வரலாற்றின் இடைக்கால சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை
(பொ.ஆ. 500 - 1500 வரை)
(சென்ற இரு அத்தியாயங்களில், அகழாய்வுகள் மூலம் வெளிப்படுத்தப்பட்ட சங்க காலத்தைச் சார்ந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை பற்றி விளக்கப்பட்டது. இனி வரும் அத்தியாயங்களில், அகழாய்வுகள் மூலம் அறியவரும் இடைக்கால சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை பற்றி விளக்கப்பெறும்).
வரலாற்றின் துவக்கக் காலத்தில் (சங்க காலத்தில்) தோன்றிய மன்னராட்சி, வரலாற்றின் இடைக் காலத்திலும் தொடர்ந்தது. இடைக் காலத்தில் ஏற்பட்ட புதிய அரசியல் கொள்கைகளின் அடிப்படையில், மக்களின் சமூக, பொருளாதார வாழ்வியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரே குடையின் கீழ் இருந்த அரசு, பல்வேறு புதிய தளங்களின் கீழே, புதிய நிர்வாகங்களும், புதிய பரப்பளவுகளில் பல அரசுகளும் தோன்றின. தங்களது ஆட்சிப் பரப்பை அதிகரித்தல் தொடர்பாக போர்கள் தோன்றின. அவ்வாறு வந்த பேரரசுகளாகவும் அரசுகளாகவும் பல்லவர், நுளம்பர், கங்கர், பாண்டியர், சேரர், சோழர், சம்புவராயார் போன்றவர்கள் தமிழகத்தின் இடைக் காலத்தில் ஆட்சிபுரிந்துள்ளனர்.
இந்த இடைக் கால வரலாற்றில் சிறப்புக்குரிய இடங்களாக இருந்தவை சில. அப்பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழக மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை எவ்வாறு இருந்துள்ளது என்பதை இந்த அகழாய்வுகளின் வாயிலாகக் காண முடியும். முதலில், அக்காலகட்டங்களில் சிறப்புற்றிருந்த பகுதிகளில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டு, தகுதியான பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகழ்வாய்வுகளில் பெறப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், அக்கால மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளையும் அங்கு காணப்பட்ட தொல்லியல் சான்றுகளையும் பார்ப்போம்.
வரலாற்றின் இடைக் காலப் பகுதியில் மேற்கொண்ட அகழாய்வுகள்
காஞ்சியும், தஞ்சையும், மதுரையும் தமிழகத்தில் என்றும் சிறப்புபெற்ற பகுதிகளாகவும், நகரங்களாகவும் இருந்துள்ளன. பேரரசர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகளை அகழாய்வு மேற்கொண்டால், அவர்களின் அரண்மனை, மக்கள் வாழ்க்கைமுறை, பண்பாடு இவற்றை முற்றிலுமாக உணரலாம் என்ற நோக்கில், சில இடங்களில் மட்டும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை, தஞ்சாவூர், குறும்பன்மேடு, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், கண்ணனூர், படைவீடு, பல்லவமேடு, மாளிகைமேடு, சேந்தமங்கலம் போன்றவற்றை குறிப்பிடலாம். அகழாய்வுகளில் காணப்பட்ட கட்டடப் பகுதிகள், தொல்பொருட்கள், விவசாயம் பெற்றிருந்த முக்கியத்துவம், நீர்ப்பாசன வசதி, குடிநீர் வசதி போன்றவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை தொல்லியல் அகழாய்வுகளுக்குப்பின் காணலாம்.
பழையாறை
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் வட்டத்தில், கும்பகோணத்திலிருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரைச் சுற்றி கீழப்பழையாறை, மாளிகைமேடு, ராஜேந்திரன்பேட்டை, நுழையூர் போன்ற தொன்மையான பகுதிகள் அமைந்துள்ளன. பழையாறையைச் சுற்றி நான்கு திசைகளிலும் பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், ஆரியப்படையூர் என நான்கு படையூர்கள் இருந்ததைக் காணமுடிகிறது. அவை இன்றளவும் அதே பெயரில் காணப்படுவதைக் கொண்டு, சோழர்கள் காலத்தில் போர்ப் படைப்பிரிவுகள் பல கொண்டு, படைகளின் தலைநகரமாக பழையாறை திகழ்துள்ளது என்பது தெளிவாகிறது. பழையாறை பல சிறப்புபெற்ற பெயர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவை, பல்லவர் காலத்தில் நந்திபுரி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் சோழர்கள் காலத்தில் முடிகொண்ட சோழபுரம், நந்திபுரம், ஆகவமல்ல குலகாலபுரம், ராஜராஜபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டுள்ளது. இங்கு அரண்மனைப் பகுதிகள் பல இருந்துள்ளன. அவற்றை ஆதி பூமி, ராஜேந்திர சோழன் மண்டபம், மதுராந்தகன் திருமாளிகை எனக் குறித்துள்ளனர். எனவே, சோழர்களின் பழைய தலைநகரமாகவும் பழையாறையை சிலர் குறிப்பர்.
அகழாய்வு
1984-ல், தமிழ்நாடு அரசு இந்தச் சிறப்புமிக்க பகுதியை மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டு அகழாய்வு செய்ய திட்டமிட்டது. அதே வருடம் சென்னைப் பல்கலைக் கழகமும் களஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியில் பெருங் கற்காலப் பண்பாட்டுத் தடயங்களைக் கண்டறிந்தது.
இங்கு மூன்று அகழ்வுக்குழிகள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வூரில் அமைந்துள்ள சோமநாத சுவாமி திருக்கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் அகழ்வுக்குழிகள் போடப்பட்டன.
தொல்பொருட்கள்
இங்கு செம்பு பாத்திரம், இரும்பு ஆணிகள், செம்பு ஆணிகள், கண்ணாடி வளையல்கள் (கருப்பு, நீலம், மஞ்சள் வண்ணம் கொண்டவை), சுடுமண் விளக்குகள், ஜாடியின் மூடிப் பகுதிகள், கெண்டி மூக்குப் பகுதிகள் மற்றும் சுடுமண் பொம்மை ஒன்றும் கிடைத்தன. தவிர, கருப்பு, சிவப்பு, கருப்பு-சிவப்பு, நன்கு வண்ணம் தீட்டப்பட்ட பானை ஓடுகளும், கூரை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று, அதிக அளவிளான விளக்குகள் (சிறியதும் பெரியதுமானவை) சேகரிக்கப்பட்டதாகும்.
காலக்கணிப்பு
இங்கு கிடைத்த மட்கலன்கள் மற்றும் தொல்பொருட்களின் அடிப்படையில், இங்கு இரண்டு பண்பாட்டுக் காலம் கண்டறியப்பட்டுள்ளன.
முதல் காலம் - பொ.ஆ. 100 முதல் 600 வரை.
இரண்டாவது காலம் - பொ.ஆ. 600 முதல் 1400 வரை.
பண்டைய சோழர்களின் வாழ்விடமாகவும், அரசிகள், இளவரசிகள் பலரும் இங்கு அரண்மனைப் பகுதியில் தங்கி வாழ்ந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. அவ்வாறு இருந்தும், இவ்வகழ்வாய்வு வாயிலாக குறிப்பிடத்தக்க கட்டடப் பகுதிகளோ, பிற சிறப்பான தொல்பொருட்களோ கிடைக்கவில்லை. இருப்பினும், பெருங் கற்படைக் காலம் அல்லது சங்க காலத்திலிருந்து சோழர்கள் காலம் வரை தொடர்ந்து மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பதற்குரிய சான்றுகள் காணப்படுவதால், இங்கு மக்கள் புழக்கம் தொடர்ந்து இருந்துள்ளது என்பது உறுதியாகிறது.
நாகப்பட்டினம்
தமிழகக் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சிறப்பானது என்றால் அது, நாகப்பட்டினம் அகழாய்வுதான். நாகப்பட்டினம், வங்கக் கடற்கரையை ஒட்டி அமைந்த பெருவணிக நகரம். ஸ்ரீவிசைய மன்னன், ஸ்ரீமாறவிசயோத்துங்கவர்மன், சோழர் காலத்தில் கட்டியதாக ஆனைமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடும் ஸ்ரீராஜராஜப் பெரும்பள்ளி, ஸ்ரீ சூலாமணிவர்மப் பெரும்பள்ளி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த பள்ளிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பழமையான நகரம்தான் நாகப்பட்டினம். ஊரும்பேரும் என்ற நூலில் பட்டினம் என்றாலே பழமையானதும், கடற்கரையை ஒட்டியதுமான பலரும் கூடுகின்ற ஒரு பெருவணிக நகரம் என்று பொருள் குறிப்பிடுகிறார் ரா.பி. சேதுப்பிள்ளை.
நாகப்பட்டினத்துக்கு அருகில்தான், இஸ்லாமியர்களால் போற்றப்படும் சிறப்புமிக்க நாகூர் தர்கா அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களின் புனித இடமான அன்னை வேளாங்கன்னி மாதா உறைவிடமும் நாகைக்கு அருகில்தான் அமைந்துள்ளது. நாகை காரோணீஸ்வரர் ஆலயம் எழுந்தருளியுள்ள இடமும் இதுவே எனலாம். இது சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இவ்வாறு பல்லாற்றானும் சிறப்புபெற்ற சைவ, வைணவச் சமயங்களையும், பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய புனிதத் தலங்களையம் பெற்றிருப்பதுதான் நாகை எனப்படும் நாகப்பட்டினம். அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இப் பகுதியில், இதன் முழுமையான வரலாற்றை அரிய, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் சார்பில் தொல்லியல் துறை பேராசிரியர் முனைவர் ஜெயக்குமார் மேற்கொண்டார். இவ்வகழ்வாய்வில் பல அரிய செய்திகள் வெளிப்பட்டன.
நாகப்பட்டினம் அகழ்வுக்குழியின் தோற்றம்
அகழாய்வு
நாகப்பட்டினத்தில் உள்ள வெளிப்பாளையம் பகுதியில் அகழ்வுக்குழி தோண்டப்பட்டது. ஆய்வில் 3.30 மீட்டர் ஆழம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பல அரிய தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டது. இங்கு, டச்சுக்காரர்கள் பயன்படுத்திய வெள்ளை நிற களிமண்ணால் செய்யப்பட்ட புகைப்பான்கள் பல கண்டெடுக்கப்பட்டன. இதுபோன்ற புகைப்பான்கள், தரங்கம்பாடி பகுதியிலும் ஏராளமாகச் சேகரிக்கப்பட்டு, அங்குள்ள அகழ்வைப்பகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்ரீ ராஜராஜா என தேவ நாகரி எழுத்து பொறித்த செப்புக் காசு ஒன்றும் மண்ணடுக்கில் கிடைத்துள்ளது. சீன நாட்டு மட்கலன்களான போர்ஸலைன், செலடைன் வகை பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை, பொ.ஆ. 10-ம் நூற்றாண்டில் சீன நாட்டுடன் சோழர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பையே இது காட்டுவதாக உள்ளது.
அடுத்து, பெருங் கற்கால பண்பாட்டு வகையைச் சார்ந்த கருப்பு-சிவப்பு மட்கலன்களும், உடைந்த புதிய கற்காலக் கைக்கோடாரி ஒன்றும் கிடைத்துள்ளது. இவ்வகழ்வாய்வு, தமிழகக் கடற்கரையை ஒட்டிய நகரங்கள், பண்டைய காலத்தில் மிகவும் சிறப்படனும், சிறந்த வணிக நகரமாகவும், சிறந்த துறைமுகப்பட்டினமாகவும் திகழ்ந்ததோடு, தொடர்ச்சியான மக்கள் வாழ்க்கையைக் கொண்டு திகழ்ந்துள்ளது என்பதை தொல்லியல் சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம்
அமைவிடம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 100 கி.மீ. தொலைவிலும் கங்கைகொண்ட சோழபுரம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் கங்கைகொண்ட சோழபுரம் உள்ளது.
முதலாம் இராசேந்திர சோழன், தஞ்சையில் இருந்து தன் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றி அமைத்தான். கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டவன் முதலாம் இராசேந்திரன். தான் பெற்ற வெற்றி நீர்மயமான வெற்றி என்பதை சோழகங்கம் என்ற பெயரில் ஒரு ஏரியை கங்கைகொண்ட சோழபுரத்தில் நிர்மாணித்தான். தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்றே ஒரு மாபெரும் கற்றளியை எழுப்பி, அதற்கு கங்கைகொண்ட சோழீஸ்வரம் என்ற பெயரையும் சூட்டினான். அத்துடன், இந்நகரத்தை சோழர்களின் இரண்டாவது தலைநகரமாகவும் மாற்றம் செய்தான். இத்தலைநகர் பெருமை அடையும் வகையில், இத்தலைநகருக்கும் கங்கைகொண்ட சோழபுரம் என்ற பெயரையும் சூட்டி பெரிய நகராக உருவாக்கினான். மேலும், இத்தலைநகரைச் சிறப்பிக்கும் வகையில், பல்வேறு சிறப்புகளையும் வழங்கினான்.
முதலாம் இராஜேந்திர சோழன் தனது வெற்றியின் பயனாகக் கொண்டுவந்த பிற நாட்டின் கலைப்படைப்புகளை ஆங்காங்கே தனது தலைநகரைச் சுற்றி அமைத்தான். சோழர்கள், அம்மன் வழிபாட்டில் குறிப்பாக, துர்க்கையம்மன் மீது தீராக்காதல் கொண்டவர்கள். அந்தவழியில் வந்த இவனும், அதற்குச் சளைத்தவர் இல்லை. தான் புதிதாக ஏற்படுத்திய தலைநகரைச் சுற்றிலும் துர்க்கையம்மனையே காவல் தெய்வமாக அமைத்து, அதனைப்போற்றி வணங்கவும் செய்தான். முதன்முதலாக அம்மனுக்கென தனியாக, கோயிலின் உட்புறத்திலேயே ஆலயம் அமைத்து துர்க்கையம்மனை வழிபட்டான். விசயாலயன், நிசம்பசுதனி என்று அழைக்கப்பட்ட அந்த அம்மனை வழிபட்டே எந்த ஒரு செயலையும் தொடங்கினான். அதில் பெரும் வெற்றியையும் கண்டான். அதன்படி, கலிங்கத்தை வென்றபோது அந்நாட்டு துர்க்கையான மகிஷாசுரமர்த்தினி சிற்பம் இவனது கவனத்தை ஈர்த்தது எனலாம். அதன்விளைவே, கங்கைகொண்ட சோழீஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றி அமைத்த அம்மன் ஆலயங்கள்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு பெரிய அரண்மனையைக் கட்டி ஆட்சிபுரிந்துள்ளனர். எனவே, இன்றும் பழைய பெயர்களிலேயே அப்பகுதிகள் அழைக்கப்பட்டு வருகின்றன. மாளிகைமேடு, ஆயுதக்களம், கடாரங்கொண்டான், இடைக்கட்டு, மெய்க்காவல்புத்தூர், சுண்ணாம்புக்குழி, சின்ன மாளிகைமேடு எனப் பல பெயர்களை அங்கே காணலாம். கோட்டைமேடு பகுதியில், கோட்டையைச் சுற்றி அகழி போன்று சிறப்புமிக்க ஒரு சோழர் காலக் குடியிருப்பையும், அரண்மனைப் பகுதிகளையும், கோட்டைக் கொத்தளங்களையும், அதனைச் சுற்றி அமைந்துள்ள அகழி என அனைத்தையும் இன்றளவும் ஆங்காங்கே சிதைந்த நிலையில் காணமுடிகிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் வீற்றிருக்கும் மகிஷாசுரமர்த்தினி சிற்பம் (கலிங்கம்)
கங்கைகொண்ட சோழீஸ்வரத்தின் வெளிப்பகுதியில் வீற்றிருக்கும் கணக்குப்பிள்ளையார் (கலிங்கம்)
கல்வெட்டுகளில் சோழ மாளிகை
வீரராஜேந்திரன் கல்வெட்டில், 'சோழ கேரளன் திருமாளிகை' என்ற குறிப்பும், இரண்டு கோட்டை மதில்கள் இருந்ததற்கான, குறிப்பாக 'இராசேந்திர சோழன் மதில்', 'குலோத்துங்கச் சோழன் மதில்' எனவும் அறியமுடிகிறது. கலிங்கத்துப்பரணியில் 'கங்காபுரியின் மதிற்புறத்துக் கருதார் சிரம்போய் மிக வீழ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கல்வெட்டுகளும், இலக்கியங்களும் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாளிகை இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன. மாளிகையின் உட்பகுதியில் காணப்படும் மதில் சுவற்றை 'உட்படைவீட்டு மதில்' எனவும் குறித்துள்ளனர். இந்த இலக்கிய வரிகள் உண்மை என உணர்த்தவும், அதன் ஆதாரப்பூர்வமான சான்றுகளை வெளிக்கொணரவும், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை இங்கு அகன்ற பரப்பளவில் தொடர் அகழாய்வு மேற்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, அகன்ற பரப்பளவில் அதிக நாட்கள் அகழாய்வு மேற்கொண்ட இடம் என்றால் அது கங்கைகொண்ட சோழபுரம்தான்.
1980, 1981, 1985, 1987, 1990-91, 1996 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வுப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம், பல வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரப்பட்டது. முறையான, அறிவியல்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளாக மாளிகைமேடு, மண்மலை, குறுவாலப்பர் கோயில், கல்குளம், பொன்னேரி (சோழகங்கம்) மதகு, சின்ன மாளிகைமேடு போன்ற இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அகன்ற பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் புறத்தோற்றம்
இராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதிகளை வெளிக்கொணருவதில்தான் அதிக நேரம் செலவழிக்கப்பட்டு, பல அரிய வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டன. அரண்மனையின் ஒரு பகுதியை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் பணி மேற்கொள்ளப்பட்டது. முதன்முறை மேற்கொண்ட அகழ்வுக்குழியிலேயே, சோழ மாளிகையின் ஒரு பகுதி முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான அகழ்வுக்குழிகளில், சோழன் மாளிகைப் பகுதிகள் வெளிப்பட்டதுதான் இவ்வகழாய்வின் தனிச்சிறப்பாகும்.
மாளிகைமேடு
கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து தென்மேற்கில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உட்கோட்டை எனும் சிற்றூர் உள்ளது. உட்கோட்டை -குறுவாலப்பர் கோயில் என்ற இரண்டு கிராமங்களையும் இணைக்கும் பகுதியில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மாளிகைமேடு அமைந்துள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகன்றமுறை அகழாய்வில், 24 அகழ்வுக்குழிகள் தோண்டப்பட்டன.
காரைப்பூச்சு மற்றும் கருங்கல் பொருத்தப்பட்ட நிலையில் வெளிப்படுத்தப்பட்ட தரைப்பகுதியுடன் இணைந்த சுவர்ப் பகுதி
இங்குதான், 1.10 மீட்டர் தடிமனில் செங்கற்சுவர் கண்டறியப்பட்டது. இச்சுவர், மேற்பரப்பில் சுண்ணாம்பு காறைப் பூச்சுகொடுக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேல் பகுதியில் காணப்பட்ட காரைப்பூச்சு, 4 அடுக்குகளைக் கொண்டு ஒன்றன் மீது ஒன்றாகப் பூசப்பட்ட நிலையைக் காணமுடிந்தது. அகழாய்வின்போது, காரைப்பூச்சுகளை வெளிக்கொணரும் பொறுப்பு பெரும்பாலும் அகழாய்வாளர்களையே சாரும். அவ்வாறு இல்லாவிடில், காலம் போற்றும் வரலாற்றுச் சிறப்புகொண்ட 1000 ஆண்டுகள் பழமையான சோழன் மாளிகையின் தரைப்பகுதியை வெளிக்கொணருவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. கையில் கத்தியும் துடைப்பானும் கொண்டு, அகழாய்வாளர்களாலேயே கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் வெளிப்படுத்தப்பட்டதுதான் காரைப்பூச்சுடன் கூடிய இந்தக் கட்டடப் பகுதிகள் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.