
டால்ஸ்டாய் கதைகள் (யானைக்குத் தீனி மற்றும் கதைகள்) - தொகுப்பாசிரியர்: எம்.ஏ.பழனியப்பன்; பக்.160; ரூ.120; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை-17.
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் ஐந்து கதைகளின் தொகுப்பு இந்நூல். மனித வாழ்வை மிக அற்புதமாக, துல்லியமாகச் சித்திரிப்பவை.
இந்நூலில் இடம் பெற்ற கதைகள் வேறொரு தளத்தில் மனித வாழ்வை, மனிதர்களின் மனதை, விருப்பு, வெறுப்புகளை, நல்லனவற்றை, தீயனவற்றைச் சித்திரிக்கின்றன. உண்மையான வாழ்க்கையும், கற்பனையும் கலந்ததான நிகழ்வுகள் நம்மை வேறொரு உலகத்தில் பயணம் செய்ய வைக்கின்றன.
மக்களின் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல் அதிக வரி வசூலித்து வாழும் அரசன் ஒருவன், கொலையாளி ஒருவனுக்கு மரண தண்டனை அளிக்கும்படி தீர்ப்பு சொல்கிறான். மரணதண்டனை அளிக்க கொலையாளியின் தலையைத் துண்டிக்க வேண்டும். துண்டிப்பதற்கான கருவியை வெளிநாடுகளில் இருந்து தருவிக்க முயற்சிக்கும்போது அது அதிக விலையாக இருப்பதால், மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. மூன்றுவேளை உணவு, தங்குமிடம் என அந்தக் கைதிக்கு அளிக்கப்படுகிறது. பின்னர் அந்தச் செலவையும் குறைக்க, கைதியின் பாதுகாவலர் விலக்கப்படுகிறார். ஆனால் கைதி அங்கிருந்து தப்பிச் செல்லாததால், அவனுக்கு உதவித் தொகை கொடுத்து விடுவிக்கப்படுகிறான்.
இது "யானைக்குத் தீனி' கதையின் உள்ளடக்கம். சைத்தானின் சொல் கேட்டு தமது நல்ல ஆண்டையை எதிர்க்கத் துணியும் அடிமைகளின் தலைவன், "நன்மை நலம் தரும்' கதையில் வருகிறான். ஆண்டையைக் கோபப்படுத்துவதற்காக அவன் செய்யும் செயல்கள் வேடிக்கையாக இருக்கின்றன. லியோ டால்ஸ்டாயின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் கதைகள் இந்நூலில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.