வீடணன் துரோகியா? - எஸ்.கோகுலாச்சாரி, பக். 136, ரூ. 160, ஆலய தரிசனம் பதிப்பகம், புவனகிரி 608 601; ✆ 94422 90074.
'வீடணனை நேரடியாகவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி, தர்ம வழியில் நடந்தவர்' என்கிறார் நூலாசிரியர். 'ஏன் இந்த நூல்' எனும் கட்டுரையில், 'செஞ்சோற்றுக் கடன்' என்பதற்கான விளக்கமும், அது கும்பகர்ணனுக்கு பொருந்துமா என்ற கேள்வியையும் ஆசிரியர் கேட்டிருப்பது புதிய சிந்தனைக்கு வழிகோலியுள்ளது.
'காப்பியங்களை ஆராயும்போது கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன?' என்ற கட்டுரையில் ராமாயணத்தைப் படிக்கும் முறையை தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். வீடணனை எந்தக் கண்ணோட்டத்தில் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்பதற்கான 5 ஆலோசனைகள் அருமை. 'வீடணன் சிறப்புகள்' எனும் கட்டுரையில் வைணவர்கள் போற்றும் விதத்தை 7 வகையில் சுருங்கக் கூறி விளங்க வைத்துள்ளார்.
'சீதையை ராவணன் கவருவதற்கு சூர்ப்பனகை காரணமல்ல; அகம்பனன் எனும் அரக்கனே காரணம்' என்பது வியப்பாக உள்ளது. மாரீசனும் ராவணனுக்கு அறிவுரை கூறி கண்டித்திருப்பதையும், அதை ஏற்காத ராவணனிடம் வீடணனை சிறப்பித்து மாரீசன் பேசியிருப்பதையும் தனது கருத்துக்கான ஆதாரமாக்கியிருப்பது தனிச்சிறப்பாகும். வீடணனின் சிறப்புகள் தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
'வீடணன் துரோகியா?' என்ற கேள்விக்கு 'தடைகளும் விடைகளும்' என்ற கட்டுரையில், ராவணன் இறப்புக்குப் பிறகு வீடணனை அரக்கர் குலத்தினர் எப்படி ஏற்றுக்கொண்டனர் என்பதற்கு படிப்போர் ஏற்கும்
வகையில் விடையளித்திருக்கிறார் நூலாசிரியர். பண்பாட்டு காப்பியத்தின் பாரம்பரிய சிறப்பை எடுத்துரைக்கும் வாழ்வியல் சிந்தனைச் சுரங்கமே இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.