
(காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனாரின்) முல்லைப்பாட்டு ஆய்வுரை- ம.திருமலை; பக்.88; ரூ.80; செல்லப்பா பதிப்பகம், மதுரை -625 001; ✆ 94860 09826.
சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டு நூல்களுள் மிகச் சிறியது முல்லைப்பாட்டு. 103 அடிகளை மட்டுமே கொண்ட இந்தப் பாடல், ஆசிரியப்பாவில் எழுதப்பட்டதும், அகத்திணை சார்ந்ததுமாகும். 'இருத்தல்', 'இருத்தல் நிமித்தம்' ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது. பாண்டிய மன்னனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
மழைக்காலத்துக்கு முன்பே திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன், குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயர் தாளாமல் உடலும் உள்ளமும் மெலிந்து வாடுகிறாள். விவரமறியச் சென்றுவந்த தோழியரின் உற்சாகம் சேர்க்கும் சொற்கள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றிபெற்று தலைவன் திரும்பியபிறகே தலைவி நிம்மதியடைந்து இன்பமுறுகிறாள் என்பதே மையப் பொருள்.
அழகிய கவிதை நயமும், அதிக வருணனைகளையும் கொண்ட முல்லைப்பாட்டின் மூலம் தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம், கற்பு நெறி, பழக்கவழக்கங்கள், வீரம் என பல்வேறு கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம்.
முல்லைப்பாட்டுக்கு உ.வே.சாமிநாதையர், மறைமலையடிகள், புலவர் பொ.வே.சோமசுந்தரனார் என அறிஞர்கள் பலரும் உரை எழுதியுள்ளனர். அந்த வரிசையில் முல்லைப்பாட்டுக்கான உரை என்ற கிரீடத்தில் மேலும் ஒரு வைரமாகப் பதிந்து அணி சேர்க்கிறது இந்நூல்.
எளிய நடையிலும், சுவை மிகுந்த வாசிப்பனுபவத்தைத் தரும்வகையிலும் உள்ளது. பல்வேறு வெளிநாட்டு அறிஞர்களின் கூற்றுகளையும் மேற்கோள் காட்டி எழுதப்பட்டுள்ளது சிறப்பு. ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமன்றி இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஏற்ற நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.