அதிபற்குஎதிர் ஊடே ஏகிநிற்கும் 
இருகழலோனே

 

மேல்நாடு: விண்ணுலகம்;

மேகார உக்ர பரி தான்ஏறி 
வெற்றி புனை வீரா குற 
சிறுமிமணவாளா

 

மேகாரம்: மயில்; உக்ர பரி: உக்கிரம் நிறைந்த குதிரை (அல்லது வாகனம்);

ஞானா பரற்கு இனியவேத ஆகம 
மெய்பொருளை நாணாதுஉரைக்கும் 
ஒருபெரியோனே

 

ஞானாபரற்கு: ஞானப் பரம்பொருளாகிய சிவனுக்கு;

நாராயணற்கு மருகாவீறு 
பெற்று இலகு ராமேசுரத்தில் 
உறைபெருமாளே.

 

வீறு: சிறப்பு;

வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும் வகை அறியாதே... தேவர்கள் வாழ்த்துகின்ற உன்னுடைய திருப்பாதத் தாமரைகளுக்குப் பணிவிடை செய்யும் வகையை உணராதபடி,

மானார் வலைக் கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே அணைத்து உதவும் அதனாலே... மான்போன்ற விழியை உடைய பெண்களுடைய கண்ணாகிய வலையில் அகப்பட்டும்; பூந்தாதுகள் நிரம்பிய மெத்தையில் அணைக்கப்பட்டும் நடக்கின்ற அந்த நிகழ்வாலே,

தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ எனக் கலவி பல கோடி தீரா மயக்கினொடு நாகா படத்தில் எழு சேறு ஆடல் பெற்றதுயர் ஒழியேனோ... இது தேனோ, கரும்பிலிருந்து பெறப்படும் சர்க்கரைப் பாகோ, இதற்குச் சமமாக ஏதேனும் இருக்கிறதோ என்று பலகோடி முறைகள் கலவியில் தீராத மயக்கத்தை அடைந்து நாகப்பாம்பின் படம் போன்ற அல்குலாகிய சேற்றில் விழுகின்ற துயரம் என்னைவிட்டு நீங்காதோ? (நீங்கும்படி அருளவேண்டும்.)

மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு எதிரின் ஊடு ஏகி நிற்கும் இரு கழலோனே... விண்ணுலகத்தையும் போரிலே வென்ற அசுரர்களின் தலைவனான சூரனுக்கு எதிரிலே, போர்க்களத்திலே புகுந்து நின்ற திருவடிகளை உடையவனே!

மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குறச் சிறுமி மணவாளா... மயிலாகிய உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்தபடி வெற்றியடைந்த வீரனே! குறப்பெண்ணாகிய வள்ளியின் மணாளனே!

ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை நாணாது உரைக்கும் ஒரு பெரியோனே... ஞானப் பரம்பொருளான பரமசிவனாருக்கு வேதாகமங்களின் பொருளைச் சற்றும் நாணாமல் எடுத்துரைத்த ஒப்பற்ற பெரியவனே!

நாராயணற்கு மருகா வீறு பெற்று இலகு ராமேசுரத்தில் உறை பெருமாளே.... திருமாலின் மருமகனே!  சிறப்புமிக்க ராமேசுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

விண்ணுலகத்தையும் போரிலே வென்ற அரக்கர்களுடைய தலைவனான சூரபத்மனுக்கு எதிரே போர்க்களத்தில் சென்று நின்ற திருவடிகளை உடையவனே! மயிலாகிய உக்கிரமான வாகனத்தில் ஏறியமர்ந்து வெற்றியடைந்த வீரனே! குறப்பெண்ணான வள்ளியின் மணாளனே! ஞானப் பரம்பொருளான சிவனாருக்கு வேதாகமங்களின் பொருளை நாணமடையாமல் எடுத்துரைத்த ஒப்பற்ற பெரியவனே!  திருமால் மருகனே!  சிறப்பு மிக்க ராமேசுரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

தேவர்களும் வணங்கித் துதிக்கின்ற உன் திருவடித் தாமரைகளுக்குத் தொண்டு செய்வதை அறியாமல் பெண்களுடைய கடைக்கண்ணாகிய வலையில் அகப்பட்டும்; மெத்தையில் அவர்களோடு கூடியும்; ‘இது தேனோ, கரும்பிலிருந்து பெறப்படுகின்ற பாகோ’ என்று கோடிக்கணக்கான முறை கலவியின்பத்தை அனுபவித்தும்; நாகப்பாம்பின் படம்போன்ற அல்குல் என்னும் சேற்றில் விழுவதான துயரம் என்னைவிட்டு நீங்காதோ? (என்னைவிட்டு நீங்கும்படி ஆண்டருள வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.