27.01.1832: உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் லூயிஸ் கரோல் பிறந்த தினம் இன்று!

உலகப் புகழ்பெற்ற ‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ குழந்தைகள் நாவலைப் படைத்த பிரிட்டன் படைப்பாளியும், கணிதவியலாளரும், கவிஞருமான லூயிஸ் கரோல் இன்று பிறந்தார்.
27.01.1832: உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் லூயிஸ் கரோல் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற ‘ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட்’ குழந்தைகள் நாவலைப் படைத்த பிரிட்டன் படைப்பாளியும், கணிதவியலாளரும், கவிஞருமான லூயிஸ் கரோல் இன்று பிறந்தார்.

இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள டாரஸ்பரி கிராமத்தில் (1832) பிறந்தார். இயற்பெயர் சார்லஸ் லுட்விக் டாட்ஸன். தந்தை மத போதகர். வீட்டிலேயே தனது 11 குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கற்பித்தார். புதுப்புது விளையாட்டுகளை உருவாக்கி சகோதர, சகோதரிகளை உற்சாகப்படுத்துவது சிறுவன் லுட்விக்கின் வழக்கம்.

சிறு வயதிலேயே கையெழுத்துப் பத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதிவந்தார். கல்வி உதவித்தொகை பெற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். அங்கேயே கணித விரிவுரையாளராகப் பணியாற்றினார். நகைச்சுவைக் கதைகள், கணிதத்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். ‘லூயிஸ் கரோல்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்.

தேவாலயத்தில் பணியாற்றிவந்தபோது, ஒருமுறை ஆலிஸ் லிடல் என்ற 4 வயது குழந்தையை சந்தித்தார். அப்போதிருந்து அது இவரது செல்லக் குழந்தையாகிவிட்டது. அவளையும் அவளது 2 சகோதரி களையும் குட்டிப் படகில் வைத்து வெகு நேரம் ஆற்றில் பயணம் செய்வார். சளைக்காமல் வெகுநேரம் அவர்களுக்கு கதை சொல்வார். சில நேரங்களில், படம் வரைந்துகொண்டே கதை சொல்வார்.

ஆலிஸ் என்ற கதாபாத்திரம் வருவதுபோல கதை எழுதித் தருமாறு 1862-ல் இவரிடம் கேட்டது குழந்தை. ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் அண்டர்கிரவுண்ட்’ என்ற கதையை இவர் எழுதிக் கொடுத்தார். இதைப் பார்த்த பிரபல நாவலாசிரியர் ஒருவர், புத்தகமாக வெளியிடலாம் என்று ஆலோசனை கூறினார்.

சில மாற்றங்களுடன் 1865-ல் ‘ஆலிஸ் அட்வெஞ்சர்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ என்ற பெயரில் இது புத்தகமாக வெளிவந்தது. 1932-ல் இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, குழந்தைகளுக்கான நூல்களில் உலக அளவில் அதிக வரவேற்பை பெற்ற நூல்களில் ஒன்று என்ற அந்தஸ்தை இந்த நூல் பெற்றது.

குழந்தைகள் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளியாகப் போற்றப்படும் லூயிஸ் கரோல் 1898 ஜனவரி 14-ம் தேதி 66-வது வயதில் மறைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com