கவிமணியின் பன்முகத் திறன்

கவிமணியின் பன்முகத் திறன்

கவிமணியை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் சிறந்த நூல்.
Published on

கவிமணியின் பன்முகத் திறன்- பி.யோகீசுவரன்; பக்.244; ரூ.275; நீலா பதிப்பகம், சென்னை-90; ✆ 94456 18541.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் சீரிய பங்கை அளித்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. தனது கவிதைகள் மூலம் மக்கள் மத்தியில் விடுதலை வேட்கையை ஏற்படுத்திய கவிமணியின் பன்முகத் திறனை விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார் நூலாசிரியர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கக் கோரி நடைபெற்ற தெற்கெல்லை போராட்டத்தில் கவிமணியின் பங்கு குறித்த தகவல்கள் அன்றைய காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழலைப் படம்பிடித்துக் காண்பிக்கின்றன.

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்ற மகாகவி பாரதியின் நோக்கத்தின்படி, பாரசீக கவிஞர் உமர் கயாமின் வாழ்வியல் சிந்தனைகளையும், புத்தரின் போதனைகளையும் தமிழில் மொழிபெயர்த்தார் கவிமணி. உமர் கயாமின் பாடல்கள் சில இந்த நூலில் தரப்பட்டுள்ளன. புத்தரின் போதனைகள் அடங்கிய கட்டுரையும் சிறப்பு.

'மருமக்கள் தாயத்தால்' நாஞ்சில் நாட்டு வேளாளர் சமுதாயம் எவ்வாறெல்லாம் சீர்குலைந்தது என்பதை கவிமணி 'மருமக்கள் வழி மான்மியம்' நூல் வழியாக எடுத்துரைத்தார். மருமக்கள் வழி மான்மியம் என்பது ஒரு துன்பியல் வரைவு. அதை அங்கதச் சுவையோடு சொல்லியது கவிமணியின் நூல். மருமக்கள் வழி ஒழிப்பில் கவிமணியின் மேன்மைமிக்க பங்களிப்பை விரிவாகத் தந்துள்ளார் நூலாசிரியர்.

கவிமணியின் இளமைக் காலம் தொடங்கி, ஆராய்ச்சிக் களங்கள் வரையிலான 35 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிமணியின் சமுதாயப் பார்வை, ஆன்மிகப் பார்வை, மனித வாழ்க்கைக்கு அவர் காட்டும் வழி என கவிமணியை முழுமையாக அறிந்துகொள்ள உதவும் சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com