
தமிழ் இலக்கியத்தில் கலையும் கலாசாரமும்- சு.அட்சயா; பக்.190; விலை ரூ.210; காவ்யா, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை - 24. ✆ 98404 80232.
இந்த நூல் 14 தலைப்புகளில் தமிழ் இலக்கியங்கள்வழி கலைகள், பண்பாடு, வாழ்வியல் முறைகள், முருக வழிபாடு, இசை நுணுக்கங்கள், நாடக அறிவு, நாட்டுப்புற கலைகள், வீரம், அறம், மனித நேயச் சிந்தனைகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பயணித்துள்ளது.
ஓர் இனத்தின் வாழ்வியல் கூறுகளை அறிய, அந்த இனத்தின் கலையும் பண்பாடும் அறியப்பட வேண்டியது அவசியமாகிறது.
சங்க இலக்கியத்தில் முருகன் வழிபாடு வாயிலாக அதன் தொன்மையை அறிய முடிகிறது. தனித்தமிழ்க் கடவுள் முருகன் என்பதையும், முருகனை 'சேயோன்' என்றும் குறிஞ்சி திணைக்குரிய கடவுளாகவும் தொல்காப்பியம் காட்சிப்படுத்துகிறது. பரிபாடல், திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம், கந்தபுராணம் போன்றவற்றில் முருக வழிபாடு குறித்து அறிந்து கொள்கிறோம்.
சங்க இலக்கியத்தில் பெண்களின் வீரமும் அறமும் குறித்து ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமுதாயத்தை நல்வழிப்படுத்திய அறிவு சார்ந்த பெண்பாற் புலவர்கள், போரைத் தடுத்து நிறுத்தி அரசர்களை அறவழிக்குத் திருப்புதல், மறம் பாடிய மாண்புகள் என பெண்கள் ஒப்பற்ற நிலையில் இருந்தைக் காணமுடிகிறது.
பக்தி இலக்கியங்களில் மனித நேயச் சிந்தனைகள் என்பது, ஒட்டுமொத்தமாக மனித இனத்தை அறநெறிப்படுத்துவதில் சான்றோர் முனைந்ததையும், அவை சைவம் - வைணவமாக, பேரன்பின் முதிர்ச்சியே பக்தியாக, எல்லாவற்றுக்கும் மேலாக அன்பே சிவமாக கொள்கின்றனர்.
மேலும், வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிகள், நாட்டுப்புறக் கலைகளில் இடம்பெறுகின்ற இசை, இசைக் கருவிகள், தாலாட்டுப் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் புதுக்கவிதைகளும், வைரமுத்து காட்டும் குடும்ப மாந்தர்களின் மன உணர்வுகள் என சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை தமிழரின் கலை, பண்பாடு பேசுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.