
அபாயத் தூரிகை (நாவல்) - ஜனார்தனன்.ஜெ; பக்.432; ரூ.430; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை -17. ✆ 044-24331510.
தமிழில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாசித்து மகிழ, 'மேஜிக்கல் ரியலிசம்' கதைகள் மிகவும் குறைவு. அதைப்போக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள நாவல் இது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த நாள் கொண்டாடும், அதாவது லீப் ஆண்டான பிப்ரவரி 29-ஆம் தேதி பிறந்த நால்வர், ஒரே பள்ளியில் படித்துவந்தனர். நால்வரும் அவர்களின் மூன்றாவது பிறந்த நாளன்று (12 வயது) பள்ளியில் உள்ள ஒரு சிறிய தோட்டத்தில் இருக்கும் மாயாஜால உலகத்தில் நுழைந்தார்கள். அங்கு விசித்திரமான கறுப்பு மாயாவி ஒன்று இருந்தது. அதனிடமிருந்த தூரிகை மூலம் எந்தப் பொருளையும் நொடியில் வரைந்து அதை உருவாக்கிக் கொடுத்து விடும். நால்வரும் அந்த மாயாவியுடன் விளையாடத் தொடங்கினார்கள். அப்போது அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்தது. அதைப் பற்றிய நினைவு எப்போது வந்தாலும் மனம் சில நொடிகள் அச்சத்தில் உறையும்.
காலம் கடந்தது; அன்று அவர்களின் 36 -ஆவது வயது தொடக்கம்; ஒன்பதாவது பிறந்த நாள். நால்வரின் வாழ்க்கைப் பயணம் ஒவ்வொரு திசையில் பயணித்துக் கொண்டிருக்க, "மீண்டும் பள்ளிக்கு விளையாட வரணும்!' என கறுப்பு மாயாவி அவர்கள் முன்தோன்றி, அழைப்பு விடுத்திருக்கிறது.
அவர்களைக் கட்டாயப்படுத்தி பள்ளித் தோட்டத்துக்கு விளையாட கறுப்பு மாயாவி அழைத்திருக்கிறது என்றால், அங்கு விபரீதம் ஏதாவது நடக்கப் போகிறதா? மீண்டும் நால்வரும் அங்கு சென்றார்களா? அதனுடன் விளையாடினார்களா? கறுப்பு மாயாவியின் அபாயத் தூரிகையை வென்றார்களா? நால்வரையும் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் குழந்தைகளின் கதி என்ன?
இதற்கான பதிலை அறிவியலுடன் கற்பனைகலந்து விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக, நேர்த்தியாக நாவலாக படைத்திருக்கிறார் புதுமுக எழுத்தாளர். தமிழில் புது முயற்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.