பாடல் 3:
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்களாய புராணர் போலும்
புகழ வளரொளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப் படுவார் போலும்
பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்
ஏதங்களான கடிவார் போலும்
இடைமருது மேவிய ஈசனாரே
விளக்கம்:
ஏதங்கள்=துன்பங்கள். தங்களது துன்பங்கள் இறைவனால் நீக்கப் படுவதால் அடியார்கள் இன்பம் அடைவதாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். அடியார்கள், பெருமானின் திருவடிகளைத் தொழுது ஏத்தும் சிறப்பு பல தேவாரப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. பெருமானின் திருவடிகளைத் தவிர தனக்கு பற்றுக்கோடு வேறேதும் இல்லை என்று சுந்தரர் நமச்சிவாயப் பதிகத்தின் பாடலில் (7.49.1) கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது. இந்த பாடலில் சுந்தரர், பெருமானின் திருநாமத்தை, நமச்சிவாய என்ற மந்திரத்தைச் சொல்லிய பின்னரே தான் மனிதனாக பிறந்ததாக உணர்ந்தேன் என்று கூருகின்றார்.
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம்
பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து
எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக்
கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா
நமச்சிவாயவே
பெருமானின் திருவடிப் பெருமையை உணர்த்தும் விதமாக திருவடித் தாண்டகம் (6.08) பாடிய அப்பர் பிரான், பதிகத்தின் அனைத்துப் பாடல்களும் திருவடிகளின் பெருமையை குறிப்பிடும் பதிகங்கள் சில நமக்கு அருளியுள்ளார். அத்தகைய பதிகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
பதிக எண் தலம் தொடக்கச் சொற்கள்
4.92 திருவையாறு சிந்திப்ப அரியன
4.100 இன்னம்பர் மன்னு மலைமகள் கையால்
4.108 திருமாற்பேறு மாணிக்கு உயர் பெறக்
6.06 திருவதிகை அரவணையான் சிந்தித்து
திருப்பெருந்துறையில் இறைவனால் மணிவாசகர் ஆட்கொள்ளப்பட்டபோது ஒரு சில வினாடிகளே இறைவனின் திருவடிகள், மணிவாசகப் பெருமானின் தலையின் மேல் பொருந்தின என்றாலும், அடிகளார் தமது தலையின் மீது அந்த திருவடிகள் நிலைபெற்று இருப்பதாகவே நினைத்தார் போலும். சென்னிப்பத்து என்ற பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், இறைவனின் திருவடிகள் தனது தலையின் மீது நிலையாக நின்று பிரகாசிக்கின்றது என்று கூருகின்றார். மன்னி=நிலை பெற்று. இந்த பதிகத்தின் பாடல்களில் இறைவனின் சிறப்புகள் உணர்த்தப்பட்டு, அத்தகைய சிறப்பு வாய்ந்த இறைவனின் திருவடிகள் தனது தலை மீது பொருந்தி இருப்பதாக கூறுகின்றார். பதிகத்தின் ஐந்தாவது பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா
வகை நல்கினான்
வேய தோள் உமை பங்கன் எங்கள் திருப்பெருந்துறை
மேவினான்
காயத்துள் அமுது ஊற ஊற நீ கண்டுகொள் என்று
காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக் கண் நம் சென்னி மன்னித்
திகழுமே
பெருமானின் திருவடிகள் பதிந்ததால், தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அடிகளார் இந்த பாடலில் குரிப்பிடுகின்றார். அதற்கு முன்னர், வினை வயத்தால் கட்டுண்ட தனது உடலில் குருதி முதலான பல திரவங்கள் ஊறின. இறைவனாரின் திருவடிகள் பொருந்திய பின்னர் அடிகளாரின் உடலில் பெரிய மாற்றம் நிகழ்ந்து, அமுத தாரைகள் ஊறின. அவ்வாறு ஊறின அமுத தாரைகள் உடலில் உள்ள ஒவ்வொரு மயிர்கால் வழியாக பெருகி வந்ததை அடிகளார் உணரவில்லை. ஆனால் இறைவனின் திருவடிகள் அடிகளாரிடம் உனது உடலில் நிகழ்ந்த மாற்றத்தை நீ கண்டு கொள்வாயாக என்று உணர்த்தியதாக மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார்.
தூய மாமலர்ச் சேவடி என்றும், வட்ட (தாமரை மலர் போன்ற திருவடிகள்) மாமலர் சேவடி என்றும் இன்பம் பொங்கும் மாமலர் சேவடி என்றும், செய (நமக்கு மிகவும் அருகில் உள்ள) சேவடி என்றும், மத்தன் (அடியார்களுக்கு அளவில்லா அருள் வழங்கி பித்தன் போன்று செயல்படுபவன்) மாமலர் சேவடி என்றும், திறமை காட்டிய சேவடி என்றும், வழு இலா மலர்ச் சேவடி என்றும், செம்பொன் மாமலர் சேவடி என்றும் சித்தம் ஆர் தரும் சேவடி என்றும் பதிகத்தின் பாடல்களில் திருவடிப் பெருமையை மணிவாசகர் உணர்த்துகின்றார்.
இந்த பதிகத்தின் கடைப் பாடல் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலே குறிப்பிட்டவாறு சேவடிப் பெருமையை உணர்த்தி, அந்த சேவடிகள் தன்னிடம் ஏற்படுத்திய மாற்றத்தையும் உணர்த்திய அடிகளார், நம் மீது கருணை கொண்டு நம் அனைவரையும் அழைத்து அறிவுரை சொல்கின்றார். பெருமானின் திருநாமங்களைச் சொல்லியவாறு திரியும் அடியார்களே நீங்கள் இங்கே வாருங்கள், உலகத்தின் பொருட்கள் மீதும் உலகத்தில் உள்ள உயிர்கள் மீதும் நீங்கள் கொண்டுள்ள பாசம் விலக வேண்டும் என்று விரும்பினால், பெருமானை வழிபடுவீர்களாக என்று அனைவரையும் அழைக்கும் பாடல் இது. முக்தி அளிக்க வல்லவன் பெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு, முத்தன் என்று இந்த பாடலைத் தொடங்குகின்றார்.
முத்தனை முதல் சோதியை முக்கண் அப்பனை
முதல் வித்தினைச்
சித்தனை சிவலோகனைத் திருநாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள் இங்கே வம்மின் நீர் உங்கள் பாசம்
தீரப் பணிமினோ
சித்தம் ஆர் தரும் சேவடிக் கண் நம் சென்னி
மன்னித் திகழுமே
பொழிப்புரை:
வேதங்களையும் வேத மந்திரங்களுடன் பொருந்திய செயல்களாகிய வேள்விகளை படைத்தவரும், விண்ணுலகமாகவும் மற்றும் மண்ணுலகமாகவும் இருப்பவரும், ஆகாயம் காற்று தீ நீர் மற்றும் பூமி ஆகிய ஐந்து பூதங்களாக இருப்பவரும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் பழையவராக இருப்பவரும், தன்னைப் புகழ்ந்து பாடும் அடியார்களின் உள்ளத்தில் ஞான உருவமாக இருப்பவரும், பலராலும் தனது திருவடிகள் வணங்கப் பெறுபவரும், அடியார்களின் துன்பங்களைக் களைந்து அவர்களை இன்பமுறச் செய்பவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை





