
பெரியவர் தோழர் தமிழரசன் (இரண்டு பாகங்கள்) - பெ.சிவசுப்பிரமணியம், பக்.300, 368; விலை-ரூ.350, ரூ.400, சிவா மீடியா, 489-ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அண்ணா நகர், ஆத்தூர்-636 102, சேலம் மாவட்டம். ✆ 9443427327
சமுதாயத்தின் மாற்றத்துக்கான பணியில் முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டபோதிலும், சட்டங்கள் ஒப்புக்கொள்ளாத அவருடைய போராட்ட முறைகளால் தீவிரவாதி எனக் குறுக்கப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படைத் தலைவர் தமிழரசனின் அரசியல் செயற்பாட்டு வரலாறுதான் இவ்விரு நூல்கள்.
தமிழரசன் காரணமல்ல என்று காவல் துறை அதிகாரிகள் பலர் இப்போது தெரிவித்தாலும் அரியலூர் மருதையாற்றுப் பால ரயில் விபத்திலிருந்து தொடங்கும் நூலில் குடும்பப் பின்னணி பற்றிய சிறு அறிமுகத்துடன் விரிவாக அவருடைய அரசியல் வாழ்வே பேசப்படுகிறது.
பொறியியல் கல்லூரி மாணவரான தமிழரசன், எவ்வாறு பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொள்கிறார், புலவர் கலியபெருமாளுடன் கொண்ட தொடர்பு, கொள்கை ரீதியிலான வளர்ச்சிப் போக்குகள், விடுதலைப் படை உருவாக்கம், மக்கள் பணி என நூல் விவரிக்கிறது.
'மக்கள் விரோதச் செயல்பாட்டுக்காக' அழித்தொழிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களுடன், விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து போராடுவோருக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த தியாகி அரியூர் ராதாகிருஷ்ணன் போன்றோர் பற்றியும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழரசனுடன் போராட்டக் களத்தில் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், இருந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தொடர்புடைய வழக்குகளைக் கையாண்ட காவல் துறை அதிகாரிகள் எனப் பலரையும் நேரில் சந்தித்துக் கோர்வையாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
பொன்பரப்பி வங்கிக் கொள்ளை - தமிழரசன் குழுவினர் கொல்லப்பட்டது வரையிலும் சொல்லும் நூல், பழிக்குப் பழியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஒரு கொலையுடன் முடிகிறது.
தீவிரவாதி எனப்பட்ட தமிழரசன், எத்தகைய மனிதாபிமானம் கொண்ட மக்கள் போராளியாகத் திகழ்ந்தார் என்ற மறுபக்கத்தை விவரிக்கும் நூல்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.