
சக்சஸ் உங்கள் சாய்ஸ்!- செலின் ராய்; பக்.132; ரூ.200; ஹெர் ஸ்டோரீஸ், சென்னை-83; ✆ 96003 98660.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே எழுதத் தொடங்கிய நூலாசிரியர், தனது 21-ஆம் வயதில் பெண்கள் இதழுக்கு ஆசிரியரானாவர். பல நூல்களை எழுதியவர் என்பதோடு, உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகள், ஆற்றுப்படுத்துதல் அமர்வுகளைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார். இவர் எழுதிய சிறப்புமிகு நூல்களில் இதுவும் ஒன்று. பொருளாதாரச் சுதந்திரம் அடைந்து, தனக்குப் பிடித்த வேலையைச் செய்யும்போது ஒவ்வொருவரும் தேர்ச்சி பெறுகிறோம். அப்போது 'சக்சஸ் உங்கள் சாய்ஸ்' ஆகிவிடுகிறது. ஆனால், கொஞ்சமும் பிடிக்காத வேலையில் புலம்பிக் கொண்டே பணியாற்றி, சூனியமான வாழ்க்கை வாழ்பவர்கள் ஏராளமானோர். அதில் ஒருவராக நாம் மாறிவிடாமல், வாழ்க்கையில் முன்னேறி பொருளாதாரச் சுதந்திரம் அடைய வழிகாட்டும் வகையில் தன்னம்பிக்கை நூலாகப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.
பணியாற்றும் வேலை அல்லது தொழிலில் என்னென்ன சூட்சுமங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதையே இந்த நூல் பேசுகிறது.
'உங்கள் வெற்றியின் முதல் எதிரி', 'சின்ன விஷயம் எவ்வளவு முக்கியம்', 'ஆசையே வெற்றிக்குக் காரணம்', 'ஆசை மட்டும் போதுமா?', 'வெற்றி மலரின் வேர் என்ன தெரியுமா?', 'நீங்கள் அதுவாகவே மாறிவிடத் தயாரா?', 'விளையாட்டாகக் கற்றுக் கொள்வோமா?', 'நீங்கள் ஏமாளியா?, புத்திசாலியா?', 'முள்
புதரும் பளிங்கு மாளிகையும்', 'உங்கள் வெற்றியின் மாயசக்தி', 'வெற்றிக்கான இன்னொரு வாசல்', 'அந்தத் தீப்பொறியைக் கண்டுபிடியுங்கள்', 'பிரபல நிறுவனங்களின் செறிவுப் புள்ளியின் வெற்றி ரகசியம்' ஆகிய 13 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சிறந்த வழிகாட்டுதல்களை அளிக்கிறது. எதிர்மறை எண்ணங்களை அகற்றி
நேர்மறை எண்ணங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து, சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் படிக்கும்போதே நம் எண்ணத்தில் உதிக்க வைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.