பாடல் 12
உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே
வலம் தான் மிக்க வாளரக்கன் தனைச்
சிலம்பார் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேன் ஆகில் என் கண் துயில் கொள்ளுமே

விளக்கம்

இந்த பாடலில் சிலம்பார் சேவடி என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிலம்பு என்பது பெண்கள் தங்கள் காலில் அணியும் அணி. இருந்தாலும் பெருமான் சிலம்பு அணிந்திருப்பதாக கூறப்படுவதன் காரணம், பெருமான் பெண், ஆண் மற்றும் அலி எனப்படும் மூன்று தன்மைகளாக உள்ளவன் என்பது தான். மணிவாசகரும் பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க என்று மணிவாசகர் திருவண்டப் பகுதி அகவலில் கூறுவதை நாம் நினைவுகொள்ள வேண்டும்.

புலம்புதல் = வருத்தம் மிகுதியால் பலமுறையும் பேசுதல், மனம் கரைந்து பல முறையும் சொல்லிப் புகழுதல். உலந்தார் = இறந்தவர்கள். வலம் = வெற்றி. தோற்றவர்கள், தங்களை வெற்றி கொண்டவர்களை வலம் வந்து பணிதல் பண்டைய நாட்களில் பழக்கமாக இருந்தது போலும். அதனால்தான் வலம் என்ற சொல்லினை வெற்றியை குறிப்பதாக அப்பர் பிரான் இங்கே கையாண்டுள்ளார். புல்லாங்குழலினை விடவும் இனிமையான மொழியினை உடைய உமையம்மையை, குழல் வலம் கொண்ட சொல்லாள் என்று அப்பர் பிரான் குறிப்பிடும் ஆரூர் பதிகம் (4.53.1) நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பாடலில் இரண்டு முக்கியமான செய்திகளை அப்பர் பிரான் கூறுகின்றார். முதல் செய்தி, அம்பிகையை வலம் வந்துத் தொழும் அடியார்களுக்கு இறைவன் காட்சி அளிப்பார், என்பதாகும். இதன் மூலம், ஐயனும் அம்பிகையும் வேறு வேறல்ல, இருவரும் ஒருவரே என்ற சித்தாந்தக் கொள்கை இங்கே உணர்த்தப்படுகின்றது. இரண்டாவது செய்தி, ஆரூர் நகரத்தினை வலம் வந்து தொழும் தொண்டர்கள் தாம் பிறந்ததன் பயனை அடைந்தவர்கள் என்பது. நமிநந்தி அடிகள் புராணத்தில் ஆரூரில் வாழ்பவர் அனைவரும் சிவ கணங்களே என்ற செய்தியை சிவபெருமான், நமிநந்தி அடிகளுக்கு உணர்த்தும் வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது. இந்த கருத்துதான், சுந்தரரை ஆரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் பாட வைத்ததோ என்று தோன்றுகின்றது.

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேற்கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்களை கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல் வலம் கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே

பொழிப்புரை

இறந்தவர்களின் உலர்ந்த தலையை, தான் உண்ணும் கலனாகக் கொண்டவனும், வலிமைமிக்க அரக்கனாகிய இராவணன் கயிலை மலையினைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்தபோது தனது சிலம்பணிந்த திருவடியின் விரலினை ஊன்றி நெருக்கியவனும் ஆகிய சிவபெருமான் உறையும் அதிகை வீரட்டத்துப் பெருமையினை, மறுபடியும் மறுபடியும் எனது மனம் கரையுமாறு பாடாமல் இருந்தால் எனது கண் துயில் கொள்ளாது. எனவே நான் தினமும் பெருமானின் பெருமையை பலகாலும் சொல்லிப் பாடுவேன்.

முடிவுரை

அப்பர் பிரானின் பதிகங்கள் பொதுவாக பத்து பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன. ஆனால் நாற்பதுக்கும் மேற்பட்ட பதிகங்கள் பத்து பாடல்கள் என்ற எல்லையைத் தாண்டி பதினொன்று, பன்னிரண்டு பாடல்களை உடைய பதிகங்களாக உள்ளன. அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான பாடல்களாக உள்ளன. அத்தகைய பாடல்களில் ஒன்று தான் இந்த பதிகம். சிவபெருமான் பால் தான் கொண்டுள்ள அன்பின் காரணமாக அவரைப் பற்றி சிந்திக்காவிட்டால் தனக்கு தூக்கம் வராது என்று உணர்ச்சி பொங்க அறிவிக்கும் பாடல் இது. பன்னிரண்டு பாடல்களைக் கொண்டுள்ள மற்ற பதிகங்களின் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இருபது பாடல்களைக் கொண்ட ஒரு பதிகமும் (ஐயாறு - சிந்திப்ப அரியன - 4.92) முப்பது பாடல்களைக் கொண்ட ஒரு பதிகமும் (பொது - சிந்திப்பார் மனத்து - 5.97) அப்பர் பிரானால் அருளப்பட்டுள்ளன.

தலம் தொடக்கச் சொற்கள் பதிக எண்
திருவதிகை செல்வப் புனல் கெடில 6.07
பொது தலையே நீ வணங்காய் 4.09
ஆரூர் கொக்கரைக் குழல் 5.07

இந்த பதிகம் பரம்பொருளாகிய இறைவனைப் பற்றி நிற்கும் ஆன்மாவின் அனுபவத்தை உணர்த்தும் பதிகமாக உள்ளது என்று சான்றோர்கள் கூறுகின்றனர். அப்பர் நாயகியின் எண்ணங்களாக, அனுபவங்களாக இந்த பதிகத்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் அப்பர் பெருமானின் அனுபவங்களாக இருந்திருக்க வேண்டும். பெருமானைப் பற்றி பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே என்று பின்னாளில் தில்லைத் திருப்பதிகத்தில் (6.01) பாடியவர் அல்லவா. பெருமான் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற பக்தி, பித்தாக மாறி, சிவபெருமானைப் பற்றி நினைத்தால்தான், அவரது புகழினைப் பாடினால்தான், அவரது புகழினைப் பேசினால்தான், அவரது புகழினைக் கூறும் புராணங்களை படித்தால்தான், அவரது திருவுருவத்தைக் கண்டால்தான், மறுபடியும் மறுபடியும் அவரைப் பற்றி பேசினால்தான், தனக்கு தூக்கம் வரும், அல்லையேல் தூக்கம் வராது என்ற நிலைக்கு அப்பர் பிரான் சென்றதை நாம் உணரமுடிகின்றது. அந்த நிலையினை நம்மால் அடைய முடியாது என்றாலும், அப்பர் பிரான் காட்டிய வழியில், நாம் தினமும் பெருமானின் திருவுருவத்தைத் தொழுது வணங்கவும், அவரது புகழினை உரைக்கும் தேவாரப் பதிகங்களைப் பாடவும், பெருமானைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த பதிகத்தின் நோக்கமாகும். அப்பர் பிரான் காட்டிய பாதையில் சென்று, அவரைப் பின்பற்றி நமது இறைவுணர்வினை வளர்த்துக்கொள்வோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை