பாடல் 7:
பண்ணிய சாத்திரப் பேய்கள் பறிதலைக்
குண்டரை விட்டு
எண்ணில் புகழ் ஈசன் தன்னருள் பெற்றேற்கும்
உண்டு கொலோ
திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானன்
எங்கள்
புண்ணியன் தன்னடித் தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே
விளக்கம்:
பண்ணிய சாத்திரங்கள் என்று சமண சமயத்து சாத்திரங்களை அப்பர் பிரான் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.. வேதங்களையும் அதன் தொடர்பான சாத்திரங்களையும் நிந்தனை செய்தவர்கள் சமணர்கள். பெருமான் அருளிய வேதங்களின் அருமை தெரியாமல், தங்களது மதக் கோட்பாடுகள் அடங்கிய சாத்திரத்தை தாங்களே தயார் செய்து கொண்டவர்கள் சமணர்கள். இதனைக் குறிப்பிடும் வகையில் பண்ணிய சாத்திரங்கள் என்று இங்கே கூறுகின்றார். திண்ணிய=உறுதி வாய்ந்த
வேதங்களை நிந்தனை செய்து சமணர்கள் வாழ்ந்தது, திருஞான சம்பந்தரின் ஆலவாய்ப் பதிகத்தின் முதல் பாடல் ஒன்றினில் (3.108.1) குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் இங்கே காண்போம்.
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே
பெருமானை புறக்கணித்து வாழ்ந்த சமணர்களை பேய்களை என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு சுந்தரர் அருளிய முதல் பதிகத்தின் ஏழாவது பாடலை நினைவூட்டுகின்றது. இறைவனால் பணிக்கப்பட்டு தமிழ்நாட்டில் அவதரித்த சுந்தரர், தான் அவதரித்த நோக்கத்தை மறந்து திரிந்ததை, பெருமானின் நினைவுகள் மனதினில் இன்றி பேயாக திரிந்ததாக கூறுகின்றார். இவ்வாறு சுந்தரர் தன்னைக் குறிப்பிடும் பாடல் (7.1.2) அவர் அருளிய முதல் திருப்பதிகத்தில் உள்ளது. வேய்=மூங்கில், மூங்கில் மரங்கள் நிறைந்த வளமையான தலம் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தலத்தின் திருக்கோயிலின் பெயர் அருள் துறை. இறைவன் தனது அடிமையாக ஏற்றுக்கொண்டதை வேறு எவரும் பெறாத பெரும்பேறு என்று சுந்தரர் மன நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவதை நாம் உணரலாம்.
நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
செத்திலாப் பத்து பதிகத்தின் ஏழாவது பாடலில், தன்னை பேயன் என்று மணிவாசகர் குறிப்பிடுகின்றார். மறிகடல்=மடிந்து வரும் அலைகள் நிறைந்த கடல்; சேயன்=தொலைவில் இருப்பவன்; இறைவன் நமக்கு மனம் மொழி மொய் ஆகிய மூன்றினையும் அளித்து, அவைகளை பயன்படுத்தி வாழ்வினில் உய்யும் வழியினை காட்டியபோதும், அவற்றை முறையாக இறைவழிபாட்டில் ஈடுபடுத்தாததால், தன்னை பேயன் என்று மணிவாசகர் அழைக்கின்றார். வானவா என்றும் மணிகண்டனே என்றும் அமுதே என்றும் அழைக்காமலும், மனதினில் நினையாமலும், நமச்சிவாய என்று சொல்லி திருவடிகளை வணங்காமலும் இருந்த நிலை இங்கே கூறப்படுகின்றது. இவ்வாறு தனது மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் தறிகெட்டுப் போனாலும், தன்னை அழைத்துக் கொள்ள வேண்டியது இறைவனின் கடமை என்று இறைஞ்சும் மணிவாசகர், அவ்வாறு இறைவன் அழைத்துக் கொள்ளாததால், இறைவனை விட்டு தொலைதூரம் சென்றுள்ள தான், தெருவெங்கும் உய்யும் வழி அறியாமல் திரிவதாக கூறுகின்றார். இருபத்து நான்கு மணி நேரமும், இறை உணர்வில் தோய்ந்திருப்பினும், அவ்வாறு தான் இல்லை என்று அடக்கத்துடன் கூறிக் கொள்வதே அடியார்களின் இலக்கணமாகும். தங்களது ஈடுபாடு போதாது என்றும் தங்களது ஈடுபாடு இன்னும் அதிகமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புவதே இவ்வாறு அவர்களை கூறச் செய்கின்றது போலும்.
மாயனே மறிகடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியாப்
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் பிறை குலாம் சடைப் பிஞ்ஞகனே ஓ
சேயன் ஆகி நின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே
பொழிப்புரை:
இறைவன் தனது திருவாயால் அருளிய வேதங்களை நிந்தனை செய்தவர்களாய், தாங்களே தயாரித்த சாத்திரங்களை மற்றவர்களுக்கு உபதேசம் செய்தவாறு பேய்களாக திரிபவர்களும், தங்களது தலை முடியை வலிய நீக்குபவர்களும் ஆகிய சமண மூர்க்கர்களை விட்டு நீங்கி, எண்ணில் அடங்காத புகழினை உடைய ஈசனின் அருளைப் பெற்ற அடியேனுக்கு, உறுதி வாய்ந்த மதில்களை உடைய ஆரூர் நகரத்தின் மூலட்டானத்தில் உறையும் எங்களது பெருமானின் திருவடிகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தைப் பெற்ற தொண்டர்களுக்கு அடியேனாக இருக்கும் நல்வினைப் பேற்றினை அடியேன், பெறுவேனோ. பெருமானே, நீர் தான் எமக்கு அத்தகைய அருள் புரிந்து ஆரூர் தொண்டர்களுக்கு திருத்தொண்டு செய்யும் வாய்ப்பினை அடியேனுக்கு நல்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை






