ஆண்டிப்பட்டி
அமைவிடம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் ஆண்டிப்பட்டி எனும் சிற்றூர் அமைந்துள்ளது. மலைபடுகடாம் என்னும் நூலில் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் எனும் புலவர், ஆண்டிப்பட்டிக்கு அருகில் அமைந்துள்ள சங்ககாலச் சிறப்பு பெற்ற செங்கம் எனும் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த நன்னன் என்ற சிற்றரசனைப் பற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.
சங்க இலக்கியம் வழி பல நன்னன் மரபினரைப் பற்றி அறிய முடிகிறது. இந்தச் செங்கத்து நன்னன், ‘நன்னன் சேய் நன்னன்’ எனக் குறிப்பிடுகின்றான்.
கல்வெட்டுகளில், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மா என்றும் செங்கைமா என்றும் இந்த ஊர் வழங்கப்பட்டுள்ளது. தொண்டை நாட்டில் இருந்த 24 கோட்டங்களில் இந்தப் பல்குன்றக் கோட்டமும் ஒன்று. சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பல நடுகற்கள், செங்கம் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. செங்கம் நகரில் அமைந்த ரிஷபேசுவரர் கோயில் பாடல் கல்வெட்டில், பத்துப்பாட்டுத் தொகுதியில் இடம்பெறும் நன்னனைக் குறித்த மலைபடுகடாம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
“மூவண்டறை தார்மன்னர் மலைபடைத் தென்மன்னரை
வேண்கண்ட திறற் காங்கேமன் கண்சிவப்ப பண்டே
மலைகடாம் பாட்டுண்ட மால்வரை செஞ்சொரி
அலைகடாம் பாட்டுண்டது”.
இவ்வாறு, இலக்கியங்கள் புகழும் சிறப்புகள் கொண்ட செங்கம் எனும் நகருக்கு அருகில் அமைந்துள்ளதுதான் ஆண்டிப்பட்டி எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்.
அகழாய்வுக்கான நோக்கம்
1968-ம் ஆண்டு, 143 ஈயக்காசுகள் அடங்கிய புதையல் ஒன்று இங்கு கண்டெடுக்கப்பட்டது. அக்காசுகள் அனைத்தும் அச்சுகளில் வார்க்கப்பட்ட அச்சு குத்திய காசுகள் ஆகும். (Punch Marked Coins). காசின் முன்பக்கம் இணைகோடுகளும், இருபுறமும் இரண்டு வட்டங்களும் உள்ளன. இவை சூரியன் - சந்திரனைக் குறிக்கலாம் என்பர். காசின் விளிம்பில் தமிழி எழுத்துகள் காணப்படுகின்றன. 13 எழுத்துகள் வரிசையாக உள்ளன. அவற்றில் அதினன், எதிரான் சேந்தன் என பொறிக்கப்பட்டள்ளதாகப் பல அறிஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பின்புறத்தில் மூன்று முகடுகள், இரண்டு குன்றுகள் உள்ளன. இடையே இரண்டு வளைகோடுகள் உள்ளன. இவை நதியைக் குறிக்கலாம். இதன் காலத்தை பொ.ஆ. 2 - 3-ம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனர்.
தமிழகத்தில் கண்டறியப்பட்ட சங்க காலக் காசுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றவை இக்காசுகள். எனவே, இப்பகுதி ஒரு வணிக நகரமாகத் திகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதுடன், இங்கு அயல்நாட்டினர் வருகை புரிந்துள்ளனரா என்பதையும், இவ்வூரின் தொன்மை வரலாற்றை அறியவும் இங்கு அகழாய்வு தேவை என்பதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு இங்கு அகழாய்வு மேற்கொள்ள திட்டமிட்டது.
அகழாய்வு
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, 2005 - 2006-ல் இங்கு அகழாய்வு மேற்கொண்டது. இங்கு 12 அகழ்வுக்கழிகள் போடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அகழாய்வில் காணப்பட்ட தொல்பொருட்கள்
சுடுமண் பொருட்கள், மணிகள், வளையல் துண்டுகள், இரும்புப் பொருட்கள், எலும்புகள், குறியீட்டுப் பானை ஓடுகள், மான் கொம்புகள், ரோமானியர் பானை ஓடுகள், அரிடைன் ஓடுகள், தமிழி எழுத்துப் பொறித்த மட்கலன்கள், புதிய கற்கால ஆயுதங்கள், தாய் தெய்வ உருவங்கள், தக்களிகள், கெண்டி மூக்குகள், சதுரங்கக் காய்கள், சங்க காலக் கூரை ஓடுகள், ஊதுகுழாய்கள், காதணிகள், பல்வேறுவிதமான மணிகள், சங்கு வளையல்கள் போன்ற பல தொல்பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன.
அகழாய்வு உணர்த்தும் செய்தி
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, தொடர்ந்து வரலாற்றுக் காலம் மற்றும் விஜயநகரப் பேரரசு காலம் வரை ஒரு தொடர் வரலாற்றைக் கொண்ட சிறப்புபெற்ற ஊராக ஆண்டிப்பட்டி திகழ்ந்துள்ளதை இந்த அகழாய்வு வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இது ஒரு வணிக நகரமாகவும் திகழ்ந்துள்ளது. ரோமானியர்கள் உட்பட பிற அயல்நாட்டினரும் வருகைபுரிந்த இடமாகத் திகழ்ந்துள்ளது என்பதையும், இங்குள்ள மக்கள் வரலாற்றுக் காலத்தில் எழுத்தறிவு பெற்றவர்களாகவும் திகழ்ந்துள்ளனர் என்பதும், இங்கு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட தொல் பொருட்கள் நமக்கு தெரிவிக்கின்றன. எழுத்துப் பொறித்த மட்கலன்கள், கீறல் குறியீடுகள் போன்றவை, இவற்றை தெளிவுபடுத்துகின்றன எனலாம்.
பண்டைய தமிழக வரலாற்றை, குறிப்பாக சங்க கால வரலாற்றை அறிய அக்காலத்திய இலக்கியங்களே சான்றுகளாக இருந்து வந்துள்ள நிலையில், அந்த இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள ஊர்களில் அகழாய்வு செய்வதன் மூலம், அக்காலகட்டத்தைச் சேர்ந்த மக்களின் பண்பாட்டுக்கூறுகளை, வாழ்க்கை நிலையை அறியமுடிகிறது. ஆண்டிப்பட்டி அகழாய்வில் மட்டும் சுமார் 655 தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருட்களின் அடிப்படையில், இப்பகுதி மக்கள் பெருங் கற்காலம் முதல் (Megalithic Period) பொ.ஆ. 12-ம் நாற்றாண்டு வரை வாழ்ந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது. அக்கால மக்களின் உணவுமுறை, உறைவிடம், பொழுதுபோக்கு, சமூக நிலை, பொருளாதார நிலை, தொழில்கள், அணிகலன்கள் அயல்நாட்டினரோடு கொண்ட வணிகத் தொடர்பு, சமய நிலைகள் அனைத்தையும் அறிய முடிகிறது.
இது, அதிக நீர்வளம் இல்லாத வறட்சியான பகுதியாகும். காடுகளை ஒட்டி இருப்பதாலும், அக்கால மக்கள் பெரும்பாலும் புன்செய்ப் பயிர்களான கேழ்வரகு, சோளம், கம்பு போன்றவற்றையே பயிர் செய்து, அவற்றையே உணவாகக் கொண்டிருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. இவர்களது உறைவிடமாகக் குறிப்பிடும்படியான கட்டடப் பகுதிகளோ, பண்டைய அதாவது சங்க காலச் செங்கற்களோ ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும், சங்க காலக் கூரை ஓடுகள் அதாவது பள்ளம் பதித்த பல ஓடுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இவை, அவர்கள் வாழ்ந்த உறைவிடத்தின் மேல் பகுதியில் வேயப்பட்ட கூரை ஓடுகளே (Grooved Tiles) ஆகும்.
சங்க காலக் கூரை ஓடுகள்
ஆண்டிப்பட்டி மக்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும் என்பதை இங்கு கிடைத்த தங்க மோதிரம், தங்க இலை போன்ற தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் உணர்த்துகின்றன.
தங்கத்தால் ஆன தொல்பொருட்கள்
ரோமானியருடன் வணிகத் தொடர்பு செழித்திருந்துள்ளது, தொழிற்கூடங்கள் பல இப்பகுதியில் இருந்துள்ளன என்பதற்கு இங்கு கிடைத்த சுடுமண் பாவைகளும், மணிகளும், இரும்புப் பொருட்களுமே சான்றாகும்.
சுடுமண் பொருட்கள்
சுடுமண் கலை இப்பகுதியில் உன்னதமான நிலையில் இருந்திருந்ததை அறியமுடிகிறது. களிமண்ணைக் கொண்டு தேவையான பொருட்களைச் செய்து சூளையிலிட்டு கெட்டிப்படுத்திய பின்பு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருட்கள் தெரிவிக்கின்றன. இக்கால கட்டத்தில், தாய் தெய்வ உருவங்கள், மனித உருவங்கள் ஆகியவற்றோடு, மிகவும் சிறப்பானதாகக் காட்டப்பட்டுள்ள வட்ட வடிவிலான முக அமைதியுடன் மனிதனின் உருவம் பதித்த கேடயம் ஒன்றை ஏந்திய கையொன்றின் பகுதியும் கிடைத்தள்ளதைக் குறிப்பிடலாம்.
வட்டமான முகம் பதியப்பட்ட கேடயம் போன்ற அமைப்பு கொண்ட சுடுமண் பொருள்
மேலும், இவை எல்லாவற்றுக்கும் சிறப்பு சேர்ப்பதுபோல் அமைந்த, ஒரு குவளையின் அடிப்பகுதியில் யானைகள் வரிசையாக அணிவகுத்துச் செல்வதுபோல் வடிக்கப்பட்டுள்ள ஒன்றைக் குறிப்பிடலாம். இது மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. இந்த யானைகள் அணிவகுக்கும் காட்சியானது, புத்த சாதகக் கதைச் சிற்பங்களை நமக்கு நினைவூட்டுகிறது.
சுடுமண் குவளையில் யானையின் அணிவரிசை
சமய வழிபாடுகளும் தாய்தெய்வ வழிபாடும்
ஆண்டிப்பட்டி அகழாய்வின் வாயிலாக, அக்கால மக்களின் சமய நிலையையும், அவர்களின் நம்பிக்கைகளும், பெரிய அளவில் இல்லாவிடினும், ஓரளவு சுடுமண் பொருட்களைக் கொண்டு யூகித்து உணர வழிவகுக்கிறது. அகழாய்வில் இரண்டு தாய் தெய்வ உருவங்களும், துர்க்கையின் உருவமும், காளை மாட்டின் உருவமும் கிடைத்துள்ளன. தாய் தெய்வ உருவங்கள், இம்மக்களின் அன்னை வழிபாட்டை போற்றுவதாகவே உள்ளன. தாய் தெய்வ வழிபாடு நமது பண்டைய மரபு சார்ந்த வழிபாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகும்.
பெண் தெய்வமே முதற்கடவுள் என்றும், வளமையை அடிப்படையாகக் கொண்டவளே பெண்; எனவே, அவளே பெண் தெய்வம் என்றும் இயற்கைக்குப் பின்னர் இனத்தை விருத்தி செய்யும் இவளே கடவுள் என்றும், சூரியன், சந்திரன், மழை, இடி, மின்னல், அடுத்து பெண் என்று இவ்வாறு வரிசைப்படுத்தினர் என்பர். எனவே, இங்கு அகழாய்வில் சேகரிக்கப்பட்ட சுடுமண் பாவைகளும், பெண் தெய்வ வழிபாட்டின் எச்சங்களே என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை. துர்க்கை வழிபாடு இருந்துள்ளதையும் இங்கு கிடைத்த சுடுமண் உருவமும், அதன் கைகளில் உள்ள ஆயுதங்களைக் கொண்டும் உணரமுடிகிறது. சுடுமண் காளை மாட்டு உருவம், மிகவும் சிறப்புபெற்ற தொல்பொருளாகும். இச்சுடுமண் காளை மாட்டு உருவத்தின் வயிற்றுப் பகுதியில், சாம்பலுடன் எலுப்புகளும் காணப்பட்டது. இவை பெருங் கற்கால மக்களின், இறந்தபின்னும் மனிதன் வாழ்கின்றான் என்ற கருத்தின் அடிப்படையைக் கொண்ட ஈமப்பேழையாகவும் இருக்கலாம் அல்லது இறந்தவர்களை வழிபடும் வழக்கமாகவும் இருக்கலாம்.
இவ்வாறு, பல்வேறு சமயச் சடங்குகளையும், வளமைச் சடங்குகளையும் போற்றி வாழ்ந்த தமிழகம், சங்க காலத்தில் தங்களது வாழ்க்கை முறையில் சிறிதளவும் பிசகாமல் செம்மையாகவும், செழிப்பாகவும் தங்களது வாழ்வியலை அமைத்துக்கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த அகழாய்வுச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.
***
தேரிருவேலி
அமைவிடமும் அகழாய்வின் நோக்கமும்
1999 - 2000-ம் ஆண்டு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, ராமநாதபுரம் - முதுகுளத்தூர் சாலையில், ராமநாதபுரத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேரிருவேலி என்ற கிராமத்தில் மேற்பரப்பு ஆய்வு செய்தது. அப்போது சேகரிக்கப்பட்ட தொல்பொருட்களின் அடிப்படையில், இங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஊர், குண்டாறு கால்வாய்க் கரையில் அமைந்துள்ளது. தொல்லியல் தடயங்களில் பெரும்பாலானவை அந்த கால்வாய்க் கரையில்தான் சேகரிக்கப்பட்டன. இங்கு அமைந்துள்ள காலனித்திடல் என்ற பகுதியிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஊரில் இருந்து சுமார் 10 கி.மீ. தெலைவில் மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற ஸ்தலமாகிய உத்திரகோசமங்கை எனும் சிறப்புபெற்ற ஊர் அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டியர்களாலும், பின்னர் சேதுபதி மன்னர்களாலும் போற்றப்பட்ட ஒன்று. இப்பகுதி வரலாற்றை முழுமையாக அறிதல் பொருட்டு இங்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் ஏழு அகழ்வுக் குழிகள் போடப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொல்பொருட்கள்
தமிழி எழுத்துப் பொறித்த மட்கலன்கள், கெண்டி மூக்குப் பகுதிகள், மணிகள், சங்கு வளையல்கள், ரௌலட்டட், ஆம்போரா மட்கலன்கள் மற்றும் கருப்பு சிவப்பு மட்கலன்கள் போன்றவை கிடைக்கப்பெற்றன. அழகரை, திருக்காம்புலியூர், உறையூர் போன்ற அகழ்வாய்வுகளில் காணப்பட்ட தடயங்களைப் போன்றே தேரிருவேலியில் காணப்படும் தொல்பொருட்கள் அமைந்திருக்கின்றன.
அகழாய்வுச் செய்திகள்
இங்கு தமிழி எழுத்துப் பொறித்த மட்கலன்கள் கிடைத்துள்ளன. இது வரலாற்றின் தொடக்க காலம் என்பதை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. இம்பட்கலன்களில் காணப்படும் ‘நெடுங்கிள்ளி’ என்ற வாசகம் மிகவும் சிறப்புக்குரியதாக அமைந்துள்ளது. இங்கு நெசவுத் தொழிலும், இரும்பு உருக்கு உலைகளும், மணிகள் தயாரிக்கும் தொழில்களும் சிறந்தோங்கி இருந்தன எனலாம். இவற்றுடன் மீன்பிடித்தலும், மட்கலன்கள் வனைதலும் சங்க காலத் தொழில்களில் இன்றியமையாதவையும் இங்கு இருந்துள்ளன. அகழ்வுக்குழிகளில் ஒன்றில் மட்டும் நுண் கற்கருவிகள் இரண்டு கிடைத்துள்ளன. இவை, நுண் கற்கருவிக் கால மக்களின் தொடர்பும் இங்கு தென்படுவதை சுட்டுகின்றதே தவிர, நுண் கற்கருவிக்கால மக்கள் இங்கு வாழ்ந்ததற்கான தடயங்கள் ஏதும் தென்படவில்லை என்றே குறிப்பிடலாம்.
‘நெடுங்கிள்ளி’ எழுத்துப்பொறித்த மட்கலன் ஓடு
ஆறு மட்கலன்களில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு மிகவும் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. ‘கொற்ற’ மற்றும் ‘நெடுங்கிள்ளி’. முதன்முறையாக, ஒரு சோழ அரசன் பெயர் பொறித்த மட்கலன், தமிழகத்தில் அகழாய்வில் மண்ணடுக்கிலேயே கிடைத்துள்ளது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியதாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் குறிப்பிடப்படும் நெடுங்கிள்ளி, வரலாற்றுக்குச் சிறப்பு சேர்ப்பதாகும். இதன் காலத்தை பொ.ஆ. 100 முதல் 300 வரை குறிப்பர்.
***
தலைச்செங்காடு
அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டத்தில், பூம்புகார் எனும் பழமையான ஊர் அமைந்துள்ளது. இது சீர்காழியில் இருந்த 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. சங்க இலக்கியங்களிலும் சங்க காலத்திலும் மிகவும் போற்றப்பட்ட ஊர். சிலப்பதிகாரம் எனும் காவியம் படைத்த ஊர். சங்க காலச் சோழர்களின் துறைமுகப்பட்டினம். உலக நாடுகளில் இருந்தும் மக்கள் இப்பகுதிக்கு கடல்வழியாக வந்து தங்கி வணிகம் புரிந்துள்ளனர். இவ்வூரின் ஒரு பகுதியாகத் திகழ்ந்ததுதான் தலைச்செங்காடு எனும் ஊர். பண்டைய காவிரிப்பூம்பட்டினம், பல பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்ந்த பூமி. இந்தப் பகுதியில் காணப்பட்ட சம்பாபதி அம்மன் உள்ள பகுதியை சம்பாபதி வனம் என்று அழைத்தனர். அதைப்போன்று, தலைச்செங்காடும் ஒரு பகுதியாக அமைந்ததாகும்.
அகழாய்வு
தலைச்செங்காட்டுப் பகுதியில் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வில் சங்கு வளையல்களும், சங்க காலப் பானை ஓடுகளும், பழமையான செங்கல் துண்டுகளும், அறுத்த சங்குத் துண்டுகளும் காணப்பட்டன. அதன் அடிப்படையில், அவ்வூரின் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இரண்டு அகழ்வுக்குழிகள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு இரண்டு அகழ்வுக்குழிகளுடன் மூன்று மாதிரி அகழ்வுக்குழிகளும் போடப்பட்டன. இங்கு மூன்று மண்ணடுக்குகள்; 2.05 மீ ஆழத்தில் கிடைத்தன. இதன்மூலம், இங்கு மூன்று காலகட்டத்தைச் சார்ந்த பண்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.
பண்பாட்டுக் காலம்
1. பொ.ஆ. 3000 முதல் 100 வரை
2. பொ.ஆ. 100 முதல் பொ.ஆ. 600 வரை
3. பொ.ஆ. 600 முதல் பொ.ஆ. 1200 வரை
தொல்பொருட்கள்
கல் சிற்பங்கள், சங்குகள், செங்கற்கள், சுதை சிற்பங்கள், மட்கலன் ஓடுகள். சுடுமண் கூரை ஓடுகள், கண்ணாடித் துண்டுகள், மணிகள், அகல் விளக்குகள், வட்டவடிவ சில்லுகள் ஆகியவை கிடைக்கப்பெற்றன.
அகழாய்வின் சிறப்பு
அகழாய்வில், இரண்டாவது அகழ்வுக்குழியில் சுமார் 1.25 மீ. நீளமுள்ள கற்களைக் கொண்டு கட்டப்பட்ட காரைப்பூச்சு கொண்டு பூசப்பட்ட அடித்தளம் கண்டறியப்பட்டது. இதன் கட்டுமான அமைப்பை நோக்கும்பொழுது, இது ஒரு கோயிலின் அடித்தளமாக இருக்க வேண்டும் எனக் கருத இடமளிக்கிறது.
அகழ்வுக்குழியில் காணப்படும் மூன்று மண்ணடுக்குகளை ஒப்பிட்டுப் பாக்கும்பொழுது இக்கருத்து உறுதிபெறுகிறது. முதல் மண்ணடுக்கில் கருங்கற்களை இடுக்கி, காரைப்பூச்சு கொண்டு கற்களை இணைத்து அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு மேற்காக 1.25 மீ தடித்துச் செல்கிறது. கருங்கல் அடித்தளத்துக்குக் கீழ் 90 செ.மீ. தடிப்புள்ள மண்ணடுக்கு, முழுவதும் மணல்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவை, அடித்தளத்தின் உறுதித்தன்மைக்கும், குளிர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பது கட்டுமான அமைப்பின் கருத்தாகும்.
மூன்றாவது மண்ணடுக்கில், சுமார் 2.60 மீ. ஆழத்தில் மண் கடினமாகவும் செம்பழுப்பு நிறமாகவும் காணப்படுகின்றது. இவை அனைத்தும், கோயில் ஒன்று இருந்து அழிந்துபட்டுள்ளதையே நினைவூட்டுகிறது.
அகழாய்வின் கருத்து
தமிழகத்தில் பெரும்பாலும், சோழர்கள் காலத்தில் பல்வேறு கலைப்பாணிகளைக் கொண்டு அழகிய கலைச்சிறப்பு வாய்ந்த பல்வேறுவிதமான கோயில்களை எடுப்பித்துள்ளனர். அவ்வாறு எடுப்பித்த கோயில்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்றும் கருத இடமளிக்கிறது. இங்குள்ள கல் சிற்பங்களை, இப்பகுதியில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இதன் காலத்தை நோக்கும்போது, பொ.ஆ. 8 - 9-ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று அறிய முடிகிறது. சங்க காலம் முதல் சிறப்பு வாய்ந்த தலைச்செங்காட்டிலும் ஒரு பழமையான கோயில் இருந்த அழிந்துபட்டிருக்கலாம் என்ற கருத்தை அறியமுடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.