தலையில் குட்டாதீங்க!
படிப்பில் உனக்கு கவனமே இல்லை, அதான் தப்பு தப்பா எழுதறே, படிக்கிறதுன்னாலே உனக்கு கசக்குமே, பாதி "ஹோம் ஒர்க்' எழுதினா மீதியை யார் எழுதறது, வார்த்தையை விட்டு விட்டு எழுதினால் மார்க் எப்படி கிடைக்கும்....


படிப்பில் உனக்கு கவனமே இல்லை, அதான் தப்பு தப்பா எழுதறே, படிக்கிறதுன்னாலே உனக்கு கசக்குமே, பாதி "ஹோம் ஒர்க்' எழுதினா மீதியை யார் எழுதறது, வார்த்தையை விட்டு விட்டு எழுதினால் மார்க் எப்படி கிடைக்கும்......'----இவ்வாறு ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் திட்டு வாங்காத குழந்தைகள் மிகச் சிலரே இருப்பார்கள்.
மருத்துவ ரீதியாக மூளையுடன் தொடர்புடைய கற்றலில் குறைபாடு ("ஸ்பெசிபிக் லர்னிங் டிஸ்எபிளிட்டி'-எல்எல்டி) பிரச்னையே இதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் நரம்பியல் மருத்துவ உளவியல் நிபுணர்கள். இந்தப் பிரச்னை 40 முதல் 50 சதவீத குழந்தைகளுக்கு உள்ளது.
இந்தப் பிரச்னையை குழந்தைக்கு 12 வயது ஆவதற்குள் கண்டுபிடித்து விட்டால் எளிதில் சரி செய்துவிட முடியும். ஏனெனில் சிறு வயதிலேயே மூளையின் வளைந்து கொடுக்கும் தன்மையை ("பிளாஸ்டிஸ்ட்டி ஆஃப் தி பிரெய்ன்') சரி செய்து குறையைப் போக்க முடியும்.
ஆரம்ப அறிகுறிகள் என்ன?
பாடத்தை படிக்கச் சொன்னா கை வலிக்குது, பசி எடுக்குது, பாத்ரூம் போகனும் என குழந்தை சொன்னால் அதை அலட்சியப்படுத்தி அவர்களைத் திட்டாதீர்கள். படிப்பில் நாட்டமின்மை, பள்ளிக்குப் புறப்படும்போதுதான் "ஹோம் ஒர்க்' செய்யாதது நினைவுக்கு வருதல், A-க்குப் பதிலாக B எழுதுதல், வார்த்தைகளை தவறாக எழுதுதல் (உதாரணம்: பால்காரன் என்பதற்கு பல்காரன் என தவறாக எழுதுதல்) உள்ளிட்டவையும் கற்றலில் குறைபாடு பிரச்னையின் ஆரம்ப அறிகுறிகள்.
4 வகை பாதிப்பு
கற்றலில் குறைபாடு பாதிப்பு இப்போது "ஸ்பெஸிபிக் லர்னிங் டிஸ்எபிளிட்டி' (எஸ்எல்டி) என்று அழைக்கப்படுகிறது. கற்றலில் குறைபாடு பாதிப்பில் நான்கு வகைகள் உள்ளன.
1. DYSLEXIA (டிஸ்லக்ஸியா) என்று அழைக்கப்படும் பாதிப்பில் எழுத்துக்களை குழந்தை படிப்பது சிரமமாக இருக்கும்.
2. DYSGRAPIA (டிஸ்கிரேபியா) என்று அழைக்கப்படும் பாதிப்பில் எழுதுவதில் சிரமம் இருக்கும்.
3. SPELLING DYSPRAXIA என அழைக்கப்படும் 3-வது வகை பாதிப்பில், எழுத்தில் பிழை இருக்கும்; ஆனால் உச்சரித்தல் சரியாக இருக்கும் அல்லது எழுத்துப் பிழை மற்றும் உச்சரித்தல் என இரண்டும் தவறாக இருக்கும்.
4. DYSCALCULIA என்ற 4-வது வகை பாதிப்பில் அடிப்படை கணக்கு பரிமாணங்களில் தவறு ஏற்படும். உதாரணமாக 18-லிருந்து 9-ஐ கழித்து விடை 9 என்பதற்குப் பதிலாக 19 என்று தவறாக கணக்குப் போடும் தன்மை இருக்கும். இன்னும் சொல்ல வேண்டுமானால் விடை 15-ஐ, 51 என்று தவறாக எழுதுவார்கள்.
பொதுத் தேர்வில் சலுகை
கற்றலில் குறைபாடு பிரச்னை இருப்பதை உறுதி செய்ய நரம்பியல் மருத்துவ உளவியல் நிபுணரின் சோதனை தேவை. உளவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற்றால் மாநில, மெட்ரிக், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சலுகைகளைப் பெறலாம். இதற்கு பள்ளி முதல்வர், மருத்துவ உளவியல் நிபுணரின் சான்றிதழ் தேவை.
10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அனுமதி, கருத்து மாறாமல் இருந்து, எழுத்துப் பிழை இருந்தாலும் முழு மதிப்பெண், இரண்டாவது மொழிப் பாடத்துக்கு (தமிழ் 2-ம் தாள் அல்லது இந்தி) தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு, கால்குலேட்டரைப் பயன்படுத்த அனுமதி ஆகிய சலுகைகளை கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்கள் பெற முடியும்.
மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களில் குறைபாடுள்ளோரில் பெரும்பாலான மாணவர்கள் சலுகைகளைப் பெற்று வருகின்றனர். எனினும் சலுகையைப் பெற அரசின் கெடுபிடிகள் தொடருகின்றன.
பொதுத் தேர்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு டிசம்பரிலேயே கற்றலில் குறைபாட்டுக்கான சான்றிதழைப் பெற பெற்றோர் சென்னைக்கு அலையும் நிலை உள்ளது.
மாறாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சலுகை அளிக்கும் அதிகாரத்தை அளிக்கலாம் என்கின்றனர் மருத்துவ உளவியல் நிபுணர்கள்.
ஊனம் அல்ல
கற்றலில் குறைபாடு என்பது ஊனம் அல்ல. மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிக்க வற்புறுத்துவது போன்று மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் கொண்டு வருமாறு கல்வித் துறை உதவி இயக்குநர்கள் அண்மைக்காலமாக வற்புறுத்தி வருகின்றனர்.
இது அரசு ஆணைக்கு எதிரானது. மாறாக, உளவியல் நிபுணர்-பாதிப்பு உள்ள மாணவரின் பள்ளி தலைமையாசிரியர்-மாணவரின் பெற்றோர் ஆகியோரிடம் உத்தரவாதம் பெற்றுக் கொண்டு தேர்வுச் சலுகை அளிக்கும்
எளிய நடைமுறையைப் பின்பற்றலாம். இதில் உடனடியாக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் நரம்பியல் மருத்துவ உளவியல் நிபுணர்கள்.
உதவிக்கரம் வேண்டுமா?
சென்னை, நெய்வேலி, சேலம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் "ஹெல்ப் சைல்ட்' என்ற தன்னார்வ அமைப்பு கற்றலில் குறைபாடு குறித்து ஆய்வு செய்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் (தொ.பே.: 28275747) நீங்களும் ஆலோசனை பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...