
நாய்வால் (சிறுகதைகள்) - எஸ்ஸார்சி; பக்.196; ரூ.240; நாற்கரம், சென்னை-600 073; ✆ 95510 65500.
நூலாசிரியரின் 12-ஆவது சிறுகதைத் தொகுதி இது. இந்தத் தொகுதியில் பதினாறு சிறுகதைகள் உள்ளன. அதிலும், குறிப்பாக நாய்வால், வாலு போச்சு கத்தி வந்தது, செவிநுகர் கனியது, இப்படியா?, திருப்பம், அவரவர் கணக்கு, அன்புள்ள அப்பா, அம்மா ஒரு புதிர் போன்ற சிறுகதைகள் நெஞ்சைவிட்டு அகலாது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் பெரும்பாலும் நடுத்தர வயதுக்கு மேற்பட்டவர்களின் கதைகளாக அமைந்து, நூலாசிரியரின் வாழ்வில், அவரது நண்பர்கள் வாழ்வில், நண்பர்கள் பகிர்ந்துகொண்ட சம்பவங்களில் உருவான சிறுகதைகளாகவே அமைந்துள்ளன.
'நாய்வால்' சிறுகதை ஓர் எழுத்தாளர் பற்றியது. கணினியில் கதை எழுதுகையில் தோன்றிய கவர்ச்சிப் படம்- அதைத் தொடர்ந்து எச்சரிக்கை செய்தி, அந்தப் படத்தைப் பார்த்ததற்கு அபராதத் தொகை அனுப்பச் சொல்லி வரும் கெடு இறுதியில் தனது மனைவியிடம் சொல்லி புலம்பியது என்ற ரீதியில் போகிற கதை. கொஞ்சம் மிரட்டலான கதை.
'அவரவர் கணக்கு' என்ற சிறுகதையில் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்போருக்கும், உரிமையாளருக்கும் நிலவும் பிரச்னை, 'ஜம்பம்' சிறுகதையில் துணியின் விலையைவிட தையல்கூலி அதிகமாக இருப்பது தொடர்பான நிலவும் சுவாரஸ்யம், 'சமத்து' சிறுகதையில் மனைவியிடம் பாராட்டு வாங்கும் கணவன், 'பாரபட்சம்' சிறுகதையில் முடிச்சூரில் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும் நிவாரணத் தொகை பெற நடைபெறும் போராட்டமும், 'அன்புள்ள அப்பா'
சிறுகதையில் தந்தை- மகன்களுக்கு இடையேயான பாசப் போராட்டம், 'அம்மா ஒரு புரியாத புதிர்' என்ற சிறுகதையில் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் நடைபெறும் பாசப் போராட்டம், 'விடாது கருப்பு' சிறுகதையில் துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு திரும்புவோரின் நிலை, 'பைரவ தோஷம்' சிறுகதையில் தோஷ நிவர்த்திக்கான கோயில் பூஜை... என்று ஒவ்வொரு சிறுகதையும் சுவாரஸ்யமாகவே செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.