
சில்லறை வர்த்தகம் -பி.வி. ராமஸ்வாமி; பக்.260; ரூ.260; சுவாசம் பதிப்பகம்; சென்னை-600127. ✆ 81480 66645
வாடிக்கையாளருக்கும் வியாபாரிக்கும் இடையேயான நேரடித் தொடர்பு என்பது சில்லறை வர்த்தகத்தில்தான் ஏற்படும்; அந்த சில்லறை வர்த்தகத்தின் பொற்காலம் எழுபதுகளில் தொடங்கி பின்வரும் சில ஆண்டுகள் நீடித்ததாக நூலாசிரியர் கூறுகிறார்.
வர்த்தக விரிவாக்கத்துக்கு ஆறு முக்கிய விதிகளைப் பட்டியலிடும் நூலாசிரியர், கடைக்கு வரும் புதியவரை எப்படி வாடிக்கையாளராக ஆக்குவது என்பதை திறனாய்வு செய்து கூறி இருக்கிறார்.
தெருமுனைக் கடைகளாக இன்றும் இருக்கும் அண்ணாச்சி கடைகள் இப்போது சூப்பர் மார்கெட்டுகளாக, ஹைபர் மார்கெட்டுகளாக காலத்துக்கு தகுந்தாற்போல் உருமாறி நிற்கும் சூட்சுமத்தையும் கட்டாயத்தையும் நம்மால் உணரமுடிகிறது.
ஒரு வியாபாரத்தில் வாடிக்கையாளரின் மனதுக்கு ஏற்றார்போல் நடந்துகொள்ளும் பாங்கை தனது பணிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் வாயிலாகவும், சந்திக்க நேர்ந்த மனிதர்களின் வாயிலாகவும் ஏற்பட்ட அனுபவங்களைப் புத்தகத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அச்சு ஊடகத்தில் வந்த விளம்பரத்தில் தொலைபேசி எண்ணில் ஏற்பட்ட பிழையால் நேர்ந்த தர்மசங்கடமான சூழலை எத்தரப்பும் பாதிக்கப்படாதவாறு எதிர்கொண்டு சமாளித்ததைப்போல் பல சம்பவங்களை கூறியிருக்கிறார் ஆசிரியர்.
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் இருக்கும் 'டெயில் பீஸ்' புத்தகத்தை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேலும், ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் பார்கோடுகள் புதிய அணுகுமுறை; அதே சமயம் மிகவும் பயனுள்ளவை.
சில்லறை வர்த்தகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும், அடிப்படை விதிகளான வாங்குதல், அழகாக அடுக்குதல், பின் விற்றல் என்ற அடிப்படைகளைத் தவிர்க்க முடியாது என்பதே உண்மையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.