
சிலப்பதிகார ஆய்வுகள்-முனைவர் ஆ. மணி; பக்.160; விலை ரூ. 200; தமிழன்னை ஆய்வகம், அய்யங்குட்டிபாளையம், புதுச்சேரி - 605 009. ✆ 94439 27141.
இந்நூலில் பேராசிரியர்கள் வ.சுப.மாணிக்கம், ச.சோமசுந்தர பாரதியார், ஆ.மணி ஆகிய மூவரின் 9 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சிலம்பதிகாரம் சார்ந்த புதிய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும் இவை, 'எந்தச் சிலம்பு' - சிலப்பதிகாரம் எழுத வைத்தது? என்று வ.சுப.மாணிக்கம் கேள்வி எழுப்பி, கண்ணகி காப்பிய நாயகியாக இருக்கலாம். ஆனால், அவருடைய சிலம்பு காப்பியத்துக்குக் காரணமாக இருக்கவில்லை.
கோப்பெரும்தேவியின் சிலம்புதான் காரணமாக இருந்தது என்கிறார்.
மாதவியின் மறுவோலையை கோவலன், தான் எழுதியதாக தந்தை கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த ஓலையை மடைமாற்றம் செய்யாமல், மாதவியின் மனதைப் புரிந்துகொள்ள இம்மடல் தந்தைக்கு உதவும் என அவளின் மறுவோலையைச் சேர்ப்பிக்கப் பணித்தான் என்கிறார் பேராசிரியர். இது மாதவியின் தூய மனதைக் காண காப்பியத்தில் இடம் தருகிறது.
சிலப்பதிகாரம் சங்கச் சாயலுடையது என்பது வெள்ளிடைமலை. இந்த ஆய்வு முடிவுக்கு சங்க இலக்கியங்களுக்கும் சிலம்புக்கும் உள்ள ஒற்றுமைகள், கானல் வரியின் அக உணர்வு போன்றவை காட்டப்படுகின்றன.
நெருப்பை வலம் வந்து மணம் செய்த செய்தி சிலம்பில்தான் முதன்முதலில் இடம்பெறுகிறது. தமிழர் வாழ்வோ காதல் வாழ்வு. இதற்காக எங்கெல்லாம் காதலைப்பாட வேண்டுமோ அங்கெல்லாம் காப்பியத்தில் காதலை பாடியுள்ளார் இளங்கோவடிகள். கோவலன் - மாதவி காதலைச் சுட்டிக் காட்டுகிறார் சோமசுந்தர பாரதி.
சிலப்பதிகாரத்தின் துணைகொண்டு, நேற்றைய தமிழ்ச் சமூகத்தின் வழக்காடும் முறைகளையும் நிகழ்கால சமூகம் வகுத்துக் கொண்டுள்ள நீதிமன்ற முறைகளையும் உரிய தரவுகளோடு ஒப்பீடு செய்துள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
அரசுக்குரிய பொருளை திருடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். அதற்கு கொலை தண்டனை விதிக்கப்பட்டது. சங்க இலக்கியத்தில் இதற்குச் சான்று காட்டப்பட்டுள்ளது. அதனால்தான் திருட்டுக் குற்றத்துக்கு கோவலன் கொலை செய்யப்பட்டான். ஆய்வுக் களத்துக்காக 157 நூல்கள் துணை நூல் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.