தற்போது பெருகி வரும் புதிய புதிய நோய்களுக்கும், உடல்நல பாதிப்புகளுக்கும் ரசாயன கலப்புள்ள உணவுப் பொருள்களை உட்கொள்வது முக்கிய காரணமாக உள்ளது. நஞ்சில்லா உணவை உண்ண வேண்டுமென்ற எண்ணம் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமும் நுகர்வோரிடமும் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்கான வழிமுறைகளும் செயல் திட்டங்களும் விவசாயிகளை இன்னமும் சென்றடையவில்லை. ரசாயன இடுபொருள்களைப் பயன்படுத்தி தங்கள் நிலங்களை தாங்களே மலடாக்கிக்கொள்ளும் அவலநிலையை கைவிட விவசாயிகள் பலர் நினைத்தாலும், அதற்கான வழிமுறைகள் தெரியாததால் வேறு வழியில்லாமல் மீண்டும் அதே ரசாயன விவசாயமுறையை தொடர்கின்றனர்.
உற்பத்திச் செலவை குறைப்பது எப்படி என்பதைப் பார்க்காமல், நல்ல விலை கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் மட்டுமே விவசாயிகளிடம் பொதுவாகக் காணப்படுகிறது. அதிக விலை நிர்ணயம் கிடைக்க வேண்டும் என நினைப்பதற்கு பதிலாக, குறைந்த செலவில் உற்பத்தி அளவை அதிகரிப்பது எப்படி என்று கணக்கிட்டாலே, அது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் என இருவருக்குமே பலனளிப்பதாய் இருக்கும். இதற்கு இயற்கை விவசாய முறைகள் மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றன.
நஞ்சில்லா உணவை வழங்குவதோடு, உற்பத்தியாளர்களுக்கும் கணிசமான லாபத்தை ஈட்டித் தருவதாக இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்வோர் பெருமிதத்தோடு தெரிவிக்கின்றனர். இயற்கை முறையில் விவசாயத்தை பிரதானமாகக் கொண்டு இயங்கி வருகிறது தாய்மண் பாரம்பரிய வேளாண் சார் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் பணிகள் குறித்து அதன் தலைவர் ஜி. வரதராஜன் கூறியது: தாய்மண் நிறுவனம் தனிநபர் நிறுவனமல்ல. ஆயிரம் பேர் கூட்டாக இணைந்து தலா ரூ.1000 வழங்கி கூட்டுறவு முறையில் நடத்தப்படும் விவசாய நிறுவனம் ஆகும். இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, திருவாரூர் மாவட்டம், பருத்தியூரில் 10 ஏக்கரில், 10 பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
பொதுவாக, பாரம்பரிய ரக விதைகளை அரசு வழங்குவதில்லை. இதனால், பாரம்பரிய ரகங்களை மீட்டுருவாக்கம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதனாலேயே, 10 பாரம்பரிய விதைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, வெள்ளைப் பொன்னி, இலுப்பைப்பூ சம்பா, சொர்ண மசூரி, கருங்குறுவை, சீரகச் சம்பா, காட்டுயாணம், குழியடிச்சான், குன்னத்தார் உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த ரகங்கள் அனைத்துமே வெவ்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. அதாவது, கருப்பு கவுனி புற்றுநோயை தடுப்பதற்கான மருந்தாக செயல்படும். மாப்பிள்ளை சம்பா, இளைஞர்களுக்கு சக்தியை கொடுக்கக் கூடியது. கருங்குறுவை இந்திய வயாக்ரா என சித்த மருத்துவத்தில் அழைக்கப்படும் சிறப்பு பெற்றது. இலுப்பைப்பூ சம்பா மூட்டுவலிக்கு உகந்தது. தூயமல்லி உள் உறுப்புகளை சுத்தம் செய்து அழகு பெற வைக்கக்கூடியது. இவ்வாறு ஒவ்வொரு ரகங்களுமே, சில வகை நோய்களை வராமல் தடுப்பதற்கான, மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன.
இதுதவிர, பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சு விரட்டி, அமுத கரைசல் உள்ளிட்ட இடுபொருள்களை வழங்குவதோடு, அவற்றை உருவாக்குவதற்கான பயிற்சிக் கூடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகம் உதவி செய்து வருகிறது. அத்துடன், நபார்டு உள்ளிட்ட வங்கிகள் கடன் கொடுப்பதோடு, வெளிமாநிலங்களில் விற்பனை அரங்குகள் அமைக்கவும் உதவியாக உள்ளன. பொதுவாக, இயற்கை முறையில் சாகுபடி செய்வோருக்கு விதை கிடைப்பது மிகவும் சிக்கலாக உள்ள நிலையில், இங்கு வந்து மொத்தமாக விதை நெல்களை விவசாயிகள் பெற்றுச் செல்லலாம். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் மூலம் நாங்கள் அதை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.
இயற்கை முறையிலான விவசாயத்துக்கு அண்மை காலமாக வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஆனால், இயற்கை விவசாயத்துக்கு சந்தைப்படுத்துதல் குறித்த புரிதல் விவசாயிகளிடம் இல்லாததாலேயே, கிராமப்புறத்தில் பரம்பரையாக விவசாயம் செய்யும் பலர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு உற்ற துணையாக தாய்மண் பாரம்பரிய வேளாண் சார் நிறுவனம் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சி. ராஜசேகரன், திருவாரூர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.