
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள தைக்கால் கிராமம் பிரம்புத் தொழிலுக்கு பெயர் சொல்லும் இடமாக விளங்குகிறது.
சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தைக்கால். தமிழகத்தில் பிரம்பு பொருட்களுக்கு பெயர்பெற்ற இந்த தைக்கால் பகுதியைக் கடந்து செல்பவர்கள், சாலையோரக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிரம்பினால் செய்யப்பட்ட கலைநயமிக்க பொருட்களைக் கண்டு பிரமிப்பதில் வியப்பேதுமில்லை.
தைக்கால் பகுதியில் நுழைந்தாலே ஏதோ பிரம்பு உலகத்தில் நுழைந்த உணர்வு ஏற்படும். அந்தளவிற்கு பிரம்புப் பொருள்கள் மனதைக் கொள்ளை கொள்ளும். தைக்கால், துளசேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பிரம்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 ஆயிரம் பேர் வாழ்வாதாரம் பெறுகின்றனர். அதிலும், குறிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒருவராவது பிரம்புத் தொழிலில் ஈடுபடுவது வழக்கம்.
பிரம்புகளைக் கொண்டு செய்யப்படும் ஊஞ்சல், நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள், குழந்தை நாற்காலிகள், குழந்தைகளுக்கான சாய்வு நாற்காலி, உணவருந்தும் மேசைகள், அதற்குரிய நாற்காலிகள், கூடைகள், அலமாரிகள், சோபா ஷெட், டீபாய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் இப்பகுதியில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
தைக்கால் பகுதியில் தயாராகும் பிரம்புப்பொருள்கள் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெகிழிகளால் செய்யப்பட்ட இருக்கைகளில் அமர்வதால் உடல் உஷ்ணம் ஏற்படும். ஆனால், பிரம்பினாலான நாற்காலிகள், ஊஞ்சல் ஆகியன உடலுக்கு குளிச்சியை ஏற்படுத்தி, முதுகுவலிக்கு நிவாரணியாக விளங்குவதால் பலரும் இதனை விரும்பி வாங்குவதாக பிரம்பு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரம்புத் தொழிலின் மூலப் பொருளான பிரம்பை அஸ்ஸாம், ஒடிஸா, மலேசியா ஆகிய பகுதிகளிலிருந்து வாங்குகின்றனர். பின்னர், பிரம்புகளை தண்ணீரில் ஊறவைத்து, லாவகமாக நெருப்பில் சுட்டு, தேவைக்கு ஏற்ப வளைத்து, பொருட்களைத் தயாரிக்கின்றனர்.
இந்த பிரம்பு பொருள்கள் அதன் வடிவமைப்பிற்கு ஏற்ப ரூ.600-இலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஊஞ்சல்கள் ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரையிலும், சோபா ஷெட் ரூ.20 ஆயிரம் வரையிலும் பூஜை பொருட்கள் ரூ.180 முதல் ரூ.500 வரையிலும் வகைவகையாக விற்பனை செய்யப்படுகின்றன.
பிரம்புத்தொழிலில் பெருமளவு முதலீடு தேவைப்படுவதால், அனைவராலும் எளிதாக இத்தொழிலைத் தொடங்க முடிவதில்லை. இதனால் பலர் கூலித் தொழிலாளர்களாகவே இத்தொழிலில் தொடர்கின்றனர். அவர்களுக்கு கூலியும் மிகக்குறைவு. இதனால் பலர் மாற்றுத்தொழில் தேடி வெளியூர்களுக்கு சென்றுவிடுவதால், இத்தொழில் படிப்படியாக நலிவடைந்துவருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெருமுதலாளிகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் முன்புபோல் லாபம் பார்க்க முடிவதில்லை என பிரம்பு பொருள் தொழில் செய்வோர் புலம்புகின்றனர்.
இதுகுறித்து தைக்கால் பகுதியைச் சேர்ந்த பிரம்புத் தொழில் வியாபாரி முகம்மதுஅப்பாஸ் கூறியதாவது:
தமிழகத்திலேயே தைக்கால் பகுதியில் மட்டும்தான் மிகக் குறைந்த விலையில் பிரம்பு கலைப் பொருட்களை வாங்க முடிகிறது. குழந்தைகள் ஆடும் தொட்டில் முதல் இஸ்லாமியர்கள் இறந்தவர்களை சுமந்து செல்லும் சவப்பெட்டி வரை அனைத்துமே பிரம்பினால் தரமாக செய்து தரப்படுகிறது. ஜிஎஸ்டி காரணமாக மூலப்பொருட்களான பிரம்பு, ஆணி, வார்னீஷ், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. எனவே, பிரம்பு பொருட்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும். பிரம்புகளை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும்.
அதேபோல் பிரம்புத்தொழிலுக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுத்தால், பிரம்புத்தொழில் மென்மேலும் வளர்ச்சி பெறும் என்றார் அவர்.
புகழ்பெற்ற பிரம்பு பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற கடந்த காலத்தில் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் புவிசார் குறியீடு கிடைத்தால் தைக்கால் பிரம்புத்தொழில் மேலும் சிறப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.
எம். ஞானவேல், சீர்காழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.