மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர்!
இந்த உலகத்தில் தோற்கடிக்கப்பட்ட கதாநாயகனாகத்தான் நான் காந்தியைப் பார்க்கிறேன். அவரை விமர்சிப்பது எளிது. அவரை விமர்சிப்பதற்கான எல்லா ஆயுதங்களையும் அவரே தந்திருக்கிறார். அவரைப் பின்பற்றுவதுதான் கடினம்.


இந்த உலகத்தில் தோற்கடிக்கப்பட்ட கதாநாயகனாகத்தான் நான் காந்தியைப் பார்க்கிறேன். அவரை விமர்சிப்பது எளிது. அவரை விமர்சிப்பதற்கான எல்லா ஆயுதங்களையும் அவரே தந்திருக்கிறார். அவரைப் பின்பற்றுவதுதான் கடினம். தன்னுடைய சொந்த வாழ்க்கையையே சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டவர். அதுதான் அவருடைய சத்திய சோதனை.
இதுதவிர ஹிந்து சுயராஜ்ஜியம் என்னும் நூலை கேள்வி, பதில் வடிவில் எழுதியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் காந்தி எழுதுவதில் எந்தவிதமான வார்த்தை ஜாலமோ, அலங்காரமோ இருக்காது. இதுகுறித்து எழுந்த விமர்சனங்களுக்கு காந்தியின் பதில், "என் எழுத்தைப் பற்றிய விமர்சனங்கள் உண்மைதான். நான் எழுதியவற்றுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே நான் நினைக்கிறேன். என்னுடைய எழுத்தில் அலங்காரம் இருக்காது. ஆனால் உடனடித்தன்மை இருக்கும்!' என்கிறார்.
இந்திய அரசியல் தலைவர்களில் ஆரோக்கியத்தைப் பற்றியும் உடல் நலத்தைப் பற்றியும் நிறைய எழுதியவர்களில் முதன்மையானவர் காந்திதான். அவர் தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போது, சைவ உணவுகளை எல்லாரும் பின்பற்றுவதில் இருக்கும் நன்மைகளைப் பற்றித்தான் முதலில் எழுதத் தொடங்குகிறார்.
உணவு, ஆரோக்கியம், உடல்நலம் குறித்த பல செய்திகளை அவர் ஆர்வமுடன் படிப்பதையும் அது குறித்து யோசித்து எழுதுவதையும் தொடர்ந்து செய்திருக்கிறார். காலையில் அருந்தும் தேநீர், காபி போன்ற பானங்களைக் குடிப்பதைத் தவிர்க்கும் அதேநேரத்தில், உள்நாட்டில் நமக்கு ஏற்றுக் கொள்ளும் பானங்கள் எவை என்பதைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
"திறந்த வெளியில்தான் உறங்கவேண்டும். ஆனால் அசுத்தமான திறந்த வெளியில் அல்ல' என்று எழுதியிருக்கிறார். உடலைப் பற்றிய மிக ஆழமான தெளிவு அவருக்கு இருந்ததனால்தான், தன் உடலையே ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதமாக்குகிறார். உடலை எப்போதும் அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தார்.
"ஒருவர் தன்னால்தான் துன்பப்படுகிறார் என்பதை ஒரு கிறிஸ்துவரால் தாங்கிக் கொள்ளமுடியாது. அதுதான் அவர்களின் அறம். அவர்கள் நம்பும் அந்த அறத்தையே அவர்களுக்கு எதிராக நான் கையிலெடுத்தேன். அதுதான் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் அகிம்சை வழி. ஆனால் இந்த வழி ஹிட்லருக்கு எதிராக நிச்சயம் பயன்படாது!' என்றும் எழுதியிருக்கிறார்.
காந்தி பத்திரிகையாளராக உலக விஷயங்கள், பொருளாதாரம், அரசியல் ஆகிய தலைப்புகளில் எழுதியிருக்கும் விஷயங்கள் 98 தொகுதிகள் இருக்கும். அவ்வளவு யோசித்திருக்கிறார். எழுதியிருக்கிறார். தன் வாழ்நாளின் முழுமைக்கும் சாமான்ய இந்தியனின் உயர்வுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் காந்தி.
காந்தி தனக்கு விருப்பமான துறை கணிதம் என்கிறார். "ஓர் ஒழுங்கிற்கு உள்ளேதான் எல்லாமே நடந்துகொண்டிருக்கிறது. எண்களை வைத்து கணிதம் அல்ல; மனிதர்களை வைத்துதான் கணிதம் உருவாக்கப்பட்டிருக்கிறது' என்பது காந்தியின் கருத்து.
அறிஞர் டால்ஸ்டாய்க்கும் காந்திக்கும் சுவாரஸ்யமான கடிதத் தொடர்புகள் நிகழ்ந்திருக்கின்றன. டால்ஸ்டாயின் கருத்துக்களைத் தன்னுடைய தாய்மொழியான குஜராத்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார் காந்தி.
டால்ஸ்டாய் எழுதிய சுயசரிதையைப் படித்தபின்தான் காந்தி தன்னுடைய சுயசரிதையை தன்னுடைய தாய்மொழியான குஜராத்தியில் எழுதினார். மொழியைப் பற்றிய சிந்தனைகளும் காந்திக்கு உண்டு. ஹிந்தி, வடமொழிகளில் வந்திருக்கும் பல மூல நூல்களைப் படிக்கவேண்டும் என்பதற்காகவே அந்த மொழிகளைக் கற்றுக் கொண்டேன் என்கிறார். நாட்டில் ஆங்கில மோகம் அதிகரிப்பதைக் காரணம் காட்டி, "ஹிந்துஸ்தான் இங்கிலீஸ்தான் ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்' என்று எழுதியிருக்கிறார்.
டால்ஸ்டாயின் பல தத்துவங்களை மொழிபெயர்த்திருக்கும் காந்தி, "இந்தத் தத்துவங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நூல் எது? அது தெரிந்தால் நானும் அதைப் படித்து பயன்பெறுவேன்... அதைச் சொல்லுங்கள்'' என்று டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதற்கு டால்ஸ்டாயிடமிருந்து காந்திக்கு பதில் வந்தது. அதில் டால்ஸ்டாய், ""பல தத்துவங்களின் சாரத்தை நான் இந்த நூலிலிருந்துதான் எடுத்து எழுதுகிறேன்'' என்று பதில் அளிக்கிறார். அந்த நூல் திருக்குறள்!
(சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் "மகாத்மா காந்தி எனும் எழுத்தாளர்!' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிலிருந்து சிலபகுதிகள்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...