சரபேந்திர பூபால குறவஞ்சி

சரபேந்திர பூபால குறவஞ்சி - பதிப்பாசிரியர்: மணி.மாறன்; பக்.180; ரூ.100; சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்.
Published on
Updated on
1 min read

சரபேந்திர பூபால குறவஞ்சி - பதிப்பாசிரியர்: மணி.மாறன்; பக்.180; ரூ.100; சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர்.

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. இது நாடக வகையைச் சார்ந்தது. இறைவன் அல்லது மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவது. இந்நூல், குற்றாலக் குறவஞ்சிக்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படுகிறது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பட்டதுதான் இக்குறவஞ்சி. இவர் தண்டபாணி தேசிகரின் மகனாவார். இந்நாடகம் தஞ்சைப் பெரிய கோயிலில் நடைபெற்ற திருவிழாக் காலங்களில் ஆடப்பெற்று வந்துள்ளது. அஷ்டக்கொடி விழாக் காலத்தின் போது ஆடப்பெற்று வந்ததால், இது "அஷ்டக்கொடி குறவஞ்சி' எனவும் வழங்கப்பெறும். இக்குறவஞ்சி மூலம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுக்கும் வளம் சேர்த்துள்ளார் சிவக்கொழுந்து தேசிகர்.

இக்குறவஞ்சியின் தலைவி மதனவல்லி, சரபோஜி மன்னன் உலா வரும்போது, அவனைக் கண்டு அவன் மீது கொண்ட காதலால் விரகதாபத்தில் துடிக்கிறாள். தன்னை அம்மன்னனோடு சேர்த்து வைக்காத மன்மதன், மதி, தென்றல் ஆகியவற்றைப் பழிக்கிறாள். தன் தோழியை தூது போகச் சொல்கிறாள். தூது சென்றவள் வரவில்லையே என்று இரங்கியிருக்கும் வேளையில் அங்கு ஒரு குறத்தி வருகிறாள். அவளிடம் குறி கேட்கிறாள். இப்படியாக குறவஞ்சி இலக்கணத்துக்கே உரிய அனைத்தும் கூறப்பட்டுள்ளன.

சிறப்புப் பாயிரம், கடவுள் வாழ்த்து, கட்டியக்காரன் வருகை, மதனவல்லி தோழியருடன் பந்தாடுதல், சரபோஜி உலா வருதல், அவன் நாட்டின் சிறப்பு, மன்மதனின் மலரம்பு, மலை வளம், சாதி வளம், நதி வளம், தேச வளம், சிங்கன் வருகை, சிங்கியைத் தேடுதல், அவளைக் காணல், இருவரும் உரையாடுதல் முதலிய நாடகப் பாங்குகள் அனைத்தும் அமைந்துள்ளன.

குறிவகைகள், நிமித்தங்கள், கைரேகை, கால் ரேகை, மறு, தழும்பு, சுழிகள், கவுளி, விரிச்சி, ஆந்தையின் சொல், குறவர்கள் வேட்டையாடுதல், பறவைகளைத் தந்திரமாக வலைவீசிப் பிடித்தல் முதலிய பண்டைய தமிழர்தம் பழக்க வழக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com