நூல் அரங்கம்
ராமாயணம் - தேவி வனமாலி; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.320; ரூ.275; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், உஷா ப்ரீத் காம்ப்ளக்ஸ், 42, மாள்வியா நகர், போபால் -462003.
பெண் துறவியும், எழுத்தாளருமான தேவி வனமாலி, ஸ்ரீ ராம்லீலா என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பு என்றாலும் மூலத்தைப் படிப்பதைப் போன்ற விறுவிறுப்புடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். எல்லாருக்கும் தெரிந்த வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமான வடிவம்தான் இந்நூல். அதனை நூலாசிரியர் கொடுத்திருக்கும் விதம் சிறப்பு என்றால், அவர் எழுதியிருக்கும் முன்னுரை மிகச் சிறப்பு. ராமபிரானின் குணாதிசயங்கள் குறித்து எழுந்துள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் விளக்கவுரையாக முன்னுரை மலர்ந்திருக்கிறது. ராமபிரானின் குணநலன்,எந்த நிலையிலும் தர்மத்தைக் கடைப்பிடித்து (கொள்கைப் பிடிப்புடன்) வாழ்வதே. சுயநலத்துக்காக ராமர் ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை. அதனால்தான் தந்தை தசரதர் வனவாசம் செல்லுமாறு கூறியபோது முகம் சுளிக்காமல் சென்றார். இதேபோன்று தனிப்பட்ட முறையில் தமது மனைவி சீதாதேவியின் கற்பு குறித்த தெளிவு இருந்தபோதிலும், அரசனின் மனைவி நாட்டு மக்களுக்குத் தனது தூய்மையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதனால்தான் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னார் என்று ஏற்கும் வகையிலான வாதங்களை முன்னுரையில் நூலாசிரியர் முன்வைக்கிறார். ராமர் ஏன் வாலியைக் கொன்றார், தாடகை வதம் ஏன் போன்றவற்றுக்கும் முன்னுரையில் விளக்கம் அளித்துள்ளார். முன்னுரையே இப்படி வசீகரித்தால் முழு நூலும் எப்படி இருக்கும்? ராமர், லட்சுமணர், சீதை, ஹனுமன் உள்ளிட்ட பாத்திரப் படைப்புகளின் உன்னதத்தையும் அவர்கள் ஏன் தெய்வீகப் புருஷர்கள் என்பதையும் நன்கு உணர்த்தும் வகையில் நூல் அமைந்துள்ளது.
சித்தா மருந்துகளின் செய்முறை விளக்கம்; தொகுப்பு: அரவிந்த் ஹெர்பல் ஆரோக்கிய நிலை மருத்துவர் குழு; பக். 344; ரூ.200; நர்மதா பதிப்பகம், சென்னை-17; )044- 2433 6313.
இந்நூலில் சித்த மருத்துவத்துக்கான களிம்புகள், லேகியங்கள், கேப்சூல்கள், டானிக்குகள், சர்பத்கள், சூரணங்கள், பற்பங்கள் மற்றும் பல்பொடி, சாக்லேட், மாத்திரைகள் செய்யும் முறை பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
சித்தர்களான போகர், புலிப்பாணி, இராமதேவர் முதலியவர்களைத் தவிர, பெரும்பாலான சித்தர்கள் தமிழர்களே. ஆதலால், இச் சித்த வைத்தியம் தமிழ்நாட்டுக்கே உரியதென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதனால்தான் அவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் தமிழ்ச் செய்யுளில் இயற்றப்பட்டுள்ளன.
மேலும் சித்த மருத்துவ முறை, உலக நன்மைக்காக எழுதப்பட்ட காரணத்தால் இம்மருத்துவத்தை வியாபாரமாக அல்லது பணத்திற்காக செய்யக்கூடாது. அப்படி விதித்த விதிகளை மீறி நடந்தால் சித்தர்கள் சாபம் வந்து சேருமெனக் கருதப்படும் என்றும் இந்நூலில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சித்த மருத்துவத்தில் ஆர்வமுடைய, ஈடுபாடுடையவருக்கு மட்டுமே இந்த நூல் பெரிதும் பயனளிக்கும். சாதாரண மக்களுக்கு இதில் கூறப்பட்டுள்ள மருந்துககளைத் தயாரிப்பதற்கான மூலிகைகள், மூலப் பொருள்களைப் பற்றிய விவரங்கள் இதுவரை கேள்விப்படாததாகவே இருக்கும். இவையெல்லாம் எங்கே கிடைக்குமோ என்ற ஒருவகை திகைப்பும் ஏற்படும்.
இருப்பினும் நமது பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்துகொள்ளவும் அதுதொடர்பான விழிப்புணர்வைப் பெறவும் இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் துளியும் ஐயமில்லை.
பொதுத்தேர்வுகளில்... நேர் வழியில் 100 - அறிவுரை அல்ல : வழிமுறை - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி; பக்.70: ரூ.65; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
அதிக மதிப்பெண்கள் எடுப்பதே மாணவர்களின் லட்சியமாக இருக்கிறது. படிப்பு என்பது படபடப்போடு தேர்வறைக்குள் நுழையும் வரை படிப்பதல்ல என்பதை 20 சிறந்த குறிப்புகளாக வரையறுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அறிவு மேம்பட நாள்தோறும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்வதை மகிழ்ச்சியாகக் கூட செய்யலாம், தேர்வுக்கு முன்னதாக சளைக்காமல், மலைக்காமல் படிக்கலாம், அடிக்கடி தேர்வுகள் எழுதுவதும் பயிற்சிதான் என்கிறார் நூலாசிரியர். நாள்தோறும் பள்ளிக்குச் சென்று எல்லா வகுப்புகளையும் கவனித்து, குறிப்புகள் எடுத்துப் படிக்கும் பழக்கமும் வசமாகி விட்டால், மதிப்பெண்களும் மாணவர் வசமே. கசக்கும் கணிதமும், அழ வைக்கும் அறிவியலும் இனிக்க, பொருள் புரிந்து படிக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள், பிள்ளைகள் படிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வப்போது பிள்ளைகளை மனப்பாடப் பகுதியைச் சொல்லச் சொல்லி கேட்பது, தகுதியான டியூசன் ஆசிரியர்களை நியமிப்பது என பெற்றோர்களுக்கான பல ஆலோசனைகளையும் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். தேர்வுகள் தேர்ச்சி பெறுவதற்காக மட்டுமல்ல, திறன்களை வளர்த்துக் கொள்ளவும்தான். புத்தகம் படிப்பதை விடவும், ஆரோக்கியமான பொழுதுபோக்கு இல்லை என்பதை பிள்ளைகள் உணர்ந்து விட்டால் போதும் அதிக மதிப்பெண்கள் பெற என்கிறார் ஆசிரியர்.
செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும் - பதிப்பாசிரியர்: த.மலர்க்கொடி; பக். 296; ரூ.300; அய்யா நிலையம், 1603, ஆரோக்கிய நகர், ஐந்தாம் தெரு, இ.பி.காலனி, நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் - 613 006.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து (மூன்று நாள்கள் மார்ச் 4-6, 2015) நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
பண்டைத் தமிழர்களுடைய வாழ்க்கை, மரபு வழிப்பட்ட வாழ்க்கை. சங்ககாலம் தொடங்கி, இக்காலம் வரை அவர்கள் நடைமுறைப்படுத்திய மரபுகள் சில கொள்ளப்பட்டன; சில தள்ளப்பட்டன. இதற்குக் காரணம், தலைமுறை இடைவெளி என்று
கூடச் சொல்லலாம். மேலும், ஆணாதிக்கம் தலைதூக்கி இருந்த சங்க காலத்திலும்கூட மகளிர் பலர் ஆடவர்க்கு இணையாகப் பலவகையிலும் எவ்வாறு பல்வேறு செயல்களைச் செய்து காட்டினர் என்பதற்கான சான்றுகள் இத்தொகுப்பில் உள்ளன.
இதிலுள்ள 27 கட்டுரைகளில், முப்பொருள் (முதல், கரு, உரி) பற்றிய விளக்கம், களவியல், கற்பியல்களில் மகளிரின் பங்கு, மகளிர் செய்து வந்த தொழில்கள், அவர்களிடமிருந்த ஆளுமைப் பண்புகள், புலமைத்திறம், கற்பு, போர், இசை, நம்பிக்கை, ஆடல், வழிபாடு, விளையாட்டு, குடும்ப உறவு, ஒழுக்கம், கலை முதலியவை பற்றிய சான்றுகளும் விளக்கங்களும் உள்ளன.
மகளிர் மட்டுமல்ல, இலக்கிய ஆர்வலர்கள் பலரும் படித்துப் பயனடையும் விதத்தில் இதிலுள்ள கட்டுரைகள் உள்ளன. ஆனால், நூலின் பக்கங்களைவிட நூலின் விலை அதிகமாக இருப்பதால், குறிப்பாக மகளிர் இதை வாங்கிப் படிப்பார்களா என்ற ஐயம் எழுகிறது. இதுபோன்ற கருத்தரங்கக் கட்டுரைத் தொகுதிகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்தால் நூலின் தரம் மேம்படும்.
மானுட அமைதிக்கு வழிவகுத்த பேரறிஞர்களின் பேருரைகள் - கோபால் மாரிமுத்து; பக்.395; ரூ.169; கோபால் மாரிமுத்து, சென்னை-106; )044- 2363 0443.
ஆப்ரஹாம் லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர்கிங், உட்ரோ வில்சன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், நேரு, ஜான் கென்னடி, பராக் ஒபாமா உள்ளிட்ட 37 தலைவர்கள், அறிஞர்களின் குறிப்பிடத்தக்க சொற்பொழிவுகளின் ஆங்கில மூலமும், அவற்றின் தமிழாக்கமும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், நூலைப் படிப்பவரின் அறிவும், பார்வையும் விரிவடையும் வாய்ப்புள்ளது.
நிறவெறி ஒழிய ""கண்ணியமான ஒழுக்கமான போராட்டத்தை நடத்த வேண்டும்'' என்று மார்ட்டின் லூதர்கிங் பேசியது, ""இங்கிருக்கும் சட்டம் அயல்நாட்டு சுரண்டலுக்கு கூஜா தூக்கிக் கொண்டிருக்கிறது. சுரண்டலுக்குத் துணை போகிறது'' என்று அகமதாபாத் நீதிமன்றத்தில் 1922ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வாதாடியது, ""மகிழ்ச்சி தந்த சுதந்திரம் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. அதிகாரத்தைத் தந்த சுதந்திரம் கடமையையும் சேர்த்தே கொடுத்திருக்கிறது'' என்று இந்தியா சுதந்திரமடைந்த நாளின் நள்ளிரவில் பாராளுமன்றத்தில் நேரு பேசியது, தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது நெல்சன் மண்டேலா, ""அரசியல் விடுதலையைக் கண்டுவிட்டோம். வறுமை, சாப்பாட்டுக்கு வழியில்லாமை என்ற அனைத்திலிருந்தும் வெளிவர இன்று உறுதி எடுத்துக் கொள்வோம்'' என்று உரையாற்றியது போன்ற மிக முக்கியமான சொற்பொழிவுகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.