பாடல்: 10
பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளானாகி உள்ளிருந்து
அங்கு உள்நோய் களைவான் தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலை குனியத் தீமூட்டும் திண்மையானாம்
அறுத்திருந்த கையானாம் அந்தாரம் அல்லி
இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே
விளக்கம்:
புள்ளூர்வான்=கருடனாகிய பறவையை வாகனமாகக் கொண்ட திருமால். பொறுத்திருந்த= சுமையாகத் தாங்கிய திருமால். திருபுரத்து அரக்கர்களை எதிர்த்து போருக்குச் சென்ற சமயத்தில், சிவபெருமான் தேரின் மீது தனது காலை வைத்தபோது தேரின் அச்சு முறிந்தது. அப்போது சிறிதும் தயங்காமல், திருமால் இடப வடிவம் எடுத்து, சிவபெருமான் தன்னை வாகனமாகக் கொண்டு போருக்குச் செல்ல உதவி புரிந்தார். இந்த நிகழ்ச்சி தான் இங்கே பொறுத்திருந்த புள்ளூர்வான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல திருமுறைப் பாடல்களில் மால்விடை என்று இந்த நிகழ்ச்சி உணர்த்தப்படுகின்றது. திருவாசகத்தின் திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகர் இந்த செய்தியினைக் குறிப்பிடுகின்றார்.
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்கு அறிய இயம்பேடீ
தட மதில்கள் அவை மூன்றும் தழல் எரித்த அந்நாளில்
இடபமாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ
திருமால் சிவபிரானை தனது உள்ளத்தில் வைத்து வழிபட்டார். திருமாலின் வழிபாட்டிற்கு ,மிகவும் மகிழ்ந்த சிவபெருமான், திருமால் விடும் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப நடனம் ஆடினார். அதனால் இந்த நடனத்திற்கு அஜபா நடனம் என்றே பெயர். இவ்வாறு திருமாலின் உள்ளத்தில் இருந்த தன்மை, பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளானாகி என்ற சொற்றொடர் மூலம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சி, அப்பர் பெருமானால், பாடிளம் பூதத்தினானும் என்று தொடங்கும் ஆரூர்ப்பதிகத்தின் கடைப் பாடலிலும் இடம் பெறுகின்றது.
பையம் சுடர்விடு நாகப் பள்ளி கொள்வான் உள்ளத்தானும்
கை அஞ்சு நான்கு உடையானைக் கால் விரலால்
அடர்த்தானும்
பொய் அஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ் புரிந்தார்க்கு
அருள் செய்யும்
ஐயஞ்சின் அப்புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
இந்தப் பாடலின் கடைசி அடியில் ஆரூர்ப் பெருமான் ஐயஞ்சின் அப்புறத்தான் என்று சொல்லப் படுகின்றது. இருபத்தைத்து என்ற சொல் எதனைக் குறிக்கின்றது என்பது பற்றி உரை ஆசிரியர்கள் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கின்றனர். இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள் (ஐம்பூதங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கன்மேந்திரியங்கள், ஐந்து தன்மாத்திரைகள், நான்கு அந்தக்கரணங்கள்) மற்றும் ஆன்மாவைக் கடந்தவன் என்று ஒரு விளக்கம். மற்றொரு விளக்கம் சற்றே சுவையானது. ஆரூரில் இருக்கும் வீதி விடங்கர், சோமாஸ்கந்தரின் உருவம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சோமாஸ்கந்த மூர்த்தம் இறைவனின் இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களில் ஒன்று. ஆனால் ஆரூரில் இருக்கும் மூர்த்தம், தனது உள்ளத்தில் திருமால் வைத்து வழிபட்டது. இந்திரன் சிவபூஜை செய்வதற்கு மூர்த்தம் கேட்டபோது, திருமால் அதே உருவத்தை சிலையாக மாற்றி இந்திரனுக்கு அளித்தார். இந்த மூர்த்தம் தான், முசுகுந்தர் மூலம் திருவாரூருக்கு வந்தது.
இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றின. ஈசான முகத்திலிருந்து சோமாஸ்கந்தர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாண சுந்தரர், மற்றும் நடராஜர் உருவங்கள் தோன்றின. தத்புருட முகத்திலிருந்து, பிக்ஷாடனர், காமாரி (மன்மதனை எரித்தவர்), காலாரி (காலனை உதைத்தவர்), சலந்தராரி (சலந்தரனை அழித்தவர்), மற்றும் திரிபுராரி(திரிபுரங்களை எரித்தவர்) உருவங்கள் தோன்றின. சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய உருவங்கள், இலிங்கோத்பவர். சுகாசனர், உமா மகேஸ்வரர், அரியர்த்தர் (சங்கர நாராயணர்), அர்த்த நாரீஸ்வரர் ஆகியவை. அகோர முகத்திலிருந்து தோன்றியவை, கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதர் (விஜயனுக்கு அருளியவர்) மற்றும் நீலகண்டர், வாமதேவ உருவத்திலிருந்து தோன்றிய உருவங்கள், கங்காளர், சக்ரதானர் (திருமாலுக்கு சக்கரம் அளித்தவர்), கஜமுகானுகிரகர் (ஐராவத யானைக்கு அருள் புரிந்தவர்), சண்டேச அனுகிரகர், மற்றும் ஏகபாதர் ஆகும். எனவே திருவாரூரில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தம், இருபத்தைந்து மாகேச்சர மூர்த்தங்களுக்கு அப்பாற்பட்டது என்ற பொருளில் ஐயஞ்சின் அப்புறத்தான் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார் என்பது தான் இந்த சுவையான விளக்கம்.
குனிய=வளைத்து நிற்க. சிலை குனிய என்று, மேரு மலையை வில்லாக வளைத்துத் தனது கையில் சிவபெருமான் ஏந்திய நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஆனால் வல்லமை வாய்ந்த வில்லினை பயன்படுத்தாமல், தனது சிரிப்பு ஒன்றினால், மூன்று கோட்டைகளும் எரிந்து அழியுமாறு செய்த வீரம் இங்கே உணர்த்தப்படுகின்றது.
பொழிப்புரை:
சிவபெருமான், இடபமாகத் தன்னைத் தாங்கிய, கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலின் உள்ளத்தில் இருந்து, அவரது உள்ளக் கவலையைப் போக்கியவர்; தன்னைப் பகைத்த திருபுரத்து அரக்கர்களின் கோட்டைகளை, கையில் வளைத்த நிலையில் வில் இருந்த போதிலும் அதனைப் பயன்படுத்தாமல், ஆயுதம் ஏதும் இன்றி தனது சிரிப்பு ஒன்றினால் எரிந்து அழியுமாறு வீரச்செயல் புரிந்தவர்; தாமரை மலரில் உறையும் பிரமனது ஒரு தலையினை, அவன் செருக்கு கொண்டு திரிந்தமை அறிந்து, நகத்தினால் கிள்ளி எறிந்த கையினை உடையவன்; தேவர்களைக் காப்பதற்காக பாற்கடலில் எழுந்த நஞ்சினை உண்டதால் கருநிறம் கொண்ட கழுத்தினை உடையவன். இத்தகைய சிறப்பு வாய்ந்த கருணையாளனாகிய சிவபெருமான் அடியார்களுக்கு கண் போன்று வழிகாட்டியாக உள்ளான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெடிகுண்டு தாக்குதலில் 2 சிறாா்கள் உயிரிழப்பு: மணிப்பூா் முதல்வா் வீட்டை நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரா்கள் மீது தடியடி- கண்ணீா்ப் புகை குண்டு வீச்சு

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


