
ஐந்தாவது சுதந்திரம்- லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி; பக்.104; ரூ.150; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-83; ✆ 96003 98660.
எழுத்தாளர், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர், பதிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்ட நூலாசிரியர் (1925-2009) நாடு சுதந்திரத்துக்காக வீறுநடை போட்டிருந்தபோது எழுதிய 14 கட்டுரைகளின் தொகுப்புதான் தற்போது நூல் வடிவம் பெறுகிறது.
நாடு கொந்தளிப்பாக இருந்த காலத்தில், தமிழ்ப் பதிப்புத் துறையில் முக்கிய ஆளுமையாக இருந்த பெண் ஒருவரின் காத்திரமான பதிவுகள் நூலில் நிரம்பியுள்ளன.
இரண்டாம் உலகப் போரின்போது, புதியதொரு அதிகார மையமாக உருவான அமெரிக்காவில் 1941-இல் அதிபர் ரூஸ்வெல்ட் பேசும்போது, பேச்சு, வழிபாடு, அடிப்படைத் தேவைகள், அச்சமின்மை ஆகிய நான்குக்கும் அடிப்படையான தெரிவு செய்வதே சுதந்திரம். 'ஐந்தாவது சுதந்திரம்' என்ற கட்டுரையில் சுதந்திரத்தின் அவசியத்தை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
சமூகத்தில் ஊறிக் கிடக்கும் ஊழல்களைப் பாரபட்சமின்றி வன்மையாகக் கண்டிக்கும் வகையில் சில கட்டுரைகள் உள்ளன. நாட்டின் முற்போக்கு, உலக அரங்கில் இந்தியர்களின் பங்கு போன்றவை இடம்பெற்றுள்ளன.
நூலின் தலைப்புக் கட்டுரையில், ஒரு சிறுவன் தனது விருப்பத்துக்கு முடி வைக்க முடியாவிட்டால் அமெரிக்கா கொண்டாடும் அதன் ஜனநாயகத்தின் மூன்று தூண்களான வாழ்க்கை, சுதந்திரம், மனிதனின் சந்தோஷம் ஆகியவற்றால் என்ன பயன் என்று நூலாசிரியர் கேட்கிறார்.
தனிமனித வாழ்க்கையில் ஆங்கிலேய அரசு தலையிட்டது, விழாக்களின் அழைப்பிதழ்களின் அளவையும், பத்திரிகைகளின் பக்கங்களையும் அரசே நிர்ணயித்தது என பல விஷயங்களைப் படிக்கும்போது, முன்னோர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை உணர முடிகிறது. நூலாசிரியருக்கு அந்தக் காலத்தில் பதிப்புத் துறையில் ஏற்பட்ட சவால்கள், நஷ்டங்கள், வீழ்ச்சிகளையும் படித்தறியலாம். நாட்டின் விடுதலையையும், பெண் சுதந்திரத்தையும் உணர வைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.