
தத்துவப் பாடல்கள் 500-கவிஞர் கண்ணதாசன்; தொகுப்பு- வி.சுந்தரம்; பக்.534; ரூ.580; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 600 017. ✆ 044-24332682.
தமிழ்த் திரையுலகில் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி என்று தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள் தங்களது வார்த்தை வித்தகத்தால் திரையிசைக்கு மெருகூட்டியிருக்கிறார்கள். தஞ்சை ராமையாதாஸ், மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி உள்ளிட்டவர்கள் தமிழ்த் திரையுலகம் மறந்துவிட முடியாத பாடலாசிரியர்கள். அன்றுமுதல் இன்றுவரை இருந்த, இருக்கும் அத்தனை திரைப்படப் பாடலாசிரியர்கள் இருந்தும் தனித்துவமாக விளங்குபவர் ஒருவர் உண்டென்றால், அது கவிஞர் கண்ணதாசனாக மட்டுமே இருக்க முடியும்.
பிறப்போ, இறப்போ; உறவோ, பிரிவோ; சித்தாந்தமோ, வேதாந்தமோ; மகிழ்ச்சியோ, துயரமோ; நகைச் சுவையோ, அவலச் சுவையோ; இறைத் துதியோ, தனிமனிதத் துதியோ, தத்துவமோ, அசட்டுத்தனமோ- எதுவாக இருந்தாலும் அது குறித்துப் பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றவர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே திரைப்படப் பாடலாசிரியர் கண்ணதாசனாக மட்டுமே இருப்பார். அவர் தனது பாடல்களின் மூலம் தொடாத உணர்வுகளே இல்லை; பாடாத பொருள்களும் இல்லை.
எந்தவொரு திரைப்படத்தின் கதைக்கும், காட்சிக்கும் ஏற்ப, மெட்டுக்குத் தகுந்த வர்த்தைகளை நொடிப் பொழுதில் இட்டு நிரப்பும் வித்தகம் மட்டுமே அல்ல அவரது சிறப்பு. அப்படி இட்டு நிரப்பும் வார்த்தைகளை எடுத்துப் படித்துப் பார்த்தால் நல்லதொரு கவிதையாகவும் வடிவெடுக்கும் என்பதால்தான் அவரைக் கவியரசர் என்று இன்றளவும் தமிழ்கூறு நல்லுலகம் போற்றிக்கொண்டிருக்கிறது.
சமகாலத்துப் பாடலாசிரியரான வாலியால் "கவிஞர் என்றால் அது கண்ணதாசனைத்தான் குறிக்கும்' என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட கவியரசு கண்ணதாசனின் 500 தேர்ந்தெடுத்த தத்துவப் பாடல்களைத் தொகுத்துப் புத்தக வடிவம் தந்திருக்கிறார் பி.சுந்தரம். மெட்டாக வார்த்தைகளைக் கேட்டு ரசித்தது காதுகள் என்றால், இப்போது அவற்றைப் படித்து ரசிக்கும் கண்கள் வியப்பில் விரிகின்றன.
கேட்கும்போது புரியாத பல அர்த்தங்கள் படிக்கும்போது புலப்படுகின்றன. பாடல் வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் கவித்துவத்தின் வீச்சுகள் வெளிப்படுகின்றன. அவரது தனிப்பாடல்களுக்கு நிகரான தகுதி இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஓரிரு பிரபலமான முக்கியமான பாடல்கள் விட்டுப்போயிருக்கின்றன. ஒருவேளை அவை அடுத்த 500 பாடல்கள் தொகுப்பில் இடம்பெறுமோ என்னவோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.