ஜனவரி
கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக கருணாநிதி 11-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு
9. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக கருணாநிதி 11-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் க.அன்பழகன் பொதுச் செயலராகவும், மு.க.ஸ்டாலின் பொருளாளராகவும், கனிமொழி மாநில மகளிர் அணி செயலராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
12. மாதொருபாகன் நாவல் தொடர்பாக 18 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் நூலாசிரியர் பெருமாள் முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதையடுத்து முடிவுக்கு வந்தது. மேலும் தான் எழுதிய அனைத்து நாவல்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
14. காவல், தீயணைப்பு-மீட்பு, சிறைத் துறையைச் சேர்ந்த 1,685 பேருக்கு அவர்களது சிறப்புப் பணியைப் பாராட்டி முதலமைச்சரின் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
21. தனியார் தொலைக்காட்சிக்கு நவீன தொலைபேசி இணைப்புகள் பெறப்பட்டது தொடர்பான வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனின் கூடுதல் தனிச் செயலாளர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்தது.
*******************
இந்தியா
1. இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) தலைமை இயக்குநராக எம்.சத்தியவதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் ஆவார்.
4. காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் சர்ச்சைக்குரிய மரணம் தற்கொலை அல்ல என்று தில்லி காவல் துறை அறிவித்தது.
14. 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் விதிகளை மீறியதாகவும், காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் உடனடியாக பிணை வழங்கியது.
25. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
30. மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர், தமிழக காங்கிரஸின் அறக்கட்டளை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். தான் அமைச்சராக இருந்தபோது தனது செயல்பாடுகளில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறுக்கீடு செய்தார் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
*******************
உலகம்
9. இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்ச தோல்வி. மைத்ரிபாலா சிறீசேனா தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் 6-ஆவது அதிபரானார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் போட்டியிட்டார். மகிந்த ராஜபட்சவின் கீழ் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் இவர். கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமரானார்.
9. "சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத் தாக்குதலில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அனுதாபிகளான ஷெரீஃப் குவாஷி - சயீது குவாஷி சகோதரர்களை பிரான்ஸ் போலீஸார் சுட்டுக் கொன்றனர். யூதர்களுக்கான பல்பொருள் அங்காடியில் தாக்குதல் நிகழ்த்திய மற்றொரு பயங்கரவாதியும் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
11. "சார்லி ஹெப்டோ' படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கான பிரம்மாண்ட அஞ்சலி ஊர்வலத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.
11. வங்கதேசத்தில் தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.கே. சின்ஹா நியமிக்கப்பட்டார். ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
24. ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த ஜப்பானியர் ஹருனா யுகாவா தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டார்.
26. கிரீஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அரசின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்த அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் அமோக வெற்றி பெற்றார்.
26. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில், கொலம்பியாவின் பாலினா வேகா பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
26. இலங்கை அதிபர்களின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைப்பதாக அதிபர் சிறீசேனா அறிவித்தார்.
29. 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த 239 பேரும் உயிரிழந்ததாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
30. இலங்கையின் தலைமை நீதிபதியாக கனகசபாபதி ஸ்ரீபவன் பொறுப்பேற்றார். இலங்கையில் அந்தப் பதவியை ஏற்ற இரண்டாவது தமிழர் அவர்.
30. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள ஷியா பிரிவு மசூதியில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 61 பேர் கொல்லப்பட்டனர்.
*******************
விளையாட்டு
11. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் சென்னை ஓபன் வரலாற்றில்
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
25. சயீத் மோடி பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
31. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன். இது அவருடைய 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
*******************
சினிமா
10. ரஜினிகாந்தின் "லிங்கா' படத்தை திரையிட்டதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி விநியோகஸ்தர்கள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
20. ஷங்கரின் "ஐ' திரைப்படத்தில் தங்களை இழிவாக சித்தரித்திருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கலைப்புலி எஸ்.தாணு தேர்வானார்.
30. மலையாள நடிகை மஞ்சுவாரியர் தனது கணவர் திலீப்பிடமிருந்து விவகாரத்து பெற்றார்.
*******************
விருதுகள்
24. சிறார்களுக்கான தேசிய வீரதீர விருதை பிரதமர் மோடி வழங்கினார். 16 சிறுவர்களும், 8 சிறுமியரும் இந்த விருதைப் பெற்றனர்.
*******************
உதிர்ந்த மலர்கள்
24. பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் (90) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
26. இந்தியாவின் முன்னணி கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் (94) உடல்நலக் குறைவால் காலமானார்.
*******************
நோபல் பரிசு
மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு வில்லியம் கேம்பெல் (அயர்லாந்து), சதோஷி ஒமுரா (ஜப்பான்), யூயூ தூ (சீனா) ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
உருளைப் புழுக்களால் ஏற்படும் யானைக்கால் வியாதி உள்ளிட்ட நோய்களுக்குப் புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக வில்லியம் கேம்பெல், சதோஷி ஒமுரா ஆகிய இருவருக்கும், மலேரியாவுக்குப் புதிய மருந்து கண்டுபிடித்ததற்காக யூயூ தூவுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நியூட்ரினோ அணுத் துகள்கள் சூழலுக்கு ஏற்ப தம்மை உருமாற்றிக் கொள்ளக் கூடியவை என்பதைக் கண்டறிந்த தகாகி கஜிதா (ஜப்பான்), ஆர்தர் மெக்டொனால்டு (கனடா) ஆகிய இரு விஞ்ஞானிகள், 2015-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர்.
அமைதிக்கான நோபல் பரிசை, துனீசியா நாட்டைச் சேர்ந்த தேசிய பேச்சுவார்த்தைக் கூட்டமைப்பு (நேஷனல் டயலாக் குவார்டட்) வென்றது.
துனீஷியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் 2010-2011ஆம் ஆண்டுகளில் வெடித்தபோது, பல்வேறு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மூலம் ஒன்றிணைத்து, நாட்டை ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் சென்றமைக்காக அந்தக் கூட்டமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும், பெண் எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச்சுக்கு (67) வழங்கப்பட்டது.
பல்வேறு கருத்துகளை வெளியிட்ட மானுடத்தின் குரல்களைப் பதிவு செய்து, மனித உணர்வுகளின் வரலாறு, ஆத்மாவின் வரலாற்றை உருவாக்கியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.
பிரிட்டனைச் சேர்ந்த ஆங்கஸ் டீட்டன் (69), இவ்வாண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நுகர்வு சார்ந்த ஆய்வுகள், வறுமை, பொது நலன் குறித்த ஆய்வுகளுக்கு ஆங்கஸ் டீட்டன் ஆற்றிய முக்கியப் பங்களிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
வேதியியல் துறைக்கான நோபல் பரிசை ஸ்வீடனைச் சேர்ந்த தாமஸ் லிண்டால், அமெரிக்காவைச் சேர்ந்த பால் மோட்ரிச், துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் அஜீஸ் சான்சார் ஆகிய மூவர் பெற்றனர்.
மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி தகாகி காஜிடா, கனடாவின் ஆர்தர் பி.மெக்டொனால்டு ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

