தமிழ்நாட்டுத் தேர்தல்கள்
தமிழ்நாட்டுத் தேர்தல்கள்-ருஷேந்தர் ரகுராம்; பக்.304; ரூ.370; சுவாசம் பதிப்பகம், பொன்மர், சென்னை-600127. ✆ 81480 66645.
1598-இல் லண்டனில் கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்டது முதல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷ் இந்தியத் தேர்தல், சுதந்திர இந்தியாவில் தமிழகத் தேர்தல், திராவிட இயக்க ஆட்சி, சமகால அரசியல் ஆளுமைகள் வரையிலான தமிழக அரசியல் மற்றும் தமிழகத் தேர்தல் களத்தை இந்நூல் பதிவு செய்துள்ளது.
சுதந்திர இந்தியாவில் 1951-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலுடன் சென்னை மாகாணத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. அப்போது முதல் தற்போது வரை, தமிழகத் தேர்தல் களம் எப்போதும் பரபரப்பும், அதிரடித் திருப்பங்களும் நிறைந்து காணப்படும் சுவாரஸ்யங்களை இந்நூல் காட்சிப்படுத்துகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சட்டப் பேரவைத் தேர்தலின்போதும் அகில இந்திய அளவில் நிலவிய அரசியல் கணக்குகள், மக்களின் மனவோட்டம், கூட்டணிகள், மத்திய அரசின் தலையீட்டால் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியல்வாதிகள் கட்சி மாறும் காட்சிகள், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றங்கள் உள்ளிட்டவற்றை புள்ளிவிவரங்களுடன் தெளிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.
மேலாதிக்கம்தான் பிராமணியம் என்றால் அது அனைவரிடத்திலும் உள்ளது; அரசியல் மோதல் என்பது தனி மனிதர்களுக்குள் ஏற்பட்ட மனப் போராட்டமும்தான்; ஓர் அரசியல் இயக்கத்துக்குள் ஏற்படும் தனி மனித உரசல்கள் என நுணுக்கமான கருத்துகளையும் இந்நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள் விளம்பரங்களையும், பிரம்மாண்டங்களையும் நம்பி வாக்களிக்கின்றனர் என்கிற நிதர்சனத்தையும் நூலாசிரியர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
அரசியல் ஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், அனைத்துக் கட்சியினர் மட்டுமல்லாது மாணவர்களும் வாசிக்க வேண்டிய ஆவணம் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.