கர்நாடக இசை கிரிக்கெட் அல்ல!
தொழிலதிபரும் புரவலருமான ஓபுல் ரெட்டியின் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளையின் சார்பாக,18 ஆவது ஆண்டாக கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில்


தொழிலதிபரும் புரவலருமான ஓபுல் ரெட்டியின் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளையின் சார்பாக,18 ஆவது ஆண்டாக கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை, வாணிமகாலில் உள்ள ஓபுல் ரெட்டி அரங்கத்தில் நடந்தது. மகாராஜபுரம் சந்தானம் நினைவு விருது, கடம் வாத்தியக் கலைஞர் முரளி, வயலின் கலைஞர் விட்டல் ராமமூர்த்தி, தவில் கலைஞர் சேகர், நாகசுரக் கலைஞர் சிவா, மிருதங்கக் கலைஞர் பக்தவத்சலம் (இவருக்கு விருதுடன் தங்கப்பதக்கமும் சேர்த்து) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி மூத்த வயலின் இசைக் கலைஞர் டாக்டர் டி.என். கிருஷ்ணன் பாராட்டிப் பேசினார்.
மகாராஜபுரம் சந்தானம் அறக்கட்டளையின் விருது வழங்கும் விழாவில், மகாராஜபுரத்தின் சிஷ்ய பரம்பரையில் வந்தவர்களின் ஒருமணிநேரக் கச்சேரி இருக்கும். இல்லாவிட்டால், மகாராஜபுரம் நடத்திய கச்சேரிகளிலிருந்து தேர்ந்தெடுத்து பதிவு செய்த நிகழ்ச்சிகளை திரையில் ஒளிபரப்புவார்கள். இதுபோல் இந்த ஆண்டு எதுவும் ஏற்பாடு செய்யாதது, மகாராஜபுரம் சந்தானத்தின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். இளம் தலைமுறையினருக்கு இது ஒருவகையில் நஷ்டமும்கூட!
அதற்கு பதிலாக விருது பெற்ற சிவா, சேகர் ஆகியோரின் இசை நம்மை ஆறுதல் படுத்தியது. ""கர்நாடக இசை ஒன்றும் கிரிக்கெட் அல்ல! கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் தோற்றுவிட்டால்கூட அடுத்த ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கர்நாடக இசையில் ஒரு மேடையில் கலைஞர்கள் கவனக்குறைவாக இருந்தாலும் அடுத்த கச்சேரிக்கு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது!'' என்று டி.வி.ஜி. பேசியதற்கு அரங்கத்தில் நல்ல அப்ளாஸ்!
""லய வாத்தியக்காரர்கள் கச்சேரிக்குப் போவதற்கு முன்னால் முன் தயாரிப்பு செய்து கொண்டு போவது முடியாத காரியம். உதாரணத்துக்கு, ஆதி தாளம் எட்டு அட்சரம். ஆனால் சில நேரங்களில் பாடகர் காலப் பிரமாணத்தை மாற்றிப் பாடும்போது (தாளம் போட்டுக் காண்பிக்கிறார்) எட்டு அட்சரம் வராது. பாட்டுக்கு வாசிக்கும் போது அனுசரித்து வாசிக்கவேண்டும். சில இடங்களில் சங்கதிகளே வாசிக்கக் கூடாது. இந்த சூட்சுமங்களைத் தெரிந்து கொள்வதற்கு குருகுலப் பயிற்சி முக்கியம்!'' என்றார் அரித்துவாரமங்கலம் பழனிவேல்.
விருது பெற்றவர்களின் சார்பில் ஏற்புரை வழங்கிய பக்தவத்சலம், ""இளங் கலைஞர்களின் வளர்ச்சிக்கு இந்தக் காலத்தில் மீடியாக்கள் உதவுகின்றன. என்னை அந்தக் காலத்தில் வளர்த்தது என்னுடைய மூத்த தலைமுறை கலைஞர்கள்தான். விருதுகள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் வித்துவான்கள் வித்துவான்களை ஒத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எல்லாவற்றையும்விட பெரிய மகிழ்ச்சி!'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
நன்றியுரை நிகழ்த்திய அறங்காவலர்களில் ஒருவரும், மகாராஜபுரத்தின் மகனுமான மகாராஜபுரம் ஸ்ரீனிவாசன், ""சுவையான பல தகவல்களைக் கூறியதுடன், "இந்த இடத்தில் கைத்தட்டல் என்று போட்டிருக்கிறேன்'' என்று கூறி, ஏறக்குறைய அவருடைய பேச்சு முழுவதற்குமே அரங்கத்திலிருப்பவர்கள் கைத்தட்டும்படி பார்த்துக் கொண்டார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...