பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வணக்கம் தமிழா: சரியான செயல்... சரியான முறை...

சரியான நேரம்! "எல்லாம் இறைவன் செயல்' என்று கூறுகிறார் "புளூ ஸ்கை' குழும நிறுவனங்களின் நிறுவனர் இயக்குநரான எஸ். இக்பால்.  பெரிய பெரிய கட்டடங்களில் எலெக்ட்ரிகல் மற்றும் மெக்கானிகல் வேலைகளைச் செய்வதற்கென

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:29 pm

ரவிக்குமார்

சரியான நேரம்! "எல்லாம் இறைவன் செயல்' என்று கூறுகிறார் "புளூ ஸ்கை' குழும நிறுவனங்களின் நிறுவனர் இயக்குநரான எஸ். இக்பால்.

 பெரிய பெரிய கட்டடங்களில் எலெக்ட்ரிகல் மற்றும் மெக்கானிகல் வேலைகளைச் செய்வதற்கென்றே தனி நிறுவனங்கள் இருக்கும். துபாயில் இதுபோன்ற ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து, இன்றைக்கு புளூ ஸ்கை குழுமத்திற்கு தலைவராக இருக்கிறார். புளூ ஸ்கை எலெக்ட்ரிகல் அண்ட் மெக்கானிகல் சிஸ்டம்ஸ், புளூ ஸ்கை ஏர்கண்டிஷன் மெக்கானிகல் சிஸ்டம்ஸ், புளூ ஸ்கை மிடில் ஈஸ்ட் டிரேடிங், புளூ ஸ்கை பிரைவேட் லிமிடெட், புளூ ஸ்கை காண்ட்ராக்டிங் போன்ற நிறுவனங்களைத் துபாய், கத்தார், அபுதாபி, சென்னை போன்ற பல இடங்களில் தொடங்கி வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் இக்பால்.

 ஒரு கட்டடம் என்பது வெறும் செங்கல், மணல், சிமெண்ட் போன்றவைகளால் மட்டுமே ஆனதல்ல. கட்டடத்திற்கு மின் உபகரணங்களைப் பொருத்தவேண்டும். குளிர்சாதனக் கருவிகளைப் பொருத்தவேண்டும். தண்ணீர்க் குழாய்களைப் பொருத்தவேண்டும். கட்டடத்தில் தீ பிடிக்காமல் இருக்க அதிலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும். இப்படி கட்டடம் தொடர்பான பல்வேறு வேலைகளையும் இவருடைய நிறுவனங்கள் செய்து தருகின்றன.

 இக்பால் தாம் கடந்த வந்த பாதையின் தடங்களையும் எதிர்கால இலக்கையும் நம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

 ""ராமநாதபுரம், கீழக்கரைதான் எங்களுக்குப் பூர்வீகம். மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் எனக்கு இருக்கிறார்கள். அப்பா, சாகுல் ஹமீது துபாயில் கடைநிலை ஊழியராகத்தான் இருந்தார். நடுத்தர வர்க்கத்துக்கும் குறைவானதுதான் எங்களின் குடும்பம். சென்னையில் சிறிய அளவில் சிற்றுண்டிகள் செய்து விற்று எங்களைப் படிக்கவைத்தார் எங்களுடைய தாய். அந்த வயதில் அவருக்கு உதவிகள் செய்யவேண்டும் என்று கூட எங்களுக்கு தோன்றவில்லை. எலெக்ட்ரிகலில் டிப்ளமோ படித்து முடித்தேன்.

 கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் எலெக்ட்ரிகல் மெக்கானிகல் தொடர்பான பணிகளைச் செய்யும் துபாய் நிறுவனம் ஒன்றில் ஊழியனாகச் சேர்ந்து அந்த நிறுவனத்தில் படிப்படியாக கண்காணிப்பாளர், மேலாளர் எனப் பல முக்கிய பதவிகளை வகித்தேன். அந்தந்தப் பதவிகளுக்கு உரிய பணி நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தேன்.

 ஏறக்குறைய அந்த நிறுவனத்தில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தேன். துறையில் இருக்கும் பல்வேறு நிலைகளிலும் எனக்கு ஆழ்ந்த அனுபவம் கிடைத்தது. அந்த நிறுவனத்திலிருந்து விலகி, தனியாகத் தொழில் தொடங்க முடிவெடுத்தேன்.

 பத்தாண்டு அனுபவத்துடன் அந்த நிறுவனத்திலிருந்து விலகியதில் எனக்குக் கிடைத்த தொகையை மூலதனமாகக் கொண்டு, துபாயில் புளூ ஸ்கை நிறுவனத்தை 1994-ல் தொடங்கினேன். ஆரம்பித்த ஐந்து, ஆறு வருடங்களுக்கு இந்தத் துறையில் எங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் எங்களைப் போன்ற பிற நிறுவனங்களின் போட்டியைச் சமாளிப்பதற்குமே சரியாக இருந்தது.

 "தனியாக நிறுவனத்தைத் தொடங்கியது நான் எடுத்த தவறான முடிவோ?' "ஆழம் தெரியாமல் கால் வைத்துவிட்டோமோ?' என்று நான் தூங்காமல் விழித்திருந்த நாள்கள் எத்தனையோ இருக்கும். பல நாட்கள் காருக்குப் பெட்ரோல் போட்டுவிட்டு, நான் பட்டினி இருந்திருக்கிறேன். ஏனென்றால் ஒரு நாளைக்கு 100 கி.மீட்டராவது சுற்றினால்தான் ஏதாவது ஆர்டர் கிடைக்கும். ஒருமுறை டீ குடிக்கலாம் என்று காரை நிறுத்திவிட்டு, டீயை ஆர்டர் செய்தேன். காசை எடுப்பதற்கு பேண்ட் பாக்கெட்டில் துழாவினால் காலியாக இருந்தது. அன்று 50 ஃபில்ஸ் (நம்மூர் மதிப்பில் ஆறு ரூபாய்!) இல்லாமல், "காரில் காசு வைத்திருக்கிறேன்... எடுத்துவருகிறேன்...' என்று கடைக்காரரிடம் கூறிவிட்டு, காரை கிளப்பிக்கொண்டு போய்விட்டேன். நிச்சயம் அந்த கடைக்காரர், "டீக்கு வழியில்லாதவனெல்லாம் கார் வெச்சிருக்கான்...' என்று திட்டியிருப்பார்.

 இந்தச் சூழ்நிலையில் உடனிருந்த சில நண்பர்களால் தொழிலில் நஷ்டங்கள் ஏற்பட்டன. இந்த மோசமான காலத்தைக் கடந்து வந்ததை இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கின்றது. நிச்சயம் இறை அருளும், என் மீது எனக்கிருந்த நம்பிக்கையும்தான் என்னை இந்தத் தொழிலில் நிலைநிறுத்தியது.

 சரியான செயலைச் செய்வது. சரியான முறையில் செய்வது. சரியான நேரத்தில் செய்வது. எப்போதும் இதைக் கடைப்பிடிப்பது. இவைதான் எங்களின் கொள்கை. இதன்மூலம்தான் நாளுக்கு நாள், வருடத்துக்கு வருடம் எங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வந்தோம். பல முன்னணி நிறுவனங்களுடனும் கைகோர்த்து எங்களின் பணியை பல நாடுகளில் விரிவுபடுத்த முடிந்தது.

 வாடிக்கையாளர்களை மதிக்கும் அதேநேரத்தில் எங்களின் ஊழியர்களின் நலனிலும் நான் கண்ணும் கருத்துமாக இருப்பேன். விதிகளுக்கு உட்பட்டு அவர்களுக்கான எல்லா வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறேன்.

 வெறும் பத்து ஊழியர்களோடு தொடங்கப்பட்ட எங்களின் புளூ ஸ்கை நிறுவனத்தில் இன்றைக்கு ஆயிரம் பேர் ஊழியர்களாக இருக்கிறார்கள். அவர்களில் குறைந்தபட்சமாக 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் முதல் மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் வரை இருக்கின்றனர்.

 என்னிடம் பணிபுரிபவர்கள் எல்லாரும் என்னைவிட அதிகமாகப் படித்தவர்கள். இவர்கள்தான் என்னுடைய பலம். எங்கள் நிறுவனத்தின் எல்லா நிலைகளிலும் என்னால் வேலை செய்யமுடியும் என்பது அனுபவத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் தனிப்பட்ட தகுதி என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு துறையிலும் இப்படி பல நுட்பங்கள் இருக்கும். அந்த நுட்பங்களைப் பொறுமையாகக் கைக்கொள்ள வேண்டும். அதுதான் எதிர்கால வெற்றிக்கான ஆதாரமாக இருக்கும்.

 தற்போது நாங்கள் கட்டுமானத் துறையிலும் கால் பதித்திருக்கிறோம். தஞ்சாவூர் அருகேயுள்ள பட்டுக்கோட்டையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100 வீடுகளை அரசு திட்டத்திற்காக கட்டிவருகிறோம்.

 சிற்றுண்டிகளைத் தயாரித்து விற்று என்னை ஆளாக்கிய என்னுடைய அன்னையை எங்கள் குழுவின் ஒரு நிறுவனத்திற்கு இயக்குநராக்கி அழகு பார்க்கிறேன். என்னுடைய சகோதரர்களை நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தியிருக்கிறேன்.

 தனிப்பட்ட முறையில் எனக்கு ஓர் ஆசை இருக்கிறது. ஆதரவற்றவர்களுக்கு ஓர் இல்லம் அமைத்து அவர்களை கடைசி காலம் வரைக்கும் பராமரிக்கவேண்டும் என்பதே அது. அந்த ஆசையையும் இறைவன் நிறைவேற்றுவான்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.