மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

77. அட்டுமின் இல்பலி - பாடல் 6

அறிவின்மை காரணமாக

News image
Updated On :24 அக்டோபர் 2017, 6:30 pm

பாடல் 6:
தேற்றப்பட திருநல்லூர் அகத்தே சிவன் இருந்தால்
தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார் தொண்டர்
                                                                                       துன்மதியால்
ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடிய ஆதரைப் போல்
காற்றில் கடுத்து உலகெல்லாம் திரிதர்வர் காண்பதற்கே

விளக்கம்:

ஆதர்=கீழ்மகன், அறிவில் இழிந்தவர் காற்றில் கடுத்து=காற்றைவிட வேகமாக: தேற்றப்பட=உள்ளத்தில் தெளிவு ஏற்பட.

ஒரு பொருளை அந்த பொருள் எங்கே இருக்குமோ அங்கே தேடினால் தான் நமக்கு கிடைக்கும். சிவபெருமான் உறையும் திருக்கோயில்களை விட்டுவிட்டு, மற்ற இடங்களில் அவரைத் தேடும் மூடர்களை, ஆற்றில் தொலைத்த பொருளை குளத்தில் தேடும் அறிவிலிகள் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். ஆற்றில் கெடுத்துக் குளத்தில் தேடும் ஆதர் என்பது பழமொழி. அந்நாளில் வழங்கிய பழமொழிகள் பலவற்றை அப்பர் பிரான் ஒரு  பதிகத்தில் பயன்படுத்தியுள்ளார். பழமொழிப் பதிகம் என்று அழைக்கப்படும் அந்த பதிகம், மெய்யெலாம் வெண்ணீறு என்று தொடங்குகின்றது; திருவாரூர் தலத்தின் மீது அருளப்பட்டது. (பதிக எண்: 4.05)

அப்பர் பிரானுக்குப் பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையில், சிவபிரானின் அருளால் இந்த பழமொழியை பொய்யாக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. விருத்தாசலம் என்று இன்று அழைக்கப்படும் திருமுதுகுன்றம் என்ற தலத்தில் சிவபிரான் அருளால், சுந்தரர் பன்னிரண்டாயிரம் பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளைப் பெற்ற சுந்தரர், பெருமானிடம், பெருமானே, இந்த பொற்காசுகள் அனைத்தும் திருவாரூரில் உள்ளார் வியக்குமாறு, அங்கு வரும்படியாக அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார். அப்போது சிவபெருமான், வானில் எழுந்த அசரீரி வாக்கின் மூலம். ஆரூரனே, பொற்காசுகளை மணிமுத்தாறு ஆற்றில் இட்டு, திருவாரூர் குளத்தில் பெற்றுக் கொள்வாய் என்று, தெரிவித்தார். சுந்தரரும் பெருமான் சொல்லியபடியே அந்த காசுகளை மணிமுத்தாறு ஆற்றில் இட்டுச் சென்றார். இந்த நிகழ்ச்சி பெரிய புராணத்தில் மிகவும் விரிவாக சொல்லப்படுகின்றது.
அருளும் இக்கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர்
                                                                               உள்ளோர்
மருளுற வியப்ப அங்கே வரப்பெற வேண்டும் என்னத்
தெருளுற எழுந்த வாக்கால் செழுமணி முத்தாற்றில்
                                                                              இட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்தில் போய்க் கொள்க
                                                                              என்றார்.

திருவாரூர் சென்ற பின்னர், ஒருநாள் தனது மனைவி பரவையுடன், திருவாரூர் குளக்கரைக்குச் சென்ற சுந்தரர் பொன் செய்த மேனியினீர் என்ற பதிகம் பாடியபோது, பொற்காசுகள் குளத்தில் மிதந்து வந்தன. இவ்வாறு பழமொழி பொய்யான அதிசயம், சிவபிரான் பணித்ததற்கு ஏற்ப, சுந்தரர் மணிமுத்தாறு ஆற்றில் பொற்காசுகளை விட்டுச் சென்றதால் நிகழ்ந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிவபிரானின் அருள் இருந்தால், பழமொழியும் பொய்யாகுமாறு அதிசயங்கள் நிகழும் என்பதையும் இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. பொன் செய்த மேனியினீர் (பதிக எண்: 7.25) என்ற பதிகத்தின் ஒன்பதாவது பாடலை (ஏத்தாதே இருந்தறியேன்) சுந்தரர் பாடியபோது, குளத்தில் பொற்காசுகள் மிதந்து வந்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். மேலும் இந்த நிகழ்ச்சி அப்பர் பெருமானின் திருவாக்கு என்றும் பொய்க்காமல் இருப்பதை எந்த விதத்திலும் மாற்றவில்லை நாம் உணரவேண்டும்
 
கொந்தவிழ் பூங்கொன்றை முடிக் கூத்தனார் திருவருளால்
வந்தெழு பொன் திரள் எடுத்து வரன்முறையால் கரையேற்ற
அந்தரத்து மலர்மாரி பொழிந்து இழிந்தது அவனியுளோர்
இந்த அதிசயம் என்னே யார் பெறுவார் எனத் தொழுதார் 

   
பொழிப்புரை:

உலகத்தவர் உள்ளங்களில் தெளிவு ஏற்படவேண்டும் என்பதற்காக சிவபெருமான் நல்லூரில் உறைகின்றார். ஆனால் சிலர் தங்களது அறிவின்மை காரணமாக, நல்லூர் திருக்கோயில் சென்று சிவபெருமானைக் கண்டு, தொழுது அருள் பெறாமல், வேறு வேறு இடங்களுக்கெல்லாம் காற்றினை விட வேகமாகச் சென்று இறைவனைத் தேடுகின்றார்கள். என்னே அவர்களது அறிவின்மை. ஆற்றில் தொலைத்த பொருளைக் குளத்தினில் தேடிய மூடர்களின் செய்கை போல் அவர்கள் செய்கை உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.