மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

9. முளைக்கதிர் இளம்பிறை - பாடல் 7

பொதுவாக அப்பர் பிரானின் பாடல்களில் இயற்கை காட்சிகள் இடம் பெறாது. சம்பந்தரின் பெரும்பாலான பாடல்களில் இயற்கை காட்சி இடம்

Updated On :12 டிசம்பர் 2015, 10:23 am

கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடுறைந்து
இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர்
வழிந்திழி மது கரம் மிழற்ற மந்திகள்
கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே

விளக்கம்

பொதுவாக அப்பர் பிரானின் பாடல்களில் இயற்கை காட்சிகள் இடம் பெறாது. சம்பந்தரின் பெரும்பாலான பாடல்களில் இயற்கை காட்சி இடம் பெறுவதை நாம் காணலாம். இதற்கு கி.வா.ஜா. அவர்கள் சுவையான விளக்கம் அளிப்பார். நாம் குடும்பத்துடன் இரயில் பயணம் மேற்கொண்டால், ஜன்னல் அருகே இருக்கும் இருக்கைகளுக்கு குழந்தைகள் போட்டி படுவதை காண்கின்றோம். ஜன்னல் வழியாக தெரியும் காட்சிகளைக் காண்பதில் குழந்தைகளுக்கு உள்ள ஆர்வமே இதன் காரணம். முதியவர்கள், ஜன்னல் இருக்கைகளைத் தவிர்த்து வேறு இடங்களில் உட்கார்ந்து, தங்களின் கையில் உள்ள புத்தகத்திலோ, பத்திரிகையிலோ ஆழ்ந்து விடுவதை காணலாம். அன்றாடம் நாம் காணும் இந்த காட்சிக்கு ஞான சம்பந்தரையும் அப்பர் பெருமானையும் கி.வா.ஜா அவர்கள் ஒப்பிடுகின்றார். நம்மை எல்லாம் பல தலங்களுக்கும் சிவநெறிக்கும் அழைத்துச் செல்லும் யாத்திரையில், ஜன்னல் அருகே உட்கார்ந்து இயற்கை காட்சிகளையும் ரசித்து வந்த குழந்தை ஞானசம்பந்தர், தான் அனுபவித்த இயற்கை காட்சிகளையும், சிவபெருமானுடன் தொடர்பு கொண்ட செய்திகளுடன், தேவார பாடல்களில் நமக்கு காட்டுகின்றார். உள்ளே உட்கார்ந்து, சிவ சிந்தனையில் ஆழ்ந்து பயணம் செய்த அப்பர் பிரான், அத்தகைய இயற்கை காட்சிகளைத் தவிர்த்து, சிவபிரானுடன் தொடர்பு கொண்ட செய்திகளை மட்டுமே நமக்கு அளிக்கின்றார் என்று திருமுறை மலர்கள் புத்தகத்தில் வாகீச கலாநிதி கி.வா.ஜா. கூறுகின்றார். இந்த பொது விதிக்கு மாறுபட்டதாக காணப்படும் இந்த பாடலில், அப்பர் பிரான் வடிக்கும் இயற்கை காட்சியை நாம் கண்டு மகிழலாம்.

இறந்தவர்களின் தலைகளை மாலையாக கோத்து, தனது கழுத்தில் அணிந்துகொண்டு சுடுகாட்டில் சிவபெருமான் வாழ்வதன் காரணத்தை புரிந்துகொள்ளாமல். அவனை இழிவாக பலர் பேசுவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தன்னைத் தவிர இந்த உலகினில் வாழும் அனைத்து உயிர்களும் நிலையற்றவை, தான் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்த்தும் பொருட்டு, நிலையில்லாமல் இறந்தவர்களின் தலையை மாலையாக அணிந்தவராக சிவபெருமான் காணப்படுகின்றார். நூறு கோடி பிரமர்கள் பிறந்து அழிந்த பின்னரும், ஆறு கோடி நாராயணர்கள் பிறந்து அழிந்த பின்னரும், கங்கையாற்றின் இரு கரைகளிலும் உள்ள மணல்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமான இந்திரர்கள் பிறந்து அழிந்த பின்னரும், முடிவற்றவனாகத் திகழ்பவன் சிவபெருமான ஒருவனே என்பதை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

பிரளய காலத்தில் பிரமன், திருமால், குபேரன், யமன் போன்றவர்கள் அழிய, கூட்டம் கூட்டமாக இந்திரர்களும் உடன் அழிந்தாலும், சிவபிரான் அழியாமல் இருப்பதுடன், தனது மனைவியாகிய பார்வதியுடன் விளையாடுவதாக ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியின் இருபத்தாறாவது பாடலில் கூறுகின்றார். விரிஞ்சி = பிரமன்; பஞ்சத்வம் = உடலில் உள்ள ஐந்து பூதங்களும் தனித்தனியாக பிரிந்து போகும் நிலை, அதாவது மரணம்: வ்ரஜதி = அடைதல்; விரதிம் = முடிவு: ஆப்னோதி = அடைதல்; கீனாச = இயமன்; பஜதி = அடைதல்; தனத = செல்வத்தை உடைய குபேரன்; நிதனம் = மரணம்; யாதி = அடைதல்; மாஹேந்த்ரீ விததி அபி = கூட்டம் கூட்டமாக இந்திரர்கள்; ஸம்மீலித = கண்கள் மூடும் பெருந்தூக்கம்; த்ருசா = அழிதல்; ஸம்ஹாரே = பிரளய காலத்தில்; சதி = பார்வதியின் ஒரு பெயர்; விஹரதி = விளையாடுதல்;

விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா
மஹா ஸம்ஹாரேஸ்மின் விஹரதி சதி த்வத்பதி ரஸௌ.

தோள் நோக்கம் பதிகத்தின் ஒரு பாடலில் மணிவாசகரும், எண்ணற்ற இந்திரர்கள், பிரமர்கள், திருமால் இறந்த பின்னும், முடிவு என்பது இல்லாமல் வாழ்பவன் ஈசன் என்று கூறுகின்றார். மேலும் இந்த பாடலில் திரிபுரத்தில் இருந்த அரக்கர்கள் மூவர், எப்போதும் சிவபெருமானையே எண்ணிக்கொண்டு இருந்தமையால் சாவாத நிலை பெற்று சிவபெருமானுக்கு காவலாளர்களாக இருப்பதையும், அவ்வாறு எண்ணாதவர்கள் இறப்பதையும் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். எண்ணிலி என்ற சொல்லுக்கு எண்ணற்ற என்ற பொருள் கொள்வதும் பொருத்தமாக இருந்தாலும், எண் உடை என்று முதல் அடியில் வரும் தொடருக்கு பொருந்துவதாக எண் இலி என்ற தொடர் இருப்பதால், இவ்வாறு பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

எண் உடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்து
கண் நுதல் எந்தை கடைத் தலை முன் நின்றதன் பின்
எண் இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள் நோக்கம்

பொழிப்புரை

தேன் கூடுகள் குரங்குகளால் கிழிக்கப்பட, அந்த கூடுகளிலிருந்து தேன் வழிந்து கீழே விழுகின்றது. அவ்வாறு கீழே விழும் தேனோடு, பல வண்டுகளும் ரீங்காரம் இட்ட படியே இறங்கி வருகின்றன. வண்டுகள் கொட்டுவதையும் பொருட்படுத்தாமல், குரங்குகள் அந்த தேனை பருகும் காட்சி, நிலவளம் நிறைந்த கெடில நதிக்கரையில் தென்படுகின்றது. இந்த தலத்தில் வாழும் இறைவனின் கோலத்தின் பின்னணியை, ஈறு இல்லாத தன்மையை புரிந்து கொள்ளாமல், இறந்தவர்களின் தலையை மாலையாகக் கோத்து தனது கழுத்தில் அணிந்துகொண்டு, சுடுகாட்டில் சிவபெருமான் வாழ்கின்றான் என்று சிலர் கேலியாக பேசுகின்றார்கள். என்னே அவர்களின் அறிவில்லாத தன்மை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.