
மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண் - தமிழருவி மணியன்; பக்.104; ரூ.60; கற்பகம் புத்தகாலயம், சென்னை 600017 ✆ 044-23414347.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குக் காரணமாக விளங்கிய மகத்தான தலைவர்களை நன்றியுடன் நினைவுகூர்வதே நாகரிகத்தின் நல்லடையாளம் என்று முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிடுவது முற்றிலும் சரியானது. ஆனால் காலவெள்ளம் சில பெரும் கோபுரங்களையும் காணாமல் மூழ்கடித்துவிடுகிறது. சேறும் பாசியும் புதைந்து நோய்க் களமாகிவிட்டது இன்றைய அரசியல் அமைப்பு என்று கவலையுறும் நூலாசிரியர், கடந்து சென்ற தலைமுறையின் தலைசிறந்த தியாகிகள் குறித்து எழுதிய வரிசையில் வெளியாகியுள்ளது 'ஜெ.பி.' குறித்த இந்தப் புத்தகம்.
ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், மெüலானா அபுல் கலாம் ஆசாத் நிகழ்த்திய உரையை நேரில் கேட்ட சம்பவம்தான் ஜெயபிரகாஷ் நாராயண் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோபாலகிருஷ்ண கோகலேயும் ஜெ.பி.யின் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். ஒத்துழையாமை இயக்க அறைகூவலை ஏற்று தனது கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார். பின்னர், ஆங்கிலேய அரசின் நிதி உதவியைப் பெறாத பிகார் வித்யாபீடம் என்ற கல்வி நிறுவனத்தில் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் அமெரிக்காவில் தனது கல்வியைத் தொடர்ந்தபோது, தூய்மைப் பணி உள்பட பல சிறு வேலைகளை ஏற்று வருவாய் ஈட்டினார். அமெரிக்க கல்லூரி படிப்புக் காலத்தில் அவருக்கு மார்க்ஸிய சிந்தனையாளர்களின் தொடர்பு கிடைத்தது.
சட்ட மறுப்பு இயக்க காலகட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கைதானபோது, தற்காலிக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் ஜெ.பி.
காங்கிரஸில் இடதுசாரிக் குழுவில் இயங்கி வந்த அவர், பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி, பின்னாளில் 'லோக் நாயக்' என்று போற்றப்படும் அளவுக்கு தனித்துவமிக்க தலைவரானார்.
அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் தனித்துவமான ஆளுமையாக வலம் வந்தவர் ஜெ.பி. நவீன இந்திய அரசியலில் சிறந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த அவர், 1970-களின் மத்தியில் இந்திய அரசியல் இருண்ட காலகத்தை எதிர்கொண்டபோது, நாட்டுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சினார்.
ஜெ.பி.யின் அரசியல் பயணத்தை கச்சிதமாக சிறு நூலில் வடித்துள்ளார் நூலாசிரியர். இந்திய அரசியல் சிந்தனை ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.