
தேவநேயப் பாவாணரின் தமிழ்ப் பணிகள் - க.தமிழமல்லன்; பக்.432; ரூ.450; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21 ; ✆ 9380530884.
எதைப்பற்றியும் எண்ணி அஞ்சாமல் நடுங்காமல் எவருக்கும் தலை வணங்காமல் வாழ்நாள் முழுவதும் தமிழ்நல ஆய்வாளராக விளங்கியவர் பாவாணர். அப்படிப்பட்டவரின் தமிழாய்வுப் பணிகளை, பெருமைகளை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
'குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம்' என்பதை உயிர்க்கொள்கையாகக் கொண்டு, அதை வலியுறுத்தி தொடர்ந்து எழுதியவர் பாவாணர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் இயக்குநராக இருந்து திறம்பட செயல்பட்டவர்.
இன்றைக்கும் அகரமுதலித் திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த நூல் பாவாணரின் கலைச்சொல்லாக்கத் திறன், சொல்லாய்வு, சொற்பிறப்பியல் ஆய்வு, வேர்ச்சொல்லைக் காண்பது, பாவாணரின் மொழி நடை, அவர் ஒரு சிறந்த வரலாற்றாசிரியர் - என அவரின் ஆய்வுப் பணிகளை விவரிக்கிறது.
இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் இலத்தீன், கிரேக்கக் கலைச் சொற்களை ஆராய்ந்தால் அவற்றின் வேர், தமிழாக இருப்பது புலப்படும்.
பாவாணர் எழுதிய 37 நூல்களில் பன்னூற்றுக்கணக்கான சொற்களை மிக இயல்பாகவும் எளிமையாகவும் ஆக்கித் தந்துள்ளார். 'மண்ணில் விண்' எனும் நூலில் மட்டும் ஏறத்தாழ 374 சொற்களை முற்றிலும் புதிதாக அவர் வழங்கியுள்ளார் என்ற செய்தியைப் படிக்கும்போது பெருவியப்பாக இருக்கிறது.
'புதுக் கண்டுபிடிப்புகள்', 'தமிழரின் வரலாற்றுச் சான்றுகள்', 'தமிழரின் முற்கால வரலாறு', தேவநேயப் பாவாணரின் பண்பாட்டு ஆய்வு' போன்ற ஆய்வு கட்டுரைகளில் சொல்லப்படும் செய்திகளையெல்லாம் கண்டிப்பாக தமிழர்கள் படித்தறிந்து கொள்ள வேண்டும்.
இந்த நூல் தேவநேயப் பாவாணரின் தமிழ்ப் பணிகளை விவரித்தாலும், ஒரு தமிழ் வாழ்வியலையே விவரிப்பது போன்ற பிரமிப்பைத் தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.