வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

73. சூலப்படை உடையார் தாமே - பாடல் 6

ஏழு இசைகளை

News image
Updated On :6 ஜனவரி 2018, 9:40 am

பாடல் 6: 

ஐயிரண்டும் ஆறொன்றும் ஆனார் போலும்
            அறுமூன்றும் நான்மூன்றும் ஆனார் போலும்
செய்வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை
           அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும்
கொய்மலர் அம் கொன்றைச் சடையார் போலும்
          கூத்தாடவல்ல குழகர் போலும்
எய்யவந்த காமனையும் காய்ந்தார் போலும்
         இடைமருது மேவிய ஈசனாரே


விளக்கம்:
ஐயிரண்டு = பத்து திசைகள், எட்டு திசைகள் மற்றும் கீழ் மேல் எனப்படும் இரண்டையும் சேர்த்து பத்து திசைகள் என்று அப்பர் பிரான் சொல்கின்றார். ஆறொன்று = ஆறும் ஒன்றும் என்று பொருள் கொண்டு ஏழு இசைகளை குறிப்பதாக கொள்ள வேண்டும். அறுமூன்று = பதினெட்டு புராணங்கள் என்றும் ஆறு அங்கங்கள் நான்கு வேதங்கள் நான்கு உபவேதங்கள் நான்கு உப அங்கங்கள் என்றும் இருவிதமாக பொருள் கூறப்படுகின்றது. நான்மூன்று = பன்னிரண்டு சூரியர்கள்; ஒவ்வொரு மாதத்திற்கும் அதிபதியாகிய சூரியன் வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றான். பன்னிரண்டு வடமொழிப் பெயர்களாவன, தாதா, அர்யமா, மித்ரா, வருணா, இந்திரா, விவஸ்வான், த்வஷ்டா, விஷ்ணு, அம்சுமான், பகா, பூஷா, பர்ஜனா. அறுமூன்று என்ற தொடருக்கு, பதினெட்டு கணங்களை குறிப்பதாகவும் பொருள் கொள்வது வழக்கம். ஐயிரண்டும் ஆறொன்றும் என்ற தொடருக்கு, இரண்டு ஐந்து ஒரு ஆறு என்று கொண்டு பதினாறு என்று பொருள் கொண்டு பதினாறு பேறாக விளங்குவதாகவும் பொருள் கொள்வார்கள். பதினாறு பேறுகள் எவை என்று பட்டியல் இடும் அபிராமி பதிகத்தின் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 
    
சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராச தனையை
மாதேவி நின்னைச் சத்யமாய் நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமர்க்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தன தானியம் அழகு
புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி
துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த
வாழ்வு அளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அனுகூலி
திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்க ஒணாதோ மகிமை வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ்நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே


பொழிப்புரை:
எட்டு திசைகள் அன்றியும் கீழ்த் திசை மேல் திசை ஆகிய இரண்டையும் சேர்த்து பத்து திசைகளாக இருப்பவரும், ஏழிசையாக இருப்பவரும், பதினெட்டு புராணங்களாக இருப்பவரும், பன்னிரண்டு சூரியர்களாக இருப்பவரும், தீவினைகள் மற்றும் நல்வினைகள் ஆகவும் இருந்து உயிர்கள் தங்களது வினைத் தொகுதியின் ஒரு பகுதியை கழிக்க உதவி செய்பவரும், அனைத்து திசைகளிலும் நிறைந்துள்ள பொருட்களாக இருப்பவரும், அன்று புதியதாக அலர்ந்த கொன்றை மலர் மாலையைத் தனது தலையில் சூடியவரும், நடனத்தில் சிறந்து விளங்கும் அழகராக இருப்பவரும், தன் மீது மலர் அம்புகளை எய்து தனது தவத்தினைக் கலைப்பதற்கு முயற்சி செய்த காமனை வெகுண்டு நெற்றிக் கண்ணினை விழித்து எரித்தவரும் ஆகிய சிவபெருமான் இடைமருது தலத்தில் விருப்பத்துடன் அமர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.