தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வட சென்னையிலும் இசை விழா!

சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னால் கர்நாடக இசைக்கச்சேரிகள் எல்லாம் வட சென்னையில்தான் அதிகம் நடந்துகொண்டிருந்தன. தென் சென்னை ரசிகர்கள் டிராமிலும், சைக்கிளிலும், நடந்தும் இவற்றுக்கு வந்து ரசித்துவிட்டு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:44 pm

சாருகேசி

சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னால் கர்நாடக இசைக்கச்சேரிகள் எல்லாம் வட சென்னையில்தான் அதிகம் நடந்துகொண்டிருந்தன. தென் சென்னை ரசிகர்கள் டிராமிலும், சைக்கிளிலும், நடந்தும் இவற்றுக்கு வந்து ரசித்துவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவார்களாம். நகரின் சரித்திர ஆய்வாளர்கள் எழுதும் பக்கங்களில் முடங்கிப்போய்விட்ட உண்மை இது!

இப்போது வட சென்னையில் அந்த முயற்சியை யாராவது மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அதுவும் வட சென்னையின் கோடியில், கொடுங்கையூரில் முத்தமிழ் நகரைத் தேடிக் கண்டுபிடித்து கர்நாடக இசை கேட்க அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்தால், அது நம்பினால் நம்புங்கள் பட்டியலில் ஒன்றாக இடம் பிடித்துவிடும்!

ஆனால் இங்கே "சாயி விவேகானந்தா வித்தியாலயா'வின் தாளாளர் டி.எஸ். தியாகராஜனுக்கு ஆசை அல்ல, பேராசை. தாமும், தென் சென்னைவாசிகளும் அனுபவிக்கும் உல்லாசங்களில் ஒன்றான கர்நாடக இசையை, தாம் நடத்தும் பள்ளியின் வள்ளலார் வளாகத்திலேயே கொண்டு சென்று நடத்தி இசை ரசிகர்களை மகிழ்வித்தால் என்ன என்ற பேராசை. இந்த ஒன்பது வருடங்களாக விடாப்பிடியாக ஐந்து நாட்களுக்கு கர்நாடக இசையும், பரதநாட்டியமும் வழங்கி வந்திருப்பதைப் பார்த்தால், இவருக்குத் தம் பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.

இந்த வருட விழாவை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இயக்குநர் எல். சபாரத்தினம் துவக்கி வைக்க, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் தலைமை வகிக்க, ஆர்.வி. நகர் எஸ். ரமேஷ் குழுவினர் பக்திப் பாடல்கள் இசைக்க, மாம்பலம் சகோதரிகள் விஜயலக்ஷ்மி-சித்ரா ஒன்றரை மணி நேரத்துக்கு ரசிகர்களைத் தங்கள் வசம் தக்கவைத்துக்கொண்டார்கள். ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்ப்பது பொதுவாகவே இசைக்கலைஞர்களின் இயல்பு.

ஒரேயடியாக ராக ஆலாபனை செய்து ரசிகர்களை சோர்வடையச் செய்யாமல், அதிகம் பரிச்சயம் இல்லாத் தெலுங்கு-சம்ஸ்கிருதப் பாடல்களைப் பாடி திகைக்க வைக்காமல், கச்சிதமாக இடையே "அலைபாயுதே கண்ணா' என்ற பாடலுக்கு மட்டும் கானடா ராகத்தில் ஆலாபனை செய்தார்கள். நிகழ்ச்சியின் பட்டியலைப் பாருங்கள்: துவக்கம், "ஸ்ரீவிக்னராஜம் பஜே' என்ற கம்பீர நாட்டை ராக, ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல். அடுத்து தியாகராஜரின் "ப்ரோச்சே வாரெவரே' என்ற ஸ்ரீரஞ்சனி ராகப் பாடல். அப்புறம் வந்தது பூர்விகல்யாணி ராகத்தில் அமைந்த அருமையான தமிழ்ப் பாடல் - "ஆனந்த நடமாடுவார் தில்லை'. நீலகண்ட சிவன் எழுதியது. அப்புறம் முத்துசாமி தீட்சிதர் இயற்றிய பாடலான "அகிலாண்டேசுவரி'. சுண்டி இழுக்கும் இனிமை த்விஜாவந்தி ராகத்துக்கு உண்டு. அதுவும் பாடலை மெதுவாக இசைக்கும்போது அந்த இனிமை இரட்டிப்பாகிறது. ஹிந்தோள ராகத்தில், "நம்பிக்கெட்டவர் எவரய்யா?' என்ற பாபநாசம் சிவன் பாடல் தொடர்ந்தது. இதற்குள் பாடகிகளுக்குத் துண்டுச் சீட்டுகள் வரத்தொடங்கிவிட்டன - நேயர் விருப்பம்!

ராஜாஜி நிறைய உரைநடை நூல்கள் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்து அவர் இயற்றிய ஒரே பாடல், "குறை ஒன்றுமில்லை'. இது அவருக்கு அத்தனை நூல்கள் எழுதிய பெருமைக்கு ஈடாக, புகழைத் தேடித்தந்துவிட்டது. மாம்பலம் சகோதரிகள் இதைப் பாடிவிட்டு, இன்னொரு புகழ்பெற்ற பாடலான, கனகதாசர் இயற்றிய "கிருஷ்ணா நீ பேகனே' என்ற பாடலைப் பாடினார்கள். அடுத்துவந்ததும், நேயர் விருப்பம்தான் போலும். "என்ன கவி பாடினாலும்' என்ற நீலமணி ராகப் பாடலைப் பாடினார்கள். (முன்பு இதை மதுரை சோமு உருகி உருகிப் பாடுவார். மீண்டும் இது மேடைக்கு வந்திருக்கிறது, அருணா சாய்ராம் உபயத்தில்) இதை எழுதியவர் ஆனையாம்பட்டி ஆதிசேஷய்யர். (இம்மாதிரி அழகான பழைய தமிழ்ப்பாடல்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன பாடகர்கள் தேடி எடுத்துக்கொண்டுவந்து பாடினால் ரசிக்காமலா

போவார்கள்!) ஹம்சாநந்தியில் "திருப்புகழ்' பாடிவிட்டு, மங்களமாக இசை நிகழ்ச்சியை முடித்தார்கள் மாம்பலம் சகோதரிகள்.

இவர்களுக்கு வயலின் வாசித்து இனிமை சேர்த்தவர் டாக்டர் ஹேமலதா. மிருதங்கத்தில் லயத்தை வழங்கியவர் நெல்லை பாலாஜி. கஞ்சிரா வாசித்தவர் மூத்த கலைஞர் கே.எஸ். ரங்காச்சாரி.

கச்சேரி முடிந்ததும், தாளாளரிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார் சகோதரிகளில் ஒருவர்: ""800 மாணவ-மாணவிகளையும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செய்யுங்கள். தேர்வு சமயம் அல்லாத காலத்தில், ஜூன் மாதத்தில் இசை விழாவை நடத்துங்கள். தென்சென்னைப் பள்ளிகள் சிலவற்றில் செய்வது மாதிரி, சும்மா கச்சேரியைக் கேட்டாலே இரண்டு போனஸ் மார்க் கொடுப்பதாகச் சொல்லுங்கள். அப்புறம் நிகழ்ச்சி பற்றி அவர்களின் கருத்துகளை விமர்சனமாக எழுதித் தரச் சொல்லி ஊக்குவியுங்கள். இசையை அவர்களும் ரசிக்கட்டும். வரும்காலத்தில் அவர்கள் ரசிகர்களாக மாறிவிடுவார்கள்''

தாளாளர் தியாகராஜன் என்ன முடிவு செய்யப் போகிறாரோ! பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவரையும் விட்டுவிடாமல் நன்றி கூறினார். ஓடியாடி உழைத்த சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று அனைவருக்கும் நன்றி சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.