சந்திரகிரி ஆற்றங்கரையில்

சந்திரகிரி ஆற்றங்கரையில்
Published on
Updated on
1 min read

சந்திரகிரி ஆற்றங்கரையில் - சாரா அபூபக்கர் (தமிழில் - தி.சு. சதாசிவம்);  பக். 104; ரூ. 150; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை -4; ✆ 75500 98666.

சமுதாயத்துடன் ஒன்றி வாழ்ந்து, உற்றுநோக்கி, உட்செரித்த அதன் முடிச்சுகளை ஒரு பெண்ணாக ஆழ்ந்த சிந்தனைகளுக்குப் பின்  கண்ணிகளாக்கிப் பின்னப்பட்ட இஸ்லாமிய சமூகப் பின்னணியிலான மலையாள நாவலின் மொழிபெயர்ப்பு.  நாவலில் மையமாக, நடக்கிற அனைத்துக்கும் சாட்சியமாக சந்திரகிரி ஆறு.

நதிக்கரையில் ஒரு துண்டு நிலத்தில் வசிக்கும் சிறு குடும்பம். கணவன் மஹமத்கான், மனைவி ஃபாத்திமா. மூத்த மகள் நாதிரா, இளைய மகள் ஜமீலா.  இவர்களுடன் சம்பந்தப்படும் இன்னும் சிலர். விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவில்தான் நாவலில் வருகிறார்கள்.

திருமணம், தலாக், மறுமணம் ஆகியவற்றைச் சுற்றிய நாவலில் படிக்காத, எளியதொரு கிராமப் பெண் நாதிராவின் ஒவ்வோர் நுட்பமான உணர்வையும் ரத்தமும் சதையுமாக உடனிருந்து பார்த்தவரைப் போல எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் நூலாசிரியர். ஆண்களின் தன்னகங்கார மனநிலையால் பெண்களின் வாழ்க்கை  எப்படியெல்லாம் சீர்குலைந்து போகிறது?

நாவலுக்கான இலக்கணங்கள், செய்நேர்த்தி என்றெல்லாம் எதையும் பிடித்துத் தொங்கிக் கொண்டிராத எளிய, நேரடியான, ஆற்றொழுக்கான நடை. மொழிபெயர்ப்பும் நன்றாக வந்திருக்கிறது. ஆணாதிக்கமும் அவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய பெண்கள் நிலையும், எந்த சமுதாயமாக இருந்தாலும்,  தொடர்ந்துகொண்டு தானிருக்கிறது. இதைப் போல ஊருக்கு நூறு கதைகள் இருக்கின்றன. இலக்கியங்களாக, எழுத்துகளாகும் போதுதான் வெளியே தெரிய வருகின்றன.

பெண்கள், திருமணம், விவாகரத்து, இஸ்லாமிய நடைமுறைகள் பற்றி மிகச் சிறப்பான பின்னுரையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித். சிறிய நாவல் என்றாலும், மிகக் காத்திரமான, படிக்கிற ஒவ்வொருவரிடமும் மறக்க முடியாத பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிற  நாவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com