பின்னணி:
தனது ஐந்தாவது தலயாத்திரையின் ஒரு பகுதியாக திருமணஞ்சேரி எதிர்கொள்பாடி வேள்விக்குடி மற்றும் துருத்தி ஆகிய நான்கு தலங்களுக்கும் திருஞானசம்பந்தர் சென்றதாக பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இந்த நான்கு தலங்களும், பரத முனிவரின் மகளாக வளர்ந்த அம்பிகை பரமனை திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட தலங்களாகும். ஞானசம்பந்தர் எதிர்கொள்பாடி சென்றிருந்த போதிலும் அந்த தலத்தின் மீது அவர் அருளிய பதிகம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. அப்பர் பிரான் மற்றும் சுந்தரரும் இந்த நான்கு தலங்கள் சென்றதாக பெரியபுராணம் எடுத்துரைக்கின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் வேள்விக்குடி மற்றும் துருத்தி தலங்கள் குறிப்பிடப் படுகின்றன. சுந்தரரும் தான் அருளிய இரண்டு பதிகங்களின் (7.18, 7.74) அனைத்துப் பாடல்களிலும் இந்த இரண்டு தலங்களையும் குறிப்பிடுகின்றார். வேள்விக்குடி தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தனது பாவநாசத் திருப்பதிகத்தில் அப்பர் பிரான் இந்த தலத்து இறைவனை, வேள்விக்குடி வேதியன் என்று அழைக்கின்றார். இந்த பதிகத்து பாடல்களில் திருஞானசம்பந்தர் மணவாளக் கோலத்துடன் உள்ள பெருமான் பகலில் துருத்தி தலத்தில் உறைவதாகவும் இரவினில் வேள்விக்குடி தலத்தினில் உறைவதாகவும் குறிப்பிடுகின்றார். எனவே இந்த இரண்டு தலங்களையும் சேர்த்து ஒரே தலமாக சிலர் கருதுகின்றனர். இந்த பதிகத்தினைத் தவிர்த்து வேறொரு பதிகமும் ஞானசம்பந்தரால் துருத்தி தலத்தின் மீது அருளப்பட்டுள்ளது. வரைத்தலை பசும்பொன் என்று தொடங்கும் இந்த பதிகம் (2.98) திருவாவடுதுறை சென்ற பின்னர் துருத்தி சென்ற போது அருளியதாக பெரியபுராணம் கூறுகின்றது. வேள்விக்குடி மற்றும் துருத்தி ஆகிய இரண்டு தலங்களையும் இணைத்து ஞானசம்பந்தர் பதிகம் பாடியதை குறிப்பிடும் பெரியபுராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. தழும்புதல்=விளங்க வெளிப்படுதல்;
செழுந்திரு வேள்விக்குடியில் திகழ் மணவாள நற்கோலம்
பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையில் கூட தண்டமிழ் மாலையில் பாடிக்
கொழுந்து வெண்திங்கள் அணிந்தார் கோடிகாவில் சென்று அடைந்தார்
திருத்துருத்தி இந்நாளில் குத்தாலம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த தலம் கும்பகோணம் மயிலாடுதுறை இரயில் பாதையில் அமைந்துள்ளது. துருத்தி என்றால் இரு பக்கங்களிலும் ஆறு விரிந்து செல்ல நடுவே திட்டாக அமைந்துள்ள இடம் என்று பொருள். கோயிலில் உள்ள பரந்த மண்டபங்கள், படித்துறைக்கு அழைத்துச் செல்லும் படிகள் முதலியன கோயிலை ஒட்டி காவிரிநதி சென்றிருக்க வேண்டும் என்று புலப்படுத்துகின்றன. வேதங்களே குடையாக வந்து பெருமானின் திருமணத்தின் போது நின்று பின்னர் தலமரமாக மாறியது என்று கூறுவார்கள். உத்தாலம் என்பது ஒருவகை ஆலமரம். இதுவே திருக்கோயிலின் தலமரமாகும். உத்தாலம் என்ற பெயர் நாளடைவில் குத்தாலம் என்று மருவி தலத்தின் பெயராக மாறிவிட்டது போலும், இறைவனின் திருநாமம் சொன்னவாறு அறிவார்; இறைவியின் திருநாமம் பரிமள சுகந்தநாயகி. மணக்கோலத்தில் எழுந்தருளிய பெருமான், தான் முன்னம் சொன்ன மறைகளை இங்கே நடைபெற்ற திருமணத்தின் போது ஓதியபடியால் சொன்னவாறு அறிவார் என்ற பெயர் வந்தது என்பார்கள்.
வேள்விக்குடி தலம் துருத்தியிலிருந்து வடகிழக்கில் நான்கு கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த தலத்தின் தான் பரத முனிவரின் மகளாக வளர்ந்த பார்வதி தேவிக்கும் பெருமானுக்கும் நடைபெற்ற திருமணத்துடன் தொடர்பு கொண்ட வேள்விகள் செய்யப்பட்டன என்றும் அருகிலுள்ள மணஞ்சேரியில் திருமணம் நடைபெற்றது என்றும் கூறுவார்கள். தலத்து இறைவனின் திருநாமம் கல்யாணசுந்தரர். இறைவியின் திருநாமம் பரிமள சுகந்த நாயகி. மயிலாடுதுறை பந்தநல்லூர், குத்தாலம் பந்தநல்லூர் நகரப் பேருந்துகள் செல்லும் வழியில் உள்ள அஞ்சலாத்தங்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கி.மீ. நடந்து செல்லவேண்டும். இந்த தலத்தில் உள்ள கல்யாணசுந்தரர் செப்புச்சிலை மிகவும் அழகு வாய்ந்தது. பரிமளசுகந்த நாயகியின் சிலை மிகவும் அழகு வாய்ந்தது. புதுமணப் பெண்ணாம் பார்வதி அன்னையின் ஒவ்வொரு அங்கமும் பெண்களுக்கு உரிய நாணத்தை வெளிபடுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. கீழ் நோக்கி பார்த்திருக்கும் கண்கள், குனிந்த தலை, பெருமானின் கையைத் தொட்டும் தொடாமலும் இருக்கும் கைவிரல்கள், அரை பார்வையால் பெருமானின் அழகினை பெருமிதத்துடன் அளக்கும் கண்கள் என்று நாண உணர்ச்சியை நமது கண் முன்னே கொண்டு வரும் சிற்பியின் திறமையை பாராட்ட வார்த்தைகள் காணாது. தான் விரும்பிய காதலனை அடைந்த மகிழ்ச்சி பொங்கும் அம்பிகையின் முகமும் பெருமையுடன் திகழும் பெருமானின் முகமும் நமது உள்ளத்தில் என்றும் பதிந்திருக்கும் வண்ணம் அழகாக அமைந்துள்ளன. அம்பிகைக்கு கங்கணதாரணம் நடந்த இடம் என்பதால் அம்பிகை கௌதகேசி என்றும் அழைக்கப் படுகின்றாள். இந்த இரண்டு தலங்களிலும் பெருமான் பிராட்டியை பிரியாது உடனிருந்த தன்மை மணிவாசகரால், துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் என்ற கீர்த்தித் திருவகவல் தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது.
பாடல் 1:
ஓங்கி மேல் உழி தரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல்
தாங்கினார் இடுபலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள்
பாங்கினால் உமையொடு பகல் இடம் புகலிடம் பைம்பொழில் சூழ்
வீங்கு நீர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
உழிதரும்=சுழித்து வெள்ளமாக வரும்; வீங்குநீர்=நீர்வளம் மிகுந்த; துருத்தி=ஆற்றின் இடையே உள்ள இடம்; அடிகள்=தலைவர்; பாங்கினால்=முறைப்படி; தம்பிரான் தம்மடிகள் என்ற சொற்கள் இறைவன் தமக்குத் தாமே தலைவராக உள்ள நிலையை உணர்த்துகின்றன. பாங்கினால் என்ற சொல்லுக்கு, வைதீக முறைப்படி பெருமான் பிராட்டியைத் திருமணம் செய்து கொண்டு துருத்தியிலும் வேள்விக்குடியிலும் தங்கியதை குறிப்பிடுகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம். பகலிடம் இரவிடம் என்ற சொற்களில் வரும் இடம் என்பது காலத்தை குறிக்கும்.
ஒருசடை என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒரு என்பதற்கு ஒப்பற்ற என்று சிலர் பொருள் கொண்டு பெருமானின் சடை ஒப்பற்று பெருமை வாய்ந்த சடை என்று கூறுகின்றனர். ஒரு என்ற சொல் ஒன்று எனப்படும் எண்ணிக்கையை குறிப்பதாக பொருள் கொண்டு தனது ஒரே சடையினில் பெருமான் கங்கை நதியினைக் கரந்தார் என்றும் விளக்கம் கொள்ளலாம். பெருமானுக்கு ஒன்பது சடைகள் இருப்பதாக கூறுவார்கள். அப்பர் பிரானும், ஒன்று கொலாம் என்று தொடங்கும் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் (4.18.9) ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை என்று கூறுகின்றார். தனது சடையில் மறைத்த கங்கை நதியை, பகீரதனின் வேண்டுகோளுக்கு இணங்கி விடுவிக்க திருவுள்ளம் கொண்ட பெருமான், ஒரு சடையை மிகவும் லேசாக தளர்த்தினார் என்று புராணங்கள் கூறுகின்றன. புல்லின் நுனியில் அமரும் பனித்துளி போன்று, பெருமானின் ஒரு சடையில் கங்கை நதி மறைந்தது என்பதை உணர்த்தும் பொருட்டு ஒரு சடையில் கரந்தான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். ஒரு சடை என்பதற்கு ஒப்பற்ற சடை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே.
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே
செங்காட்டங்குடி தலத்தின் மீது அருளிய திருத் தாண்டகப் பாடல் ஒன்றிலும் அப்பர் பிரான், கங்கை நதியினை பெருமான் தனது ஒரு சடையினில் மறைத்து வைத்தார் என்று கூறுகின்றார்.
கன்னியை அங்கொரு சடையில் கரந்தான் தன்னைக் கடவூரில் வீரட்டம் கருதினானைப்
பொன்னி சூழ் ஐயாற்றெம் புனிதன் தன்னைப் பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானைப்
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன் தன்னைப் பரிந்து
இமையோர் தொழுது ஏத்திப் பரனே என்று
சென்னி மிசைக் கொண்டு அணி சேவடியினானைச்
செங்காட்டங்குடி அதனில் காண்டேன் நானே
திருவாரூர் மும்மணிக் கோவை பதிகத்தின் பாடல் ஒன்றினில் சேரமான் பெருமான் நாயனார் திருவாரூர் நகரத்தின் சிறப்பினைக் குறிப்பிடும் போது சிவபெருமான் உறையும் திருவாரூர் நகரம் என்று கூறுகின்றார். கங்கை நதியினைத் தனது சடையில் கரந்தவன் என்றும் தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்தவன் என்று பெருமானின் ஆற்றலை குறிப்பிடும் நாயனார், பாய்ந்து செல்லும் கங்கை நீரினைத் தனது ஒரு சடையினில் கரந்தவன் என்று கூறுகின்றார்.
உலாநீர்க் கங்கை ஒரு சடைக் கரந்து
புலால் நீர் ஒழுகப் பொரு களிறு உரித்த
பூத நாதன் ஆதி மூர்த்தி
திரு மட மலைமகட்கு ஒரு கூறு கொடுத்துத் தன்
அன்பின் அமைந்தவன் ஆரூர்
பெருமான் பல சடைகள் கொண்டவர் என்று திருமுறைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கொச்சைவயம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.89.3) தனது பல சடைகள் தொங்க மாலை நேரத்தில் பெருமான் நடனம் ஆடுகின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். வேலை=கடல்; பால் போன்று வெண்மை நிறத்தில் காணப்படும் திருநீற்றினைத் தனது உடல் முழுவதும் பூசிக்கொண்டும் தனது பல சடைகள் தாழவும் மாலை நேரத்தில் நடனம் ஆடும் பெருமான் வேத கீதங்கள் பாடுவதை மிகவும் விரும்புகின்றார் என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பாலை அன்ன வெண்ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை ஆடுவர் கீதம் மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால் கடல் ஓதம் வெண் திரை கரை மிசை விளங்கும்
கோல மாமணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே
தில்லைச் சிதம்பரம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.1.1) பல சடைகள் அடங்கிய தனது தலையினில் குளிர்ச்சி பொருந்திய சந்திரனை வைத்துள்ள பெருமான் என்று குறிப்பிடுகின்றார். பனிகால்=குளிர்ச்சியைத் தரும்; எம=எம்முடைய; நயத்தல்=விரும்புதல்; நாடுதல்=மனம் நாடுதல்; ஆடினாய் என்ற சொல்லுக்கு நடனம் புரிதல் மற்றும் நீராடுதல் என்று இரண்டு பொருள்கள் உள்ளன. இரண்டுமே பெருமானுடன் இணைந்த செயல்கள். ஆடவல்லானை குறிக்கும் இந்த பாடலை, ஆடினாய் என்ற சொல்லுடன் நயமாக தொடங்கி, பெருமான் பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு நீராடுவதையும் சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சம்பந்தரின் சொல்லாட்சியை நாம் இங்கே உணர்கின்றோம்
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம்
நாடினாய் இடமா நறுங் கொன்றை நயந்தவனே
பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனிக்கால் கதிர் வெண் திங்கள்
சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே
கடல் போன்று பரந்த நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதி, சிவபெருமானின் சடையால் தடுக்கப்பட்டவுடன், அந்த சடையைத் தாண்டி செல்லமுடியாமல் சிதறியது. இத்தகைய வல்லமை பெற்ற சிவபெருமானின் சடைகளின் மேல். பாம்பு, கொன்றை மலர்கள், சந்திரன், நறுமணம் வீசும் கோங்கம் ஆகியவை பொருந்தி சடைக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றன என்று திருவொற்றியூர் தலத்தின் மீது அருளிய பாடல் (4.86.3) ஒன்றினில் அப்பர் பிரான் கூறுவதை நாம் இங்கே காண்போம்.
பரவை வருதிரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல்சடை மேல்
அரவம் அணி தரு கொன்றை இளம் திங்கள் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி
உரவு திரை கொணர்ந்து எற்றி ஒற்றியூர் உறை உத்தமனே
பெருமானின் திரண்ட தோள்கள் பவளமலை போன்றும். அந்த தோளில் படியும் சடைக் கற்றைகள் பவளத்தின் தளிர்கள் போன்றும் காணப்படுவதாக அப்பர் பிரான் உணர்த்தும் பாடலை (4.113.1) நாம் இங்கே காண்போம். செம்பவள நிறத்துச் சடையின் மேல் காணப்படும் பாம்பு, பவளக் கொடியில் காணப்படும் கொழுந்து போன்று தோற்றம் அளிக்க, பவளக் கொடியில் காணப்படும் பூ போன்ற பிறைச் சந்திரன் பெருமானின் சடையில் அழகான பூவாக மிளிர்கின்றது என்றும் அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
பவளத் தடவரை போலும் திண்தோள்கள் அத்தோள் மிசையே
பவளக் குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அச்சடை மேல்
பவளக் கொழுந்து அன்ன பைம்முக நாகம் அந்நாகத்தொடும்
பவளக்கண் வாலமதி எந்தை சூடும் பனிமலரே
கபிலதேவர் தனது சிவபெருமான் திருவந்தாதி பதிகத்து (பதினோராம் திருமுறை) பாடலில் பெருமானை பல்சடையான் என்று அழைக்கின்றார். பணி என்றால் பாம்பு என்றும் ஒர் பொருள் உண்டு. பாம்பினைத் தனது உடலின் பல்வேறு இடங்களில் கொண்டுள்ள பெருமானை பணியாய ஆகத்தான் என்று கபிலர் கூறுகின்றார்.
பணியாய் மட நெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்கும் சேயன் பணியாய
ஆகத்தான் சித்து மேல் நம்மை அமரர்கோன்
ஆகத் தான் செய்யும் அரன்
பொழிப்புரை:
மேலும் மேலும் பொங்கி எழுந்து சுழித்து, உலகத்தையே புரட்டிப் போடுவது போன்று மிகுந்த வேகத்துடன் ஆர்பரித்துக் கொண்டு கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது ஒரு சடையில் தாங்கியவனும், உயிர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு, பிரமனின் தலையைத் தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமான் முறையாக தான் மணந்த உமையன்னையுடன் பகலிடத்தில் உறையும் இடம் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும் அகன்ற காவிரி நதியை அருகினில் உடையதும் ஆகிய திருத்துருத்தி தலமாகும். அவரே இரவினில் வேள்விக்குடி தலம் சென்று தங்குகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


