
விஜயதரங்கிணி - முகிலன்; பக்.350; ரூ.450; பூம்புகார் பதிப்பகம், சென்னை-108; ✆ 044 - 2526 7543.
அகிலனின் ’வேங்கையின் மைந்தன்' நாவலுக்கு முந்தைய நிகழ்வுகளை மையமாக வைத்து இந்நாவல் எழுதப்பட்டிருப்பதாக நூலாசிரியர் தெரிவிக்கிறார்.
மூவேந்தர் காலத்து நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்நாவலில் அறம், காதல், வீரம், பகை, சூழ்ச்சி, உள்ளிட்ட குணாதிசயங்கள் வெளிப்படும் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மன்னர் காலங்களில் இந்து சமயத்துக்கும், சமண சமயத்துக்கும் தானமாக வழங்கும் இடங்கள் வெவ்வேறு பெயரில் அழைக்கப்பட்டிருக்கின்றன என்பதை இந்நாவல் சான்றுடன் நிறுவுகிறது.
சரித்திர நாவலுக்கே உரிய வர்ணனைகள் குறிப்பாக, இயற்கை சார்ந்த காட்சிகள் ரசனையுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழில் வெளிவந்த தலைசிறந்த சரித்திர நாவல்களில் உள்ளது போல சித்தர் வருகை, பாழடைந்த கோயில், சுரங்க வழி ஆகியவை இந்த நாவலிலும் இடம்பெற்று, வாசகர்களாகிய நம்மை நாவலின் அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது.
ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்டு ஒரு நாவலைப் படைப்பதென்பது சாதாரண காரியம் அல்ல. கதாபாத்திரங்களின் பெயர்கள், அதன் காலம், பேச்சுமுறை, கையாளும் அக்காலப் பொருள்களின் பெயர்கள் என எல்லாவற்றிலுமே தனது முத்திரையைப் பதித்து இருக்கிறார் நாவலாசிரியர்.
நாவலின் ஒவ்வோர் அத்தியாயமும் ஆரம்பிக்கும் முன் இயற்கைக் காட்சிகளைச் சொல்லி, நமக்கு அந்த நேரத்தை உணர்த்தி நாவலை நகர்த்திச் செல்லும் பாங்கு ரசிக்க வைக்கிறது. நாவலை முழுவதுமாகப் படித்து முடித்த பிறகும் நீண்ட நேரமாக அந்த நாவலின் பாத்திரங்களின் குரல்கள் நமக்குள் ஒலிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.