நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே
விளக்கம்
கடம்பன் = கடம்ப மாலை சூடியவன். முருகப் பெருமானை நம் கடம்பன் என்று உரிமையாக அழைப்பதன் மூலம், முருகப் பெருமான் தமிழ்க் கடவுளாக கருதப்பட்டதை, அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். அப்பர் பிரான் தனது வாழ்வின் இலட்சியத்தை வெளிப்படுத்தும் பாடல் இது. பெருமானுக்கு திருப்பணி செய்வதே தனது கடமை என்று தான் கூறுவதற்கு காரணம் என்ன என்பதையும் இந்த பாடலில் அப்பர் பிரான் தெளிவுபடுத்துகின்றார். பெருமான் தன்னைத் தாங்கியதை எண்ணிப்பார்க்கும் அப்பர் பிரான், அவ்வாறு தன்னைத் தாங்கிய பெருமானுக்கு பணிவிடை செய்வதுதான் சிறந்த கைம்மாறு என்று கருதினார் போலும். அப்பர் பிரான் சரிதத்தை உணரும் நமக்கு, பெருமான் அவரை எப்படியெல்லாம் காப்பாற்றினார் என்பதை நினைத்தால், நமக்கே மலைப்பு வரும். அவ்வாறு இருக்கையில், பெருமானின் கருணைக் கரங்கள் அணைத்த தன்மையை நேரில் அனுபவித்த அப்பர் பிரான், பெருமான் தன்னைக் காத்த விதத்தை எப்படி வியந்து நினைத்திருப்பார் என்பதை நம்மால் உணர முடியும்.
சைவ சமயத்திற்கு மறுபடியும் வரவழைக்க, தருமசேனர் என்ற பெயரில் சமணர்களுடன் வாழ்ந்து வந்த அப்பர் பிரானுக்கு கொடுக்கப்பட்டது சூலை நோய். எனவே அப்பர் பிரான் சைவ சமயத்திற்கு திரும்பிய பின்னர், அந்த நோயிலிருந்து அவருக்குத் தீர்வு அளித்தல், பெருமானின் கடமையாக மாறிவிடுகின்றது. எனவே பெருமானின் இந்த செயலில், வியப்பதற்கு ஒன்றுமே இல்லை. ஆனால் அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள், சுண்ணாம்புக் காளவாயில் ஏழு நாட்கள் வைக்கப்பட்ட பின்னரும், அப்பர் பிரானின் உடலுக்கு எந்தவிதமான கேடும் விளையாமல் பாதுகாத்தல். கொடிய நஞ்சு கலந்த சோற்றினை உண்ட பின்னரும் உட்கொண்ட நஞ்சின் தாக்கத்திலிருந்து காப்பாற்றுதல், மதம் கொண்ட கொலை யானை அப்பர் பிரானின் மீது ஏவி விடப்பட்ட பின்னர், யானையின் போக்கினை மாற்றுதல், கல்லுடன் கட்டப்பட்டு நடுக்கடலில் தள்ளப்பட்ட பின்னர் கல்லுடன் சேர்ந்து கடலில் மூழ்கி விடாமல் கல்லினை மிதக்கச் செய்தது, பழையாறை வடதளி திருக்கோயில் சமணர்களால் மறைக்கப்பட்டிருந்த நிலையினை அறிந்து திருக்கோயில் மறைப்பு நீக்க்கப்படும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அப்பர் பிரான், தான் கொண்ட உண்ணாவிரதத்தால் உயிர் நீக்காத வண்ணம், பல்லவ மன்னனின் கனவில் தோன்றி கோயிலை மூடியிருந்த முட்புதர்களை அகற்றி, அப்பர் பிரானின் உயிரினைக் காத்தது, உடற்கட்டு தளர்ந்து ஒரு அடிகூட மேலே எடுத்துவைக்க முடியாமல், தனது கயிலைப் பயணத்தில் அப்பர் பிரான் வருந்தியபோது வேதியனாக அவர் முன்னே தோன்றி, கயிலைப் பயணத்தைத் தொடரவிடாமல் தடுத்து அவரது உயிரினை காத்தது, ஆகிய செய்கைகள் சிவபெருமான் அப்பர் பிரானை காத்த நிகழ்சிகள். இவை அனைத்தும் பெருமான் எவ்வாறு அப்பர் பிரானைத் தாங்கினார் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
தான் பாடிய முதல் பதிகத்திலே, (கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகம்) என்னை அடிமையாக ஏற்றுக்கொண்ட இறைவனே என்று அழைக்கும் அப்பர் பிரான், சூலை நோய் தீர்க்கப்படுவதற்கு முன்னரே, இறைவனுக்கு அடிமைப்பணி செய்ய தான் முடிவெடுத்ததை குறிப்பிடுகின்றார். எந்த அளவுக்குத் தனது பணியினைச் செய்வதில் அப்பர் பிரான் தீவிரமாக இருந்தார் என்பதை அவரது கச்சி ஏகம்பத்தின் பாடல் ஒன்று (4.99.1) தெரிவிக்கின்றது. தான் செய்யும் பணியில் ஏதும் பிழை இருந்தால், புளியம்கொம்பால் அடித்துத் தன்னை திருத்தவும் பெருமானுக்கு உரிமை உண்டு என்று இந்த பாடலில் அப்பர் பிரான் தெரிவிக்கின்றார்.
ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித்தாய் கட்ட நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித்தாய் நின் பணி பிழைக்கில் புளியம்வளாரால்
மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே
பொழிப்புரை
தமிழ் மக்களாகிய நம்மால் விரும்பி போற்றப்படும், கடம்ப மாலை அணிந்தவனாகிய முருகப் பெருமானைப் பெற்ற அன்னை பார்வதி தேவியைத் தனது உடலில் ஒரு பங்காக ஏற்றவன் சிவபெருமான். எனக்கு நேர்ந்த பல விதமான இன்னல்களிலிருந்து என்னைக் காப்பாற்றிய பெருமான், வரவிருக்கும் நாட்களில் எதிர்கொள்ளும் இடர்களிலிருந்தும் என்னை காப்பாற்ற வேண்டும். அவ்வாறு என்னை காப்பற்றுவது அவனது கடமையாகும். இந்த சிவபெருமானுக்கு அடிமைப்பணி செய்வதை நான் எனது கடமையாக கருதுகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

